தமிழகத்தின் பல பகுதிகளில் ப்ளாஸ்டிக் சாலை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட வண்ணார்குடி கடைத்தெருவில் ரூபாய் 5 லட்சம் செலவு மதிப்பீட்டிலும், அருணாச்சலபுரத்தில் ரூபாய் 2.10 லட்சம் செலவு மதிப்பீட்டிலும், கொச்சியார் தெருவில் ரூபாய் 3.5 லட்சம் செலவு மதிப்பீட்டிலும் ப்ளாஸ்டிக் சாலை போடப்பட்டு வருகிறது.
வண்ணார்குடி கடைத்தெருவில் 06.07.2012 அன்று புதிய சாலை அமைக்கப்பட்டது.
அருணாச்சலபுரத்தில் 10.07.2012 அன்று புதிய சாலை அமைக்கப்பட்டது.
கொச்சியார் தெருவில் 11.07.2012 அன்று புதிய சாலை அமைக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி பணி மேற்பார்வையாளர் செல்வமணி, சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த சாலை அமைப்புப் பணிகளை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஏ.லுக்மான், எம்.எம்.டி.பீிவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் ஆகியோர் பார்வையிட்டனர்.
ப்ளாஸ்டிக் சாலை புதிய அறிமுகம் என்பதால், நகராட்சியில் தீர்மானமியற்றப்பட்ட பின்னர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அழைப்பின் பேரில், ப்ளாஸ்டிக் சாலையைக் கண்டுபிடித்து - அதற்காக பேடண்ட் - பாதுகாப்பு உரிமையை வைத்துள்ள டாக்டர் வாசுதேவன் மற்றும் குழுவினர் சில மாதங்களுக்கு முன், காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகை தந்து, ப்ளாஸ்டிக் சாலையின் தன்மைகள் மற்றும் பயன்கள் குறித்து விளக்கமளித்ததும், ப்ளாஸ்டிக் சாலை அமையவுள்ள இடங்களைப் பார்வையிட்டு, தகுந்த ஆலோசனைகளை வழங்கிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. |