காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட வீதிகளில், குப்பை சேகரிக்கும் வாகனம் வரும் வரை பொறுமையில்லாமல் தம் வீட்டுக் குப்பைகளை பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் கோட்டைச் சுவர்களுக்கருகில் கொட்டும் பொதுமக்கள் ஒருபுறமிருக்க, அவற்றை அள்ளிச்செல்ல வேண்டிய துப்புரவுப் பணியாளர்கள், ஒதுக்குப் புறங்களிலுள்ள குப்பைகளை அங்கேயே தீயிட்டுக் கொளுத்துவது வழமையாகிப் போனது.
இதுகுறித்து ஏற்கனவே காயல்பட்டணம்.காம் பல முறை செய்தி வெளியிட்டுள்ளதோடு மட்டுமின்றி, நகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 14.07.2012 (நேற்று முன்தினம்) காயல்பட்டினம் பரிமார் தெருவின் தென்முனையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை நகராட்சி துப்புரவுப் பணியாளர் ஒருவர் அந்த இடத்திலேயே தீயிட்டுக் கொளுத்தினார்.
எரிக்கப்பட்ட அந்த குப்பையில் ஏராளமான ப்ளாஸ்டிக் பைகள் உட்பட சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ஏராளமான கழிவுப் பொருட்கள் உள்ளடக்கம்.
கொளுந்துவிட்டு எரியத் துவங்கிய நெருப்பை, சிறிது நேரம் அருகிலிருந்த வீட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தண்ணீர் ஊற்றி அணைத்தார்.
எவ்வளவோ கட்டுப்படுத்தியும் சில பொதுமக்கள் அவ்விடத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்துவதேயில்லை என்றும், பலமுறை தெரிவித்தும் - நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இங்குள்ள குப்பைகளை எரித்துவிட்டுச் செல்வதே வழக்கமாக உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படம்:
Y.M.முஹம்மத் தம்பி,
ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |