இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்குச் சொந்தமான புதிய அலுவலகக் கட்டிடத்தில், அக்கட்சியின் நகர கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்குச் சொந்தமான அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா கண்ட பிறகு, முதலாவது கலந்தாலோசனைக் கூட்டம் 26.05.2012 சனிக்கிழமை இரவு 08.00 மணிக்கு நடைபெற்றது.
முஸ்லிம் லீக் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். எஸ்.எம்.தைக்கா உமர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஆசிரியர் மு.அப்துல் ரசாக், எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.கே.ஸாலிஹ், ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத், ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, அரபி ஷாஹுல் ஹமீத், மொகுதூம் முஹம்மத், ஜே.உமர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
புதிய கட்டிடத்தில் முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகளை நடத்துவது தமக்கு மனமகிழ்ச்சியையும், புது உத்வேகத்தையும் அளிப்பதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கட்டிட வரசு-செலவு கணக்கறிக்கை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்குச் சொந்தமாக, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் புதிதாக வாங்கி திறக்கப்பட்ட அலுவலகக் கட்டிடம் மற்றும் காயல்பட்டினம் சீதக்காதி நகரில் உள்ள நகர முஸ்லிம் லீகிற்குச் சொந்தமான சொத்து விற்றது குறித்த வரவு-செலவு கணக்கறிக்கை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இறுதி வடிவம் செய்யப்பட்ட புதிய கணக்குகளைப் பராமரிக்க, இனி நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் அவர்களிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - மாநில பொதுச் செயலாளருக்கு நன்றி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு சொந்த அலுவலகக் கட்டிடம் வாங்க முழு ஊக்கமளித்து, செயல்திட்டம் வகுத்து சாத்தியமாக்கித் தந்த - கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3 - அலுவலக நிலுவைப் பணிகள்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு சொந்தமா அலுவலகக் கட்டிடத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டிய நிலுவைப் பணிகளை - போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்திட, கட்சியின் நகர தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 - அலுவலகத்தில் நூலகம் அமைத்தல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு சொந்தமா அலுவலகக் கட்டிடத்தை, தினசரி நாளிதழ்கள், வார-மாத இதழ்களைக் கொண்ட நூலகமாகவும் செயல்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - தொடர்வண்டி நிலைய நிலுவைப் பணிகள்:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, நகர முஸ்லிம் லீக் சார்பில், இன்று மாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நிலுவைப் பணிகள் இனியும் தாமதிக்கப்பட்டால், அடுத்தகட்ட போராட்டத்தை - பெருவாரியான அளவில் பொதுமக்களைத் திரட்டி, பெரிய அளவில் நடத்திடுவதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 6 - காயிதேமில்லத் பிறந்த தின நிகழ்ச்சி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனர் காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாயில் ஸாஹிப் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 05ஆம் தேதியை, கல்வி விழிப்புணர்வு தினமாகக் கொண்டாட கட்சி கொள்கை வகுத்துள்ளது.
அதனடிப்படையில், ஜூன் 05ஆம் தேதியன்று, கட்சியின் நகர மாணவரணி மற்றும் காயிதேமில்லத் பேரவை சார்பில், “கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியை” உள்ளரங்க நிகழ்ச்சியாக நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, அதற்கான ஏற்பாட்டுப் பணிகளைச் செய்திட, கட்சியின் காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் ஆகியோரிடம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக, எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன் நன்றி கூற, ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாநில - மாவட்ட - நகர நிர்வாகிகளும், நகர முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |