உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் புதிய தலைவராக ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 29.05.2012 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் 01.30 மணி வரை, இக்ராஃ துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களின் தலைமையில், காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலுள்ள அவர்களது வாவு நகர் இல்லத்தில் நடைபெற்றது.
துவக்கமாக, எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் - திருமறை குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார்.
உலக காயல் நல மன்றங்கள் தலைமையிலான இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகம், வருடாந்திர பொதுக்குழுவிற்கு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டமை, கூட்ட ஒழுங்குகள் ஆகியன குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-
சுழற்சிமுறை நிர்வாகம்:
உலக காயல் நல மன்றங்கள் பலவும், இதர நகர்நல அமைப்புகளும் - முன்னர் தனித்தனியே கல்வி உதவித்தொகையை மாணவ-மாணவியருக்கு வழங்கி வந்த நிலையில், அவற்றை ஒருமுகப்படுத்தி, முறைகேடுகளெதுவுமின்றி, உரிய மாணவர்களுக்குத் தேவையான கல்வி உதவித்தொகைகளை ஒரே கூட்டமைப்பின் கீழ் வழங்கிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தூண்டுதலின் பேரில் இக்ராஃ கல்விச் சங்கம் 2005ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
இக்ராஃவின் துவக்கத்திற்கு ஜித்தா காயல் நற்பணி மன்றம் காரணமாக இருந்த காரணத்தால், இக்ராஃ அதன் சார்பு அமைப்பே என இதர மன்றத்தினர் பலரும் கருதிய நிலையில், அம்மன்றங்களின் முறைப்படியான ஒத்துழைப்புகளைப் பெறுவதில் நடைமுறை சிக்கல் காணப்பட்டது. அதனைக் களையும் நோக்குடன் சில காயல் நல மன்றங்களின் ஆலோசனைப்படி, கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இக்ராஃவின் வருடாந்திர பொதுக்குழுவில், இக்ராஃவை உலக காயல் நல மன்றங்கள் சுழற்சி முறையில் நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டது.
இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தில்,
சிங்கப்பூர் காயல் நல மன்றம்,
தம்மாம் காயல் நற்பணி மன்றம்,
தாய்லாந்து காயல் நல மன்றம்,
ஜித்தா காயல் நற்பணி மன்றம்,
ரியாத் காயல் நற்பணி மன்றம்,
கத்தர் காயல் நல மன்றம்
ஆகிய அமைப்புகள் தம்மை முறைப்படி இணைத்துக்கொண்டதன் அடிப்படையில், சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழான இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அப்போதைய தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள் துவக்க தலைவராகவும், இதர மன்றங்களின் அப்போதைய தலைவர்களான டாக்டர் முஹம்மத் இத்ரீஸ், ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன், ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ, ஜனாப் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் ஆகியோர் அதன் துணைத்தலைவர்களாகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் தம்மை இணைத்துக்கொண்டுள்ள மன்றங்களின் வரிசைப்படி ஒருவர் தலைவராகவும், மற்றவர்கள் துணைத்தலைவர்களாகவும் இருப்பர் என்றும். ஆண்டுதோறும் வரிசைப்படி அடுத்தடுத்தவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வருவர் என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
சுழற்சிமுறை நிர்வாகத்தின் துவக்க ஆண்டான 2010ஆம் ஆண்டில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அப்போதைய தலைவரும், தற்போதைய ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள் இக்ராஃவின் தலைமைப் பொறுப்பையேற்று, ஒரு தலைமை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், அதற்கான நேர்காணல், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் தம் மன்றத்தின் பங்களிப்பை நிறைவாகச் செய்து தந்தார்.
அதனையடுத்து, 2011ஆம் ஆண்டு இக்ராஃவின் தலைவராகப் பொறுப்பேற்ற - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்கள், தனது மருத்துவப் பணிகளுக்கிடையிலும், அனுதினமும் இக்ராஃவின் நலன் குறித்து சிந்தித்து, தேவையான ஒத்துழைப்புகளை நிறைவாக வழங்கியுதவினார். அம்மன்றத்தின் துணைத்தலைவராக இருந்து, தற்சமயம் ஓய்வில் தாயகம் வந்துள்ள ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ அவர்கள், இக்ராஃவின் நலத்திட்டங்களுக்கு தம் மன்றம் செய்ய வேண்டிய கடமைகள் விஷயத்தில் அவ்வப்போது தூண்டுதலும்,உதவியும், ஒத்துழைப்பும் கொடுத்து தலைமைக்கு உறுதுணையாக செயலாற்றினார்.
