காயல்பட்டினம் 09ஆவது வார்டுக்குட்பட்ட அப்பாபள்ளித் தெருவின் ஒரு பகுதியில் பல நாட்களாக சாக்கடை கலந்த நிலையில் குடிநீர் வருவதாகக் கூறி, சாக்கடை கலந்த நிலையிலிருந்த நீரை அப்பகுதி மக்கள் பாட்டிலில் அடைத்து, நகராட்சியில் கடந்த 30.05.2012 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டத்தின்போது, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் காண்பித்தனர். போர்க்கால அடிப்படையில் இக்குறை சரி செய்யப்படும் என அப்போது நகர்மன்றத் தலைவர், அவர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், 03.06.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில், அப்பாபள்ளித் தெரு பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் மற்றும் அலுவலர்களுடன் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அப்பாபள்ளித் தெருவிற்கு வந்தார்.
அப்போது, சாக்கடை கலந்த நிலையில் பெறப்பட்ட குடிநீரை அவரவர் வீட்டுப் பாத்திரங்களில் பொதுமக்கள் எடுத்துக்கொண்டு வந்து நகர்மன்றத் தலைவரிடம் காண்பித்தனர்.
உடனடியாக அப்பகுதியில் முழு ஆய்வு செய்திடுமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டதன் பேரில் அப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் இறுதியில், அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் கழிவுநீர்த் தொட்டி (செப்டிக் டேங்க்) வழியே செல்லும் குடிநீர் குழாயில் துளை ஏற்பட்டு, அதில் கழிவு நீர் கலந்து அதன் வழியே அப்பகுதி மக்கள் அனைவருக்கும் செல்வதாக ஆய்ந்தறியப்பட்டது.
இத்தகவலை நகர்மன்றத் தலைவரிடம் அலுவலர்கள் தெரிவித்தபோது, உடனடியாக அத்தொட்டிக்குச் சொந்தமான வீட்டின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்குமாறும், அவர்கள் கழிவுநீர்த் தொட்டி வழியே செல்லும் தமது குடிநீர் குழாயை சரிசெய்த பின்னர் அவர்களுக்கு இணைப்பை மீண்டும் வழங்குமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன், குடிநீரில் சாக்கடை நீர் கலந்துசெல்லும் பிரச்சினை சரிசெய்யப்படும் வரை, அப்பகுதி மக்களுக்கு வண்டித் தண்ணீர் வினியோகிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
அப்பகுதியின் (09ஆவது வார்டு) நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, மற்றொரு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
Administrator: செய்தி திருத்தப்பட்டது @1:00pm/7-6-2012 |