காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நடைமுறைக் குறைகளைக் களைந்து - சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்தனர். விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நடைமுறைக் குறைகளைக் களைந்து - சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சென்னையிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஏகாம்பரம் ஐ.ஏ.எஸ்.-ஐ, 16.05.2012 அன்று சென்னையில் சந்தித்துப் பேசினார்.
நகருக்கு தற்போது வழங்கப்படும் குடிநீரை குறையாமல் தர ஆவன செய்வதாக அப்போது கூறிய மேலாண்மை இயக்குனர், நகரில் மேற்கொள்ளப்படும் விநியோக முறையை மேம்படுத்த தனது துறை மூலம் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்தார்.
அவரது அறிவுரையின் பேரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி செயற்பொறியாளர் ஆர்.சங்கரன், ஆத்தூர் குடிநீரேற்று நிலைய துணைப் பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர், 31.05.2012 அன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகை தந்தனர்.
அன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.ஹைரிய்யா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷி ஹாப்தீன் ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், காயல்பட்டினம் குடிநீர் வினியோக வரைபடம் உள்ளிட்ட தேவையான விபரங்களைக் கேட்டறிந்து, தகுந்த ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில், பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:-
*** காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு தண்ணீர் போதுமான அளவில் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளூரில் வினியோகத்தில்தான் குறை உள்ளது...
*** ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்தில் - காயல்பட்டினத்திலுள்ள வெறுமனே 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு மட்டுமே தண்ணீரை பம்பிங் செய்யும் கட்டமைப்பு உள்ளது... எனவே, மேலதிக தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்றப்பட வேண்டுமானால், காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியருகில் ஸம்ப் அமைக்கப்பட வேண்டும்...
*** தயவுதாட்சண்யமின்றி, மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோரின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தல், அவர்களுக்குத் தண்டனை வழங்கல், அவர்களது குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் உள்ளிட்ட முறையான நடவடிக்கைகளை நகர்மன்றம்தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்த நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது (கவுன்சிலர்கள்) முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாதது...
*** வீடுகளில் மோட்டர் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதை, அதற்குரிய கருவி கொண்டு கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மோட்டார் வைத்து குடிநீர் முறைகேடாக உறிஞ்சப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படாத வரை, 2ஆவது பைப்லைன் திட்டம் வந்தாலும் சீரான குடிநீர் வினியோகத்தை வழங்க இயலாது... இப்போது மோட்டார் மூலம் உறிஞ்சி ஒரு தொட்டிக்கு தண்ணீர் எடுப்போர், 2ஆவது பைப்லைன் திட்டம் வந்தால் இன்னும் பல தொட்டிகளை நிரப்புவர்...
*** தெருக்களில் பழைய லைன், புதிய லைன் என ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கும் அனைத்து லைன்களையும் அகற்றிவிட்டு, ஒரே பைப்லைன் வழியாக மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும்...
*** ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து பம்பிங் செய்து அனுப்பப்படும் தண்ணீர் அதே அளவில் பெறப்படுகிறதா என்பதை ஆராய, காயல்பட்டினம் ஊர் நுழைவுப் பகுதியில் ஒரு மீட்டர் பாதுகாப்புடன் பொருத்தப்பட வேண்டும்...
*** பம்பிங் லைனில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்... வினியோகக் குழாய் மூலம் மட்டுமே வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்...
இவ்வாறாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கினர்.
பொதுமக்களில் சிலர் தமது பகுதிகளிலுள்ள குடிநீர் வினியோகக் குறைபாடுகள் குறித்து கருத்து தெரிவித்தனர். அவற்றை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
பின்னர், காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், உதவியாளர் பாஸ்கரன் ஆகியோரிடம் சில விளக்கங்களைக் கேட்டனர்.
மேலும் சில கூடுதல் விபரங்களை பட்டியலாகவும் அதிகாரிகள் கேட்டனர். அந்த விபரங்கள் பெறப்பட்ட பின்னர், முறையான செயல்திட்டத்தை வகுத்துத் தருவதாக அப்போது அவர்கள் உறுதியளித்து விடைபெற்றனர்.
வருகை தந்து, தகுந்த ஆலோசனைகளை வழங்கியமைக்காக, அதிகாரிகளுக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
[செய்தியில், விடுபட்ட ஒரு தகவல் இணைக்கப்பட்டது @ 08:08/04.06.2012] |