காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது - காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு.
இவ்வமைப்பின் சார்பில் வழமை போல இவ்வாண்டும், முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய தின விழா, காயிதேமில்லத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்களின் பிறந்தநாள் விழா, அமைப்பின் 23ஆம் ஆண்டு நிறைவு விழா ஆகியவை அடங்கிய முப்பெரும் விழா, 05.06.2012 அன்று, குத்பா பெரிய பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அதிகாலையில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, காயிதேமில்லத் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு, குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் துணை இமாம் மவ்லவீ என்.எம்.ஓ.முஹம்மத் அப்துல் காதிர் தலைமை தாங்கினார்.
மாலையில், அரங்க நிகழ்ச்சிகள் துவங்கின. காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளியின் முத்தவல்லி ஹாஜி எம்.கே.முஹ்யித்தின் அப்துல் காதிர் என்ற துரை காக்கா விழாவிற்குத் தலைமை தாங்கினார். குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் துணைச் செயலாளர் ஹாஜி ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், காயிதேமில்லத் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தின் தம்பி, ஹாஜி சாளை எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். முன்னாள் தலைவர் ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.டி.அமீர் சுல்தான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பொருளாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் வரவேற்புரையாற்றினார். மாணவர் கே.எம்.அப்துல் வதூத் இஸ்லாமிய இன்னிசை பாடினார்.
அதனைத் தொடர்ந்து, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சேவைச் சுருக்கத்தை, அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர், “உலகம் போற்றும் உத்தமர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்ற தலைப்பில், காயல்பட்டினம் குத்பா சிறிய பள்ளியின் இமாமும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.எம்.எம்.யாஸர் அரஃபாத் மஹ்ழரீ உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, “காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை வரலாறு” எனும் தலைப்பில் மஹ்ழரா அரபிக்கல்லூரி மற்றும் மத்ரஸத்துன் நஸூஹிய்யா நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ சிறப்புரையாற்றினார்.
பின்னர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு திருமறை குர்ஆன் பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டன. அதுபோல, இவ்வாண்டு அமைப்பின் சார்பில் சுன்னத் செய்வதற்காக விண்ணப்பித்த சிறுவர்களுக்கு சுன்னத் சீருடை வழங்கப்பட்டது. இப்பொருட்களை, மேடையில் வீற்றிருந்த நகரப் பிரமுகர்கள் தம் கரங்களால் வழங்கினர்.
அமைப்பின் சார்பில் வழமைபோல் வழங்கப்பட்டு வந்த பள்ளிப் பாடக்குறிப்பேடுகள் இலவச வினியோகம் - இவ்வாண்டு அரசே இலவசமாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்ட காரணத்தால், அமைப்பின் சார்பில் அவற்றை இவ்வாண்டு கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என மேடையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிறைவாக, அமைப்பின் தலைவர் ஹாஜி கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை நன்றி கூற, தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், குத்பா பெரிய பள்ளியின் இமாமும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீயின் துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இவ்விழாவில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, அமைப்பின் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
|