தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 15580 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு பணியமர்த்தப்பட்டவர்களும், புதியதாக ஆசிரியர் கல்வி மற்றும் பட்டயக் கல்வி முடித்தவர்களும் கட்டாயமாக தகுதித் தேர்வு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு வியாழக்கிழமை (ஜூலை12) நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டாம் தாள் தேர்வும் எழுத வேண்டும்.முதல் தாள் தேர்வு காலை 10.30 மணிக்குத் தொடங்கி 12.00 மணி வரையிலும், இரண்டாம் தாள் தேர்வு மதியம் 02.20 மணிக்குத் தொடங்கி 04.00 மணி வரையிலும் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 26 தேர்வு மையங்களில் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களும் உள்ளன. தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 4008 பேரும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 2745 பேரும் முதல் தாள் தேர்வு எழுதுகின்றனர்.
இதேபோல, தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 6054 பேரும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 2773 பேரும் இரண்டாம் தாள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 15,580 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷி்ஷ்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும், தேர்வு மையங்ளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உயர் கல்வித் துறை இணை இயக்குநர் உமா தலைமையாசிரியர்கள் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதையொட்டி, இன்று பள்ளிக்கூடங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |