உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியர் நேர்காணல் செய்யப்பட்டு, அவர்களுள் 55 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணைகளுடன், நமது இக்ராஃ கல்விச் சங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியர் 57 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
வழமை போன்று இவ்விண்ணப்பங்கள் மூன்றடுக்கு விசாரணையின் கீழ் பரிசீலிக்கப்பட்டுள்ளன. துவக்கமாக, விண்ணப்பப் படிவங்களிலுள்ள ஜமாஅத் சான்றறிக்கை பரிசீலிக்கப்பட்டது. இரண்டாவதாக விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில், இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் இக்ராஃவிற்கு நேரடியாக அழைக்கப்பட்டு, நேர்காணல் செய்யப்பட்டனர். இந்த நேர்காணல் நிகழ்ச்சி, 01.07.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 09.45 மணி முதல் மாலை 04:45 மணி வரை காயல்பட்டினம் அலியார் தெருவிலமைந்துள்ள இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்ராஃ தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நேர்காணலில், இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது, இலங்கை காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதியும், இக்ராஃ செயற்குழு உறுப்பினருமான எஸ்.அப்துல் வாஹித் ஆகியோரடங்கிய குழு, நடப்பாண்டு இக்ராஃவின் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பித்த 55 மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தது.
இந்நேர்காணலில், 20 மாணவர்கள், 35 மாணவியர் - நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டனர்.ஒரு மாணவரும், ஒரு மாணவியரும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளாத காரணத்தால் அவ்விரு விண்ணப்பங்ககளும் நிராகரிக்கப்பட்டன.தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவற்றவர்கள்; மிகவும் வறுமையில் வாழ்ந்து வருபவர்கள் என்பதும், இவர்களை நம்பியே இவர்களின் குடும்பம் வாழ்ந்து வருகிறது என்பதும், இந்த மாணவ - மாணவியருக்கு தேவையான வழிகாட்டுதலும்,மேற்படிப்பு குறித்த ஆலோசனைகளும் இந்நேர்காணலின்போது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
''இந்த நேர்காணலில் 55 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், நடப்பாண்டு (2012 -2013) கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 26 அனுசரணைகள் (sponsors) தான் பெறப்பட்டுள்ளது. இதில் அனுசரணை வழங்காத காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் இந்த மாணவ - மாணவியரின் ஒளிமயமான வாழ்விற்கு உதவிடும் வகையில் sponsor வழங்கி உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம். |