அதுபோல, துணைத்தலைவர்களாக இருந்து, தேவைப்படும் நேரங்களிலெல்லாம் நல்ல பல ஆலோசனைகளையும், தேவையான ஒத்துழைப்புகளையும், சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழுள்ள உலக காயல் நல மன்றங்கள் நிறைவாக வழங்கின. இதுவரை சுழற்சிமுறை நிர்வாகத்தில் தம்மை இணைத்துக்கொள்ளாத உலக காயல் நல மன்றங்களும் இக்ராஃவின் கல்விச் சேவைகளுக்கு முதுகெலும்பாய்த் திகழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் இக்கூட்டத்தின் வாயிலாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, பொருளீட்ட கடல் கடந்து சென்றுள்ள நிலையிலும், பொதுநல நோக்குடன் செயல்பட்டு, நிறைவான ஒத்துழைப்புகளை வழங்கி வரும் அனைத்து காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, கருணையுள்ள அல்லாஹ் - அவர்களின் குடும்ப வாழ்வில் நிம்மதியையும், எல்லா வள-நலன்களையும், ஈருலக வெற்றிகளையும் நிறைவாகத் தந்தருள்வானாக என இதயங்குளிர பிரார்த்திக்கின்றோம்.
இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் இதுவரை தம்மை இணைத்துக்கொள்ளாத காயல் நல மன்றங்களும், இதில் இணைந்து முழு ஒத்துழைப்பளிக்க வேண்டுமென இக்ராஃ நிர்வாகத்தின் சார்பில் உளமார அழைப்பு விடுக்கிறேன்...
கூட்ட நிகழ்விடம் தேர்வு:
இக்ராஃவின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டங்களை நடத்திட, இக்ராஃ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததைக் கருத்திற்கொண்டு, இதற்கு முன்பு ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் போன்ற இடங்களில் கூட்டம் நடத்தப்பட்டது. எனினும், ஐம்பது முதல் 75 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்திற்கு அவ்வளவு பெரிய இடத்தை வாடகை அடிப்படையில் எடுத்தல், அதற்காக ஆகும் அதிக செலவினங்கள், எதிரொலி குறைபாடுகள் உள்ளிட்டவற்றைக் கருத்திற்கொண்டு, மாற்றிடம் யோசிக்கப்பட்டபோது, தற்போதைய துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள் தாமாக முன்வந்து தமதில்லத்தில் இடவசதி செய்து தருவதாகவும், மதிய உணவுக்கும் தம் பொறுப்பில் ஏற்பாடுகள் செய்வதாகவும் விருப்பம் தெரிவித்ததால், குறுகிய கால அவகாசம் மட்டுமே இருந்ததைக் கருத்திற்கொண்டு அவர்களின் இல்லத்தில் இக்கூட்டத்தை நடத்திட முடிவு செய்யப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.
அழைப்பிதழைப் பெற்றுக்கொண்ட சில உறுப்பினர்கள் - தனிநபர் இல்லங்களில் கூட்டங்களை நடத்துவது ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கு நெருடலை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்த கருத்துக்களை இக்ராஃ நிர்வாகம் பரிசீலித்து, ஏற்றுக்கொண்டுள்ளது. இனி வருங்காலங்களில், இக்ராஃவின் எந்தக் கூட்டமானாலும் இக்ராஃ அலுவலகத்திலோ அல்லது பொது இடங்களிலோ மட்டுமே நடத்தப்படும் என இக்ராஃ நிர்வாகத்தின் சார்பில் அறியத் தருகிறேன்.
தற்போது, இந்த இடத்தில் இக்கூட்டம் நடைபெறுவதால் உறுப்பினர்கள் யாருக்கேனும் மனக்குறைகள் இருப்பின், அல்லாஹ்வுக்காக பொறுத்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
(இவ்வாறு அவர் தெரிவித்தபோது, “இந்த இடத்தில் கூட்டம் நடைபெறுவதில் எங்களுக்கு எந்த மனக்குறைகளும் இல்லை... மகிழ்ச்சியே! எனினும் வருங்காலங்களில் பொது இடங்களில் கூட்டத்தை நடத்திடுவதை ஆதரிக்கிறோம்...” என, கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தனர்.)
