ஹாங்காங்கில் காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 4ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 30.06.2012 அன்று, ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
அவ்வமைப்பின் 2011-2012 பருவத்திற்கான ஆண்டறிக்கையை, அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
ஆண்டறிக்கை பின்வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
காயல்பட்டணம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங்
நான்காம் ஆண்டறிக்கை
அனைத்துப் புகழும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ் ஒருவனுக்கே! அவனருளும், ஈடேற்றமும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின்பற்றும் நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக, ஆமீன்.
கண்ணியமிகு பெரியோர்களே, சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...
இறைவனின் கிருபையாலும், சமுதாய மக்களின் நல்லாதரவாலும், நம் நகரில் வாழும் மக்களுக்கு நமது பேரவையின் மூலமாக ஆக்கப்பூர்வமான நல்ல பணிகள் ஆற்றப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே! அவற்றைத் தொகுத்து, நம் பேரவையின் நான்காமாண்டறிக்கையாக தங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
நலத்திட்ட உதவிகள்:
தொழில் செய்திட திறமையிருந்தும் பொருளாதார நலிவு காரணமாக தொழில் செய்ய இயலாத நமதூர் மக்களிடமிருந்து தொழிற்கருவிகள் உதவி கோரி பெறப்பட்ட மனுக்கள், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) ஆகிய அமைப்புகளின் மூலம் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களின் உண்மை நிலை குறித்து ஆய்ந்தறியப்பட்டு, ஆகஸ்ட் 2010இல் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் அமைப்பில் வைத்தும், 26.02.2011 அன்று காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பில் வைத்தும் ஏழை-எளியோருக்கு தொழிற்கருவிகள் வழங்கப்பட்டது.
இவ்வாண்டு இது தொடர்பாக விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படவில்லை. மேலும், இவ்வாண்டு சுயதொழில் செய்ய ஆண்களுக்கு இஸ்திரி பெட்டி மற்றும் பலசரக்கு அங்காடி வைப்பதற்கும் உதவிகள் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
காயிதேமில்லத் அமைப்பின் பள்ளிப் பாடக்குறிப்பேடுகள் இலவச வினியோகத்திற்கு அனுசரணை:
கடந்த ஆண்டுகளில் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் மூலமாக - இக்ராஃவுடன் இணைந்து, ஏழை-எளிய மாணவ-மாணவியருக்கு பள்ளிப் பாடக்குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இவ்வகைக்காக நமது பேரவை சார்பில் கனிசமான தொகை அனுசரணையளிக்கப்பட்டது.
இவ்வாண்டு, தமிழக அரசின் சார்பில், ஏழை-எளிய மாணவர்களுக்கு பாடக்குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், நமது பேரவையின் மூலம் அவற்றை வழங்குவது அவசியமற்றதாகிவிட்டது.
புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்:
நமது பேரவையும், கத்தர் காயல் நல மன்றமும் இணைந்து துவக்கமாக, 2009ஆம் ஆண்டு நகரில் அதிகரித்து வந்த புற்றுநோய் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முதற்கட்டமாக 2009ஆம் ஆண்டு முதல் விழிப்புணர்வு முகாம், புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.
இவ்வருடமும் கத்தர் காயல் நல மன்றம், திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் நிறுவனங்களுடன் இணைந்து நமது பேரவை 25.09.2011 மற்றும் 03.06.2012 தேதிகளில் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் மற்றும் தடுப்பூசி முகாமை நடத்தியது. இதில் நம் நகரைச் சார்ந்த 325 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு அனுசரணை:
நமது பேரவையின் சார்பில் இவ்வருடம் ஒரு சகோதரர் தமது பங்களிப்பினை இக்ராஃ கல்விச் சங்கம் செயல்படுத்தும் “SPONSORING ONE STUDENT” ஒரு மாணவருக்கான கல்வி உதவித்திட்டத்திற்கு அளித்துள்ளனர்.
ஒரு மாணவருக்கான தொகை வருடத்திற்கு ரூ.5,000 என நிர்ணயித்து, தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு ஒரு மாணவ/மாணவிக்கான உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
இக்ராஃ கல்விச் சங்க வருட செலவினங்களுக்கு பங்களிப்பு:
நமதூர் மக்களுக்காக நல்ல முறையில் கல்விப் பணியாற்றிவரும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, பிற காயல் நல மன்றங்களோடு இணைந்து இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு நமது பேரவையும் பங்களிப்பு செய்து வருகிறது.
CFFC-யின் ஆய்வறிக்கை இந்திய தூதரகத்தில் சமர்ப்பிப்பு:
நமதூரில், புற்றுநோய் காரணிகளைக் கண்டறிவதற்காக இயங்கி வரும் Cancer Fact Finding Committee – CFFC குழுமம் சார்பில், நகரில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு, முறையான ஆய்வறிக்கைகள் பெறப்பட்டு, அவ்வறிக்கைகளை உலக நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களில் சமர்ப்பிக்குமாறு கோரி, அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அவ்வாறு பெறப்பட்ட அறிக்கை, 16.12.2011 அன்று நமது பேரவையின் சார்பில் - ஹாங்காங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பேரவையின் சார்பில் ஸஹர் உணவு ஏற்பாடு:
உறுப்பினர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க, சென்ற ஆண்டு - ஹிஜ்ரீ 1432 ரமழான் பிறை 28 அன்று ஸஹர் வேளையில், TSIM SHA TSUI KCR பூங்காவில் வைத்து, ஸஹர் உணவு இணைந்துண்ணும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நமதூர் பாரம்பரிய களறி சாப்பாடு பதார்த்தங்களுடன் பரிமாறப்பட்ட இவ்விருந்துபசரிப்பில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.
பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள்:
ஹாங்காங்கில் 31.08.2011 அன்று ஈதுல் ஃபித்ர் – ஈகைத் திருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு நமது பேரவையின் சார்பில் “பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி” அன்றிரவு மஃரிப் தொழுகைக்குப் பின் Tsim Sha Tsui KCR பூங்காவில் கொண்டாடப்பட்டது. அனேகமான ஹாங்காங்வாழ் காயலர்கள் தம் குடும்பத்தினருடன் புத்தாடை உடுத்தி இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். அவ்வமயம், இளஞ்சிறாருக்கான ஓதுதல், பாடுதல் போன்ற குறுநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
ஹாங்காங்கில் மேற்படிப்பு படித்து வரும் - நமதூரைச் சார்ந்த இரண்டு மாணவர்கள் இந்த ஒன்றுகூடலின்போது, தாம் பெற்ற கல்வி அனுபவங்களையும், ஹாங்காங்கிலுள்ள பல்கலைக் கழகங்களில் தமக்கு கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது பற்றியும், பகிர்ந்து கொண்டனர். இது - இங்கு படித்து வரும் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களாக அமைந்திருந்தது.
மேலும், சகோதரி சித்தி ஹவ்வா, சகோதரி நஃபீஸா அரபி ஆகியோர், இங்கு பயின்று வரும் குழந்தைகளின் அன்னையருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
ஹாங்காங்கில் 06.11.2011 அன்று ஈதுல் அழ்ஹா – தியாகத் திருநாள் (ஹஜ் பெருநாள்) கொண்டாடப்பட்டது. இப்பெருநாளை முன்னிட்டும் நமது பேரவை சார்பில் “பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி” அன்றிரவு மஃரிப் தொழுகைக்குப் பின் அதே பூங்காவில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஹாங்காங் வாழ் அனைத்து காயலர்களும் தம் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். சிறுவர்களுக்கான நிகழ்ச்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் மகிழ்வுடனும், பாசத்தோடும் மகிழ்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ஒருநாள் இன்பச் சிற்றுலா:
06.05.2012 ஞாயிற்றுக்கிழமையன்று, WU KWAI SHA YOUTH VILLAGE என்ற சுற்றுலா தளத்திற்கு, நமது பேரவையின் ஏற்பாட்டில் இன்பச் சிற்றுலா சென்று வந்தோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என மொத்தம் 120 பேர் கலந்துகொண்ட இந்த இன்பச் சிற்றுலாவில், குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தி, கண்கவர் பரிசுகள் அளிக்கப்பட்டதோடு,, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. அன்றைய பொழுதை அனைவரும் அகமகிழ்வுடன் கழித்தனர்.
பேரவையின் நகர்நலப் பணிகளுக்கு தாய்க்குலத்தின் பங்களிப்பு:
நமது பேரவையால் செய்யப்பட்டு வரும் நகர்நலப் பணிகள், உதவித் திட்டங்களுக்கு தோள் கொடுக்கும் முகமாக, ஹாங்காங் வாழ் தாய்மார்கள் சென்ற ஆண்டு முதல் தமது மனப்பூர்வமான பங்களிப்பை தாமாகவே முன்வந்து ஆர்வத்துடன் அளித்து வருகின்றனர். எந்தத் தூண்டுதலுமின்றி இக்காரியத்தைச் செய்யும் இவர்கள் என்றென்றும் நன்றிக்குரியவர்களே!
கடந்த ஆண்டில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்கள்:
2011-2012 பருவத்தில் நம் பேரவையின் சார்பில் 4 செயற்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அக்கூட்டங்கள் மூலம் நகர் நலனுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன.
