2-12-2011 அன்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ௦ காயல்பட்டணம்.காம், காயல்பட்டினம் நகராட்சியின் பொதுத் தகவல் அலுவலரிடம்
(PUBLIC INFORMATION OFFICER) கீழ்க்காணும் கேள்வியை - அதற்குரிய கட்டணமான 10 ரூபாயை COURT FEE மூலம் செலுத்தி - கேட்டிருந்தது.
(1) தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் பிரிவு 250 படி - தொழிற்சாலைகள், அவைகள் செயல்படும் நகராட்சியிடம் - உரிமம்
பெறவேண்டும். அவ்வாறு - DCW நிறுவனம் நகராட்சியிடம் உரிமம் பெற்றுள்ளதா?
(2) ஆம் எனில் அந்த உரிமத்தின் நகலினை தரவும்.
இந்த இரு கேள்விகளில் முதல் கேள்விக்கு ஆம் என்றும், இரண்டாம் கேள்விக்கு - இது மூன்றாம் நபர் தகவல் என்பதால், நிறுவனத்தின் (DCW)
சம்மதம் பெற்றே பதில் தர முடியும் என்றும் நகராட்சி சார்பாக 21-12-2011 தேதியிட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
உரிமம் என்பது மூன்றாம் நபர் தகவல் ஆகாது என்பதால் - காயல்பட்டணம்.காம், காயல்பட்டினம் நகராட்சியின் மேல்முறையீடு அதிகாரியான
(APPELLATE AUTHORITY) - ஆணையரிடம் 27-2-2012 தேதியிட்ட கடிதம் மூலம், முறையிட்டது.
மேல்முறையீடு அதிகாரியிடம் எந்த பதிலும் உரித்த காலத்தில் கிடைக்கப்பெறாததால் - 18-4-2012 தேதியிட்ட கடிதம் மூலம், சென்னையில் உள்ள
தமிழக அரசின், தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் - முறையீடு சமர்ப்பிக்கப்பட்டது.
முறையீட்டை பதிவு செய்துக்கொண்ட தகவல் ஆணையம் - ஜூன் 25 அன்று விசாரணை மேற்கொண்டது. விசாரணையை தொடர்ந்து - உரிமம், மூன்றாம் நபர் தகவலாக கருதப்பட முடியாது என்றும், கேட்கப்பட்ட தகவலை 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் காயல்பட்டினம் நகராட்சிக்கு தகவல் ஆணையம் ஆணையிட்டது.
மேலும் கால தாமதத்திற்கும், மூன்றாம் தரப்பு தகவல் என தகவல் தர மறுத்ததற்கும், பிற காரணங்களுக்கும் - ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என காயல்பட்டினம் நகராட்சியின் பொதுத்தகவல் அலுவலரை தமிழ்நாடு தகவல் ஆணையம் வினவியது.
ஆணையத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, தற்போது காயல்பட்டினம் நகராட்சியிடம் இருந்து பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.
காயல்பட்டணம்.காம் இதுவரை 10 க்கும் மேற்பட்ட கடிதங்கள் மூலம், காயல்பட்டினம் நகராட்சியிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரியுள்ளது. அவைகளுக்கு எந்த பதிலும் காயல்பட்டினம் நகராட்சியிடம் இருந்து இதுவரை அனுப்பப்படவில்லை. அவைகள் குறித்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. |