நேற்று காலையில் நடைபெற்ற - “ஊழலற்ற காயலை நோக்கி - TOWARDS CORRUPTION-FREE KAYAL“ நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை துவக்கப்பட்டுள்ளது. கருத்தரங்க நிகழ்வுகள் குறித்த விபரம் பின்வருமாறு:-
ஊழலற்ற காயலை நோக்கி...
“ஊழலற்ற காயலை நோக்கி” - 'TOWARDS CORRUPTION-FREE KAYAL' என்ற தலைப்பில், இம்மாதம் 15ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் - இரத்தினபுரி - ஏ.கே.எம். நகரில் அமைந்துள்ள துளிர் கேளரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்க நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உமர் ஒலி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து கே.எம்.டி.சுலைமான் வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினத்தில் ஊழல் எதிர்ப்பு செயல்திட்டங்கள்:
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய பல்லாக் அப்துல் காதிர் நெய்னா கருத்தரங்க அறிமுகவுரையாற்றினார். “காயல்பட