வழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்‘ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் ஆகியோரிணைந்து வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமை போன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு ரூபாய் ஐந்தாயிரம் மட்டும் (ரூ.5,000) செலவு மதிப்பிடப்பட்டுள்ளது.
நமது இப்பள்ளிவாசலைப் பொருத்த வரை, இதன் சுற்றுப்புறத்தில் வாழும் ஜமாஅத் மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மீனவ குடும்பத்தினர். எனினும், அவரவர் சக்திக்குட்பட்டு நம் ஜமாஅத்தின் நலத்திட்டப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.
இங்குள்ள மக்களுக்கு மார்க்க அடிப்படை அறிவு தற்போதுதான் முறைப்படி ஊட்டப்பட்டு வருகிறது. போதிய மார்க்க விழிப்புணர்வை இதுவரை முழுமையாக பெற்றிடாத இம்மக்களுக்குத் தேவையான - மார்க்கம் தொடர்பான அனைத்து திட்டங்களும் நம் பள்ளியின் மூலமே செய்யப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், ஆண்டுதோறும் ரமழான் காலங்களில் இம்மக்களை - குறிப்பாக மாணவ-மாணவியரை தினமும் நோன்பு நோற்க ஊக்கப்படுத்துவதோடு, அவர்களை பள்ளிக்கே வரவழைத்து நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன் அவர்களின் பெற்றோர் நோன்பு துறப்பதற்காக - பள்ளியில் தயாரிக்கப்பட்ட நோன்புக் கஞ்சி - அவர்களின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று வினியோகிக்கப்பட்டு வருகிறது.
எனவே, அன்பான நமதூர் பெரியோர்களே, தாய்மார்களே! இப்பள்ளியை உங்கள் மஹல்லாவாக நினைத்து, கடமை உணர்வுடன் குறைந்தபட்சம் ஒருநாள் செலவை ஏற்பதன் மூலம், கருணையுள்ள ரஹ்மான் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையைப் பெற்றிட அன்புடன் வேண்டுகிறோம்.
கடந்த ஆண்டு நாம் இதே இணையதளத்தில் முறையிட்டதையடுத்து - வேக வேகமாக அனுசரணைகள் வந்து சேர்ந்தன. தேவையான அனுசரணை கிடைக்கப்பெற்றதும் நாமே அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.
அதுபோல, இவ்வாண்டும் உங்கள் அனுசரணைகளை முந்திக்கொண்டு வழங்கி எமது சிரமங்களைக் குறைத்திடுமாறு அன்புடன் வேண்டுவதோடு, 30 நாட்களுக்கும் தேவையான அனுசரணைகள் முழுமையாகப் பெறப்பட்டு விட்டால், இதே இணையதளத்தில் அதுகுறித்து தங்கள் யாவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு அறியத் தருகிறோம்.
கருணையுள்ள அல்லாஹ் நம் யாவரின் நற்கருமங்களையும் கபூல் செய்து, ஈருலக நற்பேறுகளை நமக்கு நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
அனுசரணை செய்ய விரும்புவோர்,
செயலாளர் ‘முத்துச்சுடர்‘ என்.டி.இஸ்ஹாக் லெப்பை (கைபேசி எண்: +91 99653 34687)
பொருளாளர் கோமான் மீரான் (கைபேசி எண்: +91 97903 09149)
ஆகியோரைத் தொடர்புகொண்டு, உங்கள் மேலான அனுசரணையை உறுதி செய்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு, கடற்கரை முஹ்யித்தின் பள்ளியின் தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்‘ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் ஆகியோரிணைந்து வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |