ஓமன் காயல் நல மன்றத்தின் செயற்குழுவில், உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி ஆகியவற்றுக்கு நன்கொடையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-
16.12.2011 அன்று நடைபெற்ற ஓமன் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் அம்மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளைக் கொண்ட அம்மன்றத்தின் முதலாவது செயற்குழுக் கூட்டம் 25.05.2012 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு, மன்றத் தலைவர் பி.எம்.டி.அப்துல் காதிர் என்ற அப்துல் காதிர் பாதுல் அஸ்ஹப் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர்நலன் குறித்து உறுப்பினர்கள் நீண்ட நேரம் கருத்துப் பரிமாற்றம் செய்தனர். நிறைவில், இதுநாள் வரை மன்றத்தின் தலைவராக இருந்து, பணியிட மாற்றம் காரணமாக விடைபெற்றுச் செல்லும் - மன்றத்தின் பழைய தலைவர் அலீ அபூபக்கருக்கு நன்றி தெரிவித்தும்,
உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு ரூபாய் 20,000 தொகையும், மாற்றுத் திறனாளிகளுக்காக இயங்கி வரும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு ரூபாய் 10,000 தொகையும் நன்கொடையாக அளிக்க தீர்மானிக்கப்பட்டது. |