கூட்ட ஒழுங்குகள்:
இக்ராஃவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களைத் துவக்குகையில், கூட்ட ஒழுங்குகள் குறித்து தெரிவிக்கப்படுவது மரபாக பேணப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கூட்ட ஒழுங்குகளை இங்கே அறிவிக்கிறேன்...
*** கூட்டத்தின் தலைவரோ அல்லது அவரது அனுமதியைப் பெற்றவரோ நிகழ்ச்சி நிரலை வாசிப்பார். அதனடிப்படையில் நிகழ்முறைகள் நடைபெறும். அந்நேரத்தில் உறுப்பினர்கள் யாருக்கேனும் சந்தேகங்கள், ஆட்சேபணைகள், குற்றச்சாட்டுகள் இருப்பின், அதனைக் குறிப்பெடுத்துக்கொண்டு, கேள்வி நேரத்தின்போது மட்டுமே தெரிவிக்க வேண்டும்...
*** கேள்வி நேரத்தின்போது, தமது கருத்தைத் தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள் தம் கையை உயர்த்த வேண்டும்... தலைவர் அனுமதி பெற்று பேச வேண்டும்...
*** ஓர் உறுப்பினர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கையில், அதில் யாரேனும் மாற்றுக்கருத்து தெரிவிக்க விரும்பினாலும், கையை உயர்த்தி தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்தால் மட்டுமே தம் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்...
*** கருத்து தெரிவிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தலைவரை நோக்கியே தம் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்... தமக்குள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்துகொள்ளக் கூடாது...
*** கருத்து வேறுபாடுகள் வரும்போது, அமைப்பின் நலன் கருதி தலைமை எடுக்கும் முடிவுக்கு கூட்டம் கட்டுப்பட வேண்டும்...
*** கூட்ட நிரலைத் தாண்டி இதர விஷயங்கள் குறித்து கூட்டத்தில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது நமது பொன்னான நேரத்தை வீணாக்கிவிடும்...
இந்நடைமுறைகளை நமக்கு நாமே சுய கட்டுப்பாட்டுடன் வகுத்துக்கொண்டால், கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேரம் ஒருக்கி வருகை தரும் முதியோர், இயலா நிலையிலுள்ளோர், இடையறாத அலுவல்களைக் கொண்டுள்ளோர் என அனைவருக்கும் அது முழு பயனளிக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு செயல்படுமாறு, எனக்கும் - உங்களுக்கும் நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
இவ்வாறு, இக்ராஃ துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது, 2011-2012ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.
ஆண்டறிக்கை:
*** இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2011-2012 கல்வியாண்டில், 17 மாணவர்கள், 35 மாணவியர் உட்பட மொத்தம் 52 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, ஜகாத் நிதியாகப் பெறப்பட்ட ரூ.91,000 தொகைக்கு - 8 மாணவர்கள், 2 மாணவியர் என மொத்தம் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
*** கடந்த ஆறு ஆண்டுகளில், உலக காயல் நல மன்றங்கள், கல்விக் கொடையாளர்கள், கல்வியாளர்களின் அனுசரணையுடன் - இக்ராஃ கல்விச் சங்கம் மூலம், 322 மாணவ-மாணவியருக்கு, ரூபாய் 40 லட்சம் அளவுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
*** ஹாங்காங் KSWA (கஸ்வா) அமைப்புடன் இணைந்து, கடந்த 24.07.2011 அன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய படிப்புகள் குறித்து விழிப்புணர்வூட்டும் - “இந்திய ஆட்சிப்பணி குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு” நடத்தப்பட்டது.
சென்னை கிரஸண்ட் ஐ.ஏ.எஸ். கல்வி வழிகாட்டு மையத்தின் இயக்குநரும், பி.எஸ்.அப்துர்ரஹ்மான் பல்கலைக் கழகத்தின் சயின்ஸ் & ஹியூமானிட்டீஸ் கல்விக் கூடத்தின் தலைவருமான டாக்டர் ஐ.முஹம்மத் பிலால் எம்.எஸ்ஸி., பி.எச்.டி. அவர்களும், சென்னை - தென்னிந்திய ரெயில்வே பிரிவின் நிதி ஆலோசகரும், முதன்மைக் கணக்கதிகாரியுமான ஹபீப் சுல்தான் முஸத்திக் ஐ.ஆர்.ஏ.எஸ். அவர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்று, மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டினர்.
*** மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட ப்ரொஃபஷனல் படிப்புகளுக்கு பல்வேறு அமைப்புகள் - காயல் நல மன்றங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகைகளை காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவ-மாணவியர் பெற்றுப் பயனடையும் வகையில், அவ்வமைப்புகளின் விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டு, மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கணிசமான உதவித்தொகை நமதூர் மக்களுக்குக் கிடைக்கப் பெற்று வருகிறது.
*** அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகளைப் பெற வேண்டிய வழிவகைகள் குறித்து மாணவ-மாணவியருக்கு வழிகாட்டப்பட்டு வருகிறது.
*** உலக காயல் நல மன்றங்கள், நகர்நலன் கருதி காயல்பட்டினத்தில் நடத்தும் கல்வி நிகழ்ச்சிகளை - அவர்களது முறையான வேண்டுகோளை ஏற்று, இக்ராஃ அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கிறது.
அந்த அடிப்படையில், சென்ற ஆண்டு தம்மாம் காயல் நற்பணி மன்றம் நடத்திய “நகர பள்ளிகளுக்கிடையிலான அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி”, சென்ற வாரம், சென்னை - KCGC அமைப்பு நடத்திய “கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி (Career Guidance Programme)” மற்றும் மாணவர் தனிநபர் நேர்காணல் போன்றவற்றுக்குத் தேவையான ஏற்பாடுகளை இக்ராஃ செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
*** ஜித்தா, தம்மாம், ரியாத் காயல் நற்பணி மன்றங்களின் வேண்டுகோளுக்கிணங்க, நமதூர் காயல்பட்டினத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக, பெண் தன்னார்வலர்கள் 40 பேரைக் கொண்டு, நகர் முழுக்க வீடு வீடாகச் சென்று, கேன்சர் சர்வே வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான பல முக்கிய பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை - அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவரும், தலைசிறந்த புற்றுநோய் மருத்துவ நிபுணரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான டாக்டர் ஷாந்தா அவர்களை, CFFC அமைப்பின் மூலம், காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, 01.10.2011 அன்று, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பேசிய அவர், ''40 பெண் தன்னார்வலர்களைக் கொண்டு, பத்தே தினத்தில் நகர் முழுக்க புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது சாதனை'' என்று பாராட்டிப் பேசியது இக்ராஃவுக்குக் கிடைத்த நற்சான்றிதழாகும். CFFC நடத்திய இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுப் பணிகளுக்கு, இக்ராஃ பெருமளவில் உதவியும், ஒத்துழைப்பும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
*** கடந்த ஆண்டுகளைப் போல, இவ்வாண்டும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “கேபிள் டி.வி. கல்வி ஒளிபரப்பிற்கு, புதிதாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு, 12ஆம் வகுப்பு நிகழ்ச்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பின்னர், உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகள் முடக்கப்பட்டதால், 10ஆம் வகுப்புக்கான பாடங்களை ஒளிபரப்ப இயலாமற்போயிற்று.
*** சென்ற ஆண்டு இக்ராஃ நடத்திய, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நஸீம் ஐ.ஏ.எஸ். அவர்கள், எல்லோரும் புகழ்ந்துரைக்கும் வகையில் மாணவர்களுக்கும், அவர்கள்தம் பெற்றோருக்கும் மிகவும் அருமையாகவும், எளிமையாகவும் - அதே சமயத்தில் அழுத்தமாகவும் பல்வேறு பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும், இக்ராஃவின் முயற்சிகளுக்கு தம்மாலியன்ற ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட படிப்புகளைப் பயில ஆர்வப்படும் நமதூர் மாணவ சமுதாயத்தை தயார் செய்திட, வருங்காலங்களில் அவரைப் பயன்படுத்திட இக்ராஃ நாட்டம் கொண்டுள்ளது.
*** மாணவர்களுக்கு - அவர்களின் communication skill-ஐ மேம்படுத்தும் நோக்குடன், ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இக்ராஃ நாடியுள்ளது. இதுகுறித்து, நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் கலந்தாலோசித்து செயல்திட்டம் வகுக்கப்படும்.
*** மாணவர்களின் நினைவுத் திறனுக்கு பெரும் சவாலாக இருக்கும் Dyslexia எனும் குறைபாட்டைக் களைவதற்காக, அத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு - சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்கிட இக்ராஃ திட்டமிட்டுள்ளது.
*** சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வூட்டுவதும் ஒரு கல்விப்பணியே என்ற அடிப்படையில், இக்ராஃவின் பெண் தன்னார்வலர்களைக் கொண்டு, நகரில் சுகாதார விழிப்புணர்வு நடத்திடுவது குறித்து செயற்குழுவில் கலந்தாலோசிக்கப்பட்டது. விரைவில், இதுகுறித்து முறையான செயல்திட்டம் வகுத்து செயல்படுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
*** கடந்த ஆண்டு இக்ராஃ மூலம், காயல் நல மன்றங்கள், பொதுநல அமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் பள்ளிச் சீருடை - பாடக் குறிப்பேடுகள் இலவச வினியோகத்தைச் செய்து, அதன் மூலம் 1,200 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது ஆண்டறிக்கை வாசித்தார். பின்னர், இக்ராஃவின் நடப்பாண்டிற்கான நிதிநிலையறிக்கை (பட்ஜெட்),
இக்ராஃ நிர்வாகச் செலவினங்களுக்காக நிதியுதவி செய்வோர் (காயல் நல மன்றங்கள், தனி நபர்கள்) குறித்த விபரப்பட்டியல்,
நடப்பாண்டு “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” நிகழ்ச்சிக்கான பரிசு விபரங்கள்,
கல்வி உதவித்தொகை குறித்து இக்ராஃ வெளியிட்டுள்ள பிரசுரம்,
நடப்பு கல்வியாண்டிற்காக இதுவரை இக்ராஃவால் பெறப்பட்ட கல்வி உதவித்தொகை அனுசரணை விபரம்,
இக்ராஃவில் இணைந்துள்ள இதுவரையிலான மொத்த உறுப்பினர்கள் 335...
உள்ளிட்ட விபரங்களை இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தனதுரையில் தெரிவித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து வரவு செலவு கணக்கறிக்கையை, இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் சமர்ப்பித்து, “இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா...?” என்று கேட்டார்.
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உறுப்பினர்கள் சிலர் தமக்கேற்பட்ட சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபெற்ற பின்னர், “அல்லாஹு அக்பர்” என்ற தக்பீர் முழக்கத்துடன், வரவு-செலவு கணக்கறிக்கையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
புதிய தலைவர், துணைத்தலைவர் தேர்வு:
பின்னர், சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழான இக்ராஃ கல்விச் சங்கத்தின் புதிய தலைவராக, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களின் பெயரை, இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது முன்மொழிய, கூட்டம் உரத்த குரலில் “அல்லாஹு அக்பர்” என்ற தக்பீர் முழக்கத்துடன் அதனை ஏற்றுக்கொண்டது.
அடுத்து, இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழுள்ள சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் தலைமை மாற்றம் கண்டுள்ளதால், அம்மன்றத்தின் நடப்பு தலைவராக உள்ள ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் அவர்களின் பெயரை - இக்ராஃவின் துணைத்தலைவர் பொறுப்பிற்காக - இக்ராஃ செயலாளர் முன்மொழிய, கூட்டம் அதனையும் ஒருமனதாக தக்பீர் முழக்கத்துடன் ஏற்றுக்கொண்டது.
புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம்:
அடுத்து, இக்ராஃ கல்விச் சங்கத்தில் புதிதாக உறுப்பினராகச் சேர விண்ணப்பித்துள்ள 51 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களின் விபரமும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து விண்ணப்பதாரர்களையும் இக்ராஃவின் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள கூட்டம் ஒருமனதாக ஒப்புதலளித்தது.
வாழ்நாள் உறுப்பினர்கள்:
ரூபாய் 15,000 செலுத்தி, இக்ராஃவின் வாழ்நாள் உறுப்பினர்களாக தம்மை இணைத்துக்கொள்ள இக்கூட்டத்தில்பலர் விருப்பம் தெரிவித்தனர்..அவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:-
ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார்
ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மது
ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி
ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல்
ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம்
ஹாஜி பி.எம்.ரஃபீக்
பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி
ஹாஜி எல்.டி.சித்தீக்
ஜனாப் கே.அப்துர்ரஹ்மான்
இவர்களுள், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர், ரூபாய் 1,00,000 செலுத்தி புரவலர்களாக இணைவதிலுள்ள சட்ட நுணுக்கங்கள் குறித்து தெளிவு பெற்ற பின்னர் தம்மை புரவலர்களாக இணைத்துக்கொள்வதாகவும், அதில் தமக்கு அதிருப்தி இருப்பதாக உணர்ந்தால், வாழ்நாள் உறுப்பினர்களாகத் தொடர்வதாகவும் விருப்பம் தெரிவித்தனர்.