இறையருளால், நடப்பு நிர்வாகக் குழுவினரான எமது இரண்டாண்டு பொறுப்புக் காலம் இன்றுடன் நிறைவுறுகிறது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, அல்ஹம்துலில்லாஹ்! எங்கள் மீது நம்பிக்கை வைத்து - நகர்நல சேவை செய்திட இந்த நல்ல வாய்ப்பினை எமக்களித்த சமுதாயப் பெரியவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
இக்கூட்டத்திலிருந்து புதிய பருவத்திற்கான நிர்வாகப் பொறுப்பை சிரமேற்கவுள்ள அன்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குழுப்பணியாற்றி, நம் பேரவையின் நகர்நலப் பணிகளுக்கு இன்னும் மெருகேற்றி, நம் நகரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாழ்த்திப் பிரார்த்திப்பதோடு, அதற்குத் தேவையான அத்தனை ஒத்துழைப்புகளையும், இதுவரை இருந்ததை விட இன்னும் சிறப்பாக அளித்திட ஆவலுடன் காத்திருக்கிறோம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஹாங்காங் வாழ் காயலர்களிடையே செய்திப் பரிமாற்றம்:
நமதூர் காயல்பட்டினம் மற்றும் ஹாங்காங்கில் அவ்வப்போது நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், பேரவை உறுப்பினர்கள் அனுப்பும் அவசியமிக்க தகவல்கள், செய்திகள், திருமண அழைப்பிதழ்கள், வேலைவாய்ப்புச் செய்திகள், பிற அமைப்புகளிடமிருந்து பெறப்படும் செய்திகள் அழைப்பிதழ்கள் உள்ளிட்டவை உடனுக்குடன் நம் பேரவை உறுப்பினர்களுக்கு பேரவை சார்பில் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல்பாடு அனைவருக்கும் மிகுந்த பயன்தரும் வகையில் அமைந்துள்ளதாக அனைவரும் கருதுகின்றனர்.
வேண்டுகோள்:
இங்கு நமதூரைச் சார்ந்த அதிகமான மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எனினும், இந்த ஆண்டு வரை 88 காயலர்கள் மட்டுமே தம்மை நமது பேரவையில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். எனவே, அனைத்து சகோதரர்களும் நம் பேரவையில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து, நம் நகர்நலப் பணிகள் தொடர நல்லாதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றியறிவித்தல்:
சமுதாயப் பணிகளில் ஒருங்கிணைந்து சேவையாற்றிய நம் பேரவையின் கண்ணியத்திற்குரிய நிர்வாகக் குழுவினருக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும், ஆலோசனைகளை வழங்கிய பெரியவர்களுக்கும், தங்களை ஈடுபடுத்திக் கொண்ட உறுப்பினர்கள், புரவலர்கள், சமுதாயப் பெரியவர்களுக்கும், நம் பேரவையின் செயற்குழுக் கூட்டங்களை நடத்திட மனமுவந்து இடவசதி செய்து தந்த அன்பு உறுப்பினர்களுக்கும்,
நமதூரில் பேரவையின் அறப்பணிகளை ஆர்வத்தோடு நடத்திட ஒத்துழைப்பு நல்கிய காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு (QYSS) மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (IIM) அமைப்பினருக்கும்,
பேரவையின் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு உதவி வருகிற www.kayalpatnam.com, www.kayaltoday.com மற்றும் www.kayalnews.com இணையதளங்களின் நிர்வாகிகளுக்கும் எமது பேரவையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றியுடன் விடைபெறுகிறோம்...
கருணையுள்ள அல்லாஹ்வின் தன்னிகரற்ற - அளப்பெருங்கிருபையால், எமது பொறுப்புக்காலமான இரண்டாண்டு பருவத்தை நிறைவு செய்து, விடைபெறும் தருணத்தில் இருக்கின்றோம்.
எங்களின் பொறுப்புக் காலத்தில், நாங்கள் அறிந்தோ, அறியாமலோ தவறிழைத்திருப்பின், எங்கள் உளத்தூய்மையை மட்டும் கருத்திற்கொண்டு அனைவரும் எங்களை மன்னித்து பொறுத்தருளுமாறு உளமுருக வேண்டுகிறோம்.
இறைப்பொருத்தம் ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு செயலாற்றி வரும் நம் பேரவையின் அறப்பணிகளை வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக, ஆமீன்.
இன்ஷாஅல்லாஹ், இனி வருங்காலங்களிலும் நமது தூய பணிகளைத் தொடர்வோம்... இறையருளைப் பெறுவோம்...
புதிய பொறுப்பாளர்களுக்கு நம் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இன்னும் சிறப்பான ஒத்துழைப்புகளை வழங்குவதன் மூலம், நாமனைவரும் ஒரே குடும்பமாக செயல்பட்டு, அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் முன்னுதாரணமானோராய்த் திகழ்ந்திட, அனைத்திலும் சிறந்த அல்லாஹ்விடம் ஆவலைத் தெரிவித்தவர்களாக, எமது பொறுப்புகளைக் கையளித்து நிறைவு செய்கிறோம், ஜஸாக்குமுல்லாஹு கைரா...
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.
இவண்,
எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ்,
தலைவர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங்.
30.06.2012.
இவ்வாறு காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 2012-2013ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசகங்கள் அமைந்திருந்தது.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 15:30/08.07.2012] |