காயல்பட்டினத்தில், நகராட்சி மன்ற வளாகம் உள்ளிட்ட பொது இடங்களிலும், அனைத்துத் தெருக்களிலும் தெரு நாய்கள் நாளுக்கு நாள் பெருக்கமடைந்து, இரவு நேரங்களில் வீதிகளைக் கடந்து செல்வோருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.
விளைவை உணர்ந்த பொதுமக்கள் அவரவர் பகுதி நகர்மன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டதையடுத்து, பல நகர்மன்றக் கூட்டங்களில் இதுகுறித்த கோரிக்கை முன்வைக்கப்படட்து.
தெரு நாய்களைக் கொல்ல அனுமதியில்லை எனினும், அவற்றுக்கு கருத்தடை செய்து இனப்பெருக்கத்தைத் தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு, நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சியில் தீர்மானிக்கப்பட்டது.
துவக்கமாக நகரில் அநாதையாகத் திரியும் 300 தெரு நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 28.06.2012 வியாழக்கிழமையன்று மதியம் 02.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி மன்ற வளாகத்தின் வடகிழக்குப் பகுதியிலமைந்துள்ள கொட்டகையில், காயல்பட்டினம் நகராட்சி - ராஜேஸ்வரி கோசாலா ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், நகரில் அநாதையாக சுற்றித் திரிந்த 20 நாய்கள் வாகனங்களில் துவக்கமாக பிடித்து வரப்பட்டு கருத்தடை செய்யப்பட்டது.
படிப்படியாக 300 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவுள்ளதாகவும் ராஜேஸ்வரி கோசாலா ட்ரஸ்ட் நிறுவனத்தினர் தெரிவித்தனர். |