காயல்பட்டினம் கடற்கரையில், மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, குப்பை கூளங்கள் பெருமளவில் தேங்கி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தி, கடற்கரையைத் தூய்மையாக வைத்திட, நகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு - தனது நேரடி மேற்பார்வையில் குப்பைகளை அகற்றச் செய்தல், கடை வைத்திருப்போர் மற்றும் நடமாடும் வணிகர்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் செய்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, கடற்கரையை தூய்மையாக வைத்திருக்குமாறு கோரி பொதுமக்களுக்கு காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 03.06.2012 அன்று (நேற்று) ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் மக்கள் திரள் அதிகமாக இருந்ததைக் கருத்திற்கொண்டு, நகராட்சியின் இந்த வேண்டுகோள் அடங்கிய பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, பொதுமக்களுக்கு நேரடியாக பிரசுரங்களை வினியோகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா ஆகியோர் உடனிருந்தனர்.
அப்பிரசுரத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் பின்வருமாறு:-
பொறுப்பான பொதுமக்களே!
நமதூரின் அழகிய கடற்கரையை தூய்மையாக ஒழுங்காக பராமரிக்க வேண்டும் என்ற ஆவல் இக்கடற்கரை காற்றை சின்னசிறு வயது முதலாக சுவாசித்து கொண்டு இருக்கும் கடற்கரையின் அழகை - அமைதியை, உறவும் நட்பும் சூழ அமர்ந்து, அன்புடன் அளவளாவி அனுபவித்துக் கொண்டு இருக்கும் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும், எண்ணத்திலும் நிச்சயம் நிறைந்து இருக்கும்.
இந்த ஆவல் நிறைவேற நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், கடற்கரைக்கு குடும்பம் குழந்தைகளுடன் வரும்போது கையில் ஒரு பையை எடுத்து வாருங்கள்! தின்பண்டங்களைச் சாப்பிட்டு விட்டு, எச்சில் பொருட்களை மணலில் போடாமல், தயவுசெய்து பையில் போட்டு எடுத்துச் சென்று, அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போகும்போது போட்டுச் செல்லுங்கள்!
சைக்கிள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை பார்கிங் செய்யும்போது ஒழுங்கு வரிசையைப் பின்பற்றுங்கள். ஒழுங்கற்ற வாகன நிறுத்தத்தால் குழந்தைகளும், முதியவர்களும் சுமை தூக்கிச் செல்லும் வியாபாரிகளும் தினந்தோறும் இடித்து விழுந்து அடிபடும் சூழ்நிலை ஏற்படுகிறது. நாளை நமது அன்பானவர்களுக்கும் இந்த நிலை ஏற்பட கூடாது என்ற அக்கறை உள்ள ஒவ்வொருவரும் வாகனங்களை நிறுத்தும்போது அழகான ஒழுங்குமுறையை நீங்களாகவே பின்பற்றுங்கள்.
அன்பார்ந்த வியாபாரிகளே!
நமதூர் கடற்கரையில் கடைவைத்து இருக்கும் நீங்கள் உங்களின் வாடிக்கையாளர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லி, நீங்கள் வியாபாரம் செய்துகொண்டு இருக்கும் கடற்கரையின் சுத்தத்தைப் பேணிட உதவி புரியுங்கள்.
அரசின் DTCP துறையானது நமதூர் கடற்கரையில் அடிப்படை வசதிகளை செய்திட மானியம்தர தயாராக இருக்கிறது.சுத்தம், சுகாதாரம் தூய்மை மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு மட்டும் முன்னுரிமை தந்து இத்திட்டத்தினை செயல் படுத்திட நகராட்சி நிர்வாகமும் முழு முயற்சியினை எடுத்து வருகிறது நகராட்சி நிர்வாகத்துடன் பொது மக்களாகிய நீங்களும் இணைந்து செயல்பட்டு நம் ஊரில் தூய்மையான கடற்கரை அமைவதற்கு ஒத்துழைப்பு தர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
'ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே மாற்றிக் கொள்ளாதவரை எந்த ஒரு சமூகமும், ஊரும் மாற்றம் அடைய முடியாது'.
இவ்வாறு அப்பிரசுரத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ. |