கேள்வி நேரம் - கருத்துப் பரிமாற்றம்:
பின்னர், உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காகவும், சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்காகவும் கேள்வி நேரம் அறிவிக்கப்பட்டது.
ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா,
ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்,
ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி,
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்,
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்,
ஜனாப் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்,
ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி,
ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம்,
ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப்,
ஹாஜி எம்.எம்.அஹ்மத் ஹுஸைன்,
ஹாஜி எம்.ஜே.ஹபீபுர்ரஹ்மான்,
ஹாஜி சாளை ஜியாவுத்தீன்,
ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர்,
ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா,
ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத்,
ஹாஜி அப்துர்ரஹீம்
ஆகியோர் இக்கேள்வி நேரத்தின்போது கருத்துக்களைத் தெரிவித்தனர். பெறப்பட்ட கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு:-
ஆலோசனைகள்...
ஒரு மனிதனின் வாழ்வில் உருப்படியாக உதவி எதுவும் செய்ய நாடினால், அவரது கல்விக்கு உதவி செய்ய வேண்டும்... அதுவே சிறந்த உதவியாக இருக்கும்... காரணம், மற்ற உதவிகள் அந்தந்த தேவைகள் பூர்த்தியானதோடு நிறைவுற்றுவிடும்... ஆனால் கல்விக்காக செய்த உதவி, அவர் படித்து முடித்து தொழிலிலோ, பணியிலோ ஈடுபட்ட பின், வாழ்நாள் முழுவதும் அவரது குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும்...
படிப்பை இடைநிறுத்தம் செய்யும் மாணவ-மாணவியரைக் கண்டறிந்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து - அவர்கள் தம் படிப்பைத் தொடர ஆவன செய்யப்பட வேண்டும்...
தேர்வில் தோல்வியுற்றவர்களைக் கண்டறிந்து அவர்கள் வருட இழப்பின்றி தம் படிப்பைத் தொடர்ந்திட வழிவகை செய்யப்பட வேண்டும்...
கல்வி உதவிக்காக, ஜகாத் நிதி அதிகளவில் கொடுக்கப்பட வேண்டும்...
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட படிப்புகளுக்காக மாணவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஊக்கப்படுத்தி வழிகாட்ட வேண்டும்...
Aggregate Marcks குறித்து மாணவ சமுதாயத்திற்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்...
கல்வித் துறையில் இக்ராஃ ஒருங்கிணைந்த சேவையை வழங்கி வருவது போல மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கும் முறையான ஒருங்கிணைப்பு வேண்டும்...
விமர்சனங்களும், விளக்கங்களும்...
விமர்சனம்: இக்ராஃ நிர்வாக அதிகாரியின் பணிப்பளுவைக் குறைக்க கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்...
விளக்கம்: தற்போதைய நிதிநிலையில் தேவையான அளவுக்கு உயர்வு ஏற்பட்டால் செய்யலாம்...
விமர்சனம்: கலை - அறிவியல் - தொழிற்கல்விகளுக்கு உதவி வழங்கப்படுவது போல, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்...
விளக்கம்: தற்போது வழங்கப்படும் உதவித்தொகையே ஒரு மாணவரின் பாதி தேவையைத்தான் பூர்த்தி செய்கிறது... நிதியாதாரத்தைப் பெருக்கிட தொடர்முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது... அது நிறைவேறும்போது படிப்படியாக அனைத்தும் செய்யப்படும்..எனினும் இப்போதைக்கு இக்ராஃவுக்கு கிடைக்கும் ஜக்காத் நிதிக்கு இது போன்று அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பம் பெறப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விமர்சனம்: பொதுக்குழுக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்க அழைப்பிதழ் அனுப்புவதுடன், கூட்ட தேதியில் குறுஞ்செய்தியும் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பலாம்...
விளக்கம்: அடிப்படைப் பணிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் வசதிகள் இருந்தால் மட்டுமே எஸ்.எம்.எஸ். போன்ற வழிகளில் தகவல் தரப்படும்... அதே நேரத்தில் அழைப்பிதழ் அனைவருக்கும் குறித்த காலத்தில் முறைப்படி அனுப்பி வைக்கப்படும்...
