ஜித்தா தமிழ் மன்றம் "கோடைக்கால சந்திப்பு - 2012" என்ற நிகழ்வினை கடந்த 24 -05 -2012 வியாழன் இரவு 08 : 00 மணியளவில், ஜித்தாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரக வளாகத்தில் வைத்து மிக சிறப்புடன் நடத்தியது. தமிழ் மற்றும் ஏனைய சமூக உறுப்பினர்கள், அவர்களின் குடும்பங்கள் இதில் பெரும் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக நம் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் சகோ.குளம் அஹ்மத் முஹியத்தின், செயலாளர் சகோ.சட்னி செய்யது மீரான் மற்றும் மன்ற உறுப்பினர்கள் தமது குடும்பத்துடன் வந்து கலந்து சிறப்பித்தனர்.
இந்த கோடைக்கால சந்திப்பு நிகழ்விற்கு தலைமை விருந்தினராக இந்திய தூதரக உயர் அதிகாரி திரு. எஸ்.டி.மூர்த்தி, சிறப்பு விருந்தினராக தமிழ் சொற்பொழிவாளர், கவிமாமணி பேராசிரியர் அப்துல்காதர் ஆகியோர் கலந்துகொண்டு மேடையை அலங்கரித்தனர்.
பேராசிரியர் இலக்குவன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து அறிமுகவுரையாக ஜித்தா தமிழ் மன்றத்தின் தலைவர், நம் காயல் மண்ணின் மைந்தன் கே.டி.எம்.தெரு சகோ. மீரான் மூசா தமிழ் மன்றத்தின் மூன்று ஆண்டு கால வளர்ச்சிப்பற்றியும் அது தமிழருக்கு ஆற்றி வரும் சேவை பற்றியும் விளக்கிப் பேசினார். பின்பு தலைமை விருந்தினரான இந்திய தூதரக உயர் அதிகாரி திரு. எஸ்.டி.மூர்த்தியைப்பற்றி, ஜித்தா தமிழ் மன்றத்தின் செயலர் ஜெய்ஷங்கர், மூர்த்தி செய்த பல சமூக நல தொண்டுகளை பட்டியலிட்டு பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய மூர்த்தி, நம் இந்திய துணைத் தூதரகம் செய்து வரும் சேவைகளை பற்றி விவரித்தார். அதுபோல் சில நேரங்களில் சில சட்ட கெடுபிடியால் இந்திய அரசு அதிகாரிகள் பட்டு வரும் அல்லல்களையும் விவரித்ததோடு இந்திய பிரஜைகள் எப்படி இந்த நாட்டில் விழிப்புணர்வோடு நடந்துக்கொள்ளவேண்டுமென்றும், தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தினார். எங்களுடைய உதவி தேவைப்படும் பட்சத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய துணைத் தூதரகத்தை அணுகலாமென்றும் அதற்கு முன் தங்களது வெப்சைட்டை (www .cgijeddah .com) ஒரு முறையாவது திறந்து பார்த்து அதிகாரிகளின் தகவல்கள், செய்து வரும் பணிகள் குறித்து தெரிந்துகொண்டால் பேருதவியாக இருக்கும் என்று கூறினார்.
இந்த "கோடைக்கால சந்திப்பு - 2012"-க்கு தாயகத்திலிருந்து பிரத்யேகமாக வந்திருந்த ''அகட விகடம்'' புகழ் கவிமாமணி பேராசிரியர் அப்துல் காதரைப்பற்றி, முஹம்மது இபுறாஹீம் மரைக்கார் அறிமுகவுரை மற்றும் பேராசிரியர் செய்து வரும் சாதனைகள், பொது நலத்தொண்டு ஆகியவைகளை எடுத்துரைத்தார்.
பேராசிரியர் அவர்கள் உரை நிகழ்த்திய போது, இந்த வளர்ந்து வரும் தொழில் நுட்ப யுகத்தில் குறிப்பாக சமூகம் வலைத்தளங்களிலிருந்து நம் பிள்ளைகளை எப்படி பாதுகாக்க வேண்டுமென்றும், பிள்ளை வளர்ப்பில் தந்தை மற்றும் தாய் ஆகியோர்களின் பங்கு குறித்தும் சிறப்புரையாற்றினார். அதோடு மூன்றாமாண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஜித்தா தமிழ் மன்றத்தினையும் அதன் நிர்வாகிகளையும் அவர்கள் செய்துவரும் சமூக நலப்பணிகளையும் வெகுவாக பாராட்டி அமர்ந்தார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை ஆசிரியை புவனேஸ்வரி மற்றும் பேராசிரியர் இலக்குவன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இறுதியில் முஹம்மது ரஃபி நன்றி கூறினார். மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களான கீழக்கரை சகோ.சீனி அலி, மோகன், ரவீந்திரன், சேரன், காசிம் ஷெரிப், ஸ்ரீனிவாசன், மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் உறுதுணையாக இருந்தனர்.
இந்த இனிய விழாவில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. ஷாநாழ், ஹ்ரிதிக், ஷீஜா அஷ்ரப் குழுவினர், உமா மருது குழுவினர், ஜோஷ்னா, ஆஷா ஸ்டார்வின் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் சக மாணவ மாணவியரோடு நடனம் ஆடினார். மனீஷ் பியானோ வாசிக்க, முனீர், பவதாரிணி, ஹ்ரிதிக், தீக்ஷா, மற்றும் பலர் பாடல்கள் பாடினர். அல்உரூத் பன்னாட்டு பள்ளி மாணவர்களின் மெய்சிலிர்க்க வைத்த கராத்தே சாகச நிகழ்ச்சியும், லீலா கிருஷ்ணன் குழுவினர் முயற்சியில் இடம்பெற்ற மாற்று திறனாளிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ''பப்பட்'' ஷோவும் வந்திருந்த அனைவர்களையும் வெகுவாக கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கு மலர் கொத்து கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். ஜித்தாவில் உள்ள பல்வேறு சமூகத்தினரும், பல்வேறு சங்க நிர்வாகிகளும், அல்உரூத் பன்னாட்டு பள்ளி முதல்வர் ரஹ்மத்துல்லாஹ், குழந்தை நல மருத்துவர் வெற்றிவேல், துணை இந்திய தூதர் - தாஸ் ஜெயக்குமார், அதிகாரி ராஜகோபாலன், பாபி, முபாரக், உள்பட ஜித்தா துணைத் தூதரக அனைத்து அலுவலர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
வந்திருந்த அனைவர்களுக்கும் விழாக் குழுவினர்களால் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஏராளமான குழந்தைகள் கலந்துக்கொண்டனர்.
தகவல்:
எஸ்.ஹெச்.அப்துல் காதர்
|