2011 - 2012 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்பில் - தமிழகத்தில் உள்ள நகர்புற பகுதிகளுக்கு, ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் (INTEGRATED URBAN DEVELOPMENT MISSION - IUDM) அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக - ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும் - குடிநீர் விநியோகம், மழை நீர் வடிகால் திட்டம், கழிவு நீர் வடிகால் திட்டம், சாலை அமைத்தல், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை 2011 - 2012 ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. அதில் காயல்பட்டினத்திற்கு குடிநீர் விநியோக திட்டத்திற்காக 2 கோடி ரூபாயும், குப்பைகள் அகற்றும் திட்டத்திற்காக 50 லட்ச ரூபாயும் (ஆக மொத்தம் 2.5 கோடி ரூபாய்) ஒதுக்கியுள்ளது.
ஒதுக்கப்பட்ட தொகையில் 75 லட்சம் - நகராட்சி வங்கி கணக்குக்கு மார்ச் மாதம் அனுப்பப்பட்டது.
மீதி 1.75 கோடி ரூபாய் - ஜூன் மாதம் - காயல்பட்டினம் நகராட்சியின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காயல்பட்டினத்தில் - பொன்னன்குறிச்சி கிராமத்தில் இருந்து குடிநீர் வழங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதில் 24 கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 கோடி ரூபாய் மாநில அரசும், 3 கோடி ரூபாய் காயல்பட்டினம் நகர்மன்றமும் வழங்கவுள்ளது. மாநில அரசின் பங்கான 3 கோடியில் தான் தற்போது 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மீதி 50 லட்சம் ரூபாய் - சமீபத்தில் டெண்டர் நிறைவுபெற்ற - திடக்கழிவு மேலாண்மை திட்ட கொள்முதலுக்கு என தெரிகிறது. |