விமர்சனம்: கூட்ட நிகழ்விடம் குறித்து பெறப்பட்ட மாற்றுக்கருத்துக்களை இனியும் பெறாதிருக்க, விரைவாக சொந்த இடத்தில் அலுவலகம் கட்ட ஆவன செய்யப்பட வேண்டும்...
விளக்கம்: இன்ஷாஅல்லாஹ் இவ்வாண்டிலேயே அதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும்...
இவ்வாறு, கேள்வி நேரத்தின்போது ஆலோசனைகளும், விமர்சனங்களும் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு, தேவையானவற்றுக்கு உடனுக்குடன் விளக்கமும் அளிக்கப்பட்டது. விளக்கங்களை இக்ராஃ நிர்வாகத்தின் சார்பில் அதன் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது, நிர்வாக அதிகாரி ஏ.தர்வேஷ் முஹம்மது, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் வழங்கினர்.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - நடப்பு தலைவருக்கு நன்றி:
இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ், 2011-2012 பருவத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்று, தேவையான ஒத்துழைப்புகளை திறம்பட செய்து தந்த தம்மாம் காயல் நற்பணி மன்ற தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாயிருந்து ஒத்துழைப்பளித்த அம்மன்றத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - புதிய தலைவர் தேர்வு:
இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ், புதிய தலைவராக - தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவரும், இக்ராஃவின் துணைத்தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களை இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது.
தீர்மானம் 3 - புதிய துணைத்தலைவர் தேர்வு:
இக்ராஃவின் துணைத்தலைவர்களுள் ஒருவராக சேவையாற்றிய - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் அப்போதைய தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிப்பதோடு, அம்மன்றத்தின் தற்போதைய தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் அவர்களை, இக்ராஃவின் புதிய துணைத்தலைவராக இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது.
தீர்மானம் 4 - புதிய உறுப்பினர்களுக்கு ஒப்புதல்:
இக்ராஃவில் புதிதாக உறுப்பினராவதற்கு விண்ணப்பித்துள்ள 51 பேருக்கு இக்கூட்டம் அங்கீகாரமளிக்கிறது.
தீர்மானம் 5 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
இக்ராஃ பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட - இக்ராஃவின் 2011-2012ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை இக்கூட்டம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நன்றியுரையாற்றினார்.
“இக்ராஃ துவங்கப்பட்ட காலம் தொட்டு, இன்றளவும் அதன் இருதயமாகச் செயல்பட்டு, தன் வாழ்வை இதற்காகவே அர்ப்பணித்துக்கொண்டமைக்காக - இக்ராஃவின் துவக்க செயலாளரும், தற்போதைய நிர்வாக அதிகாரியுமான ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களை மனதாரப் பாராட்டுவதாக தனதுரையில் அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் அவர்களின் துஆ, ஸலவாத் கஃப்ஃபாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
விருந்துபசரிப்பு:
அதனைத் தொடர்ந்து, இக்ராஃவின் புதிய தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களின் அனுசரணையில் அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
சிறப்பழைப்பாளர்கள்:
இக்கூட்டத்தில், அன்றைய தினம் உள்ளூரிலிருந்த இக்ராஃ பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அத்துடன், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயலர் எம்.எம்.மக்தூம் முஹம்மத், பஹ்ரைன் காயல் நல மன்றத்தின் வி.எஸ்.எஸ்.ஜாஹிர் ஹுஸைன், ரியாத் காயல் நல மன்றத்தின் வி.எம்.ஏ.மக்தூம் அமீன், தாய்லாந்து காயல் நல மன்றத்தின் செயலர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத், எஸ்.எம்.மிஸ்கீன் சாஹிப், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன், இலங்கை காயல் நல மன்றத்தின் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் புஹாரி, அதன் அங்கத்தினரான ஹாஜி மக்கி நூஹுத்தம்பி, அபுதாபி காயல் நல மன்றத்தின் எம்.ஜே.ஹபீபுர்ரஹ்மான், ஏ.ஆர்.ரிஃபாய் சுல்தான், தம்மாம் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், துபை காயல் நல மன்றத்தின் சார்பில் ஏ.சேட் முஹம்மத், ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் செயலர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், எம்.எஸ்.ஹஸன் நெயினா, எம்.ஏ.செய்யித் முஹம்மத் மற்றும் ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி, எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம், எஸ்.ஏ.கே.ஷாஹுல் ஹமீத் (மலேசியா) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், அதன் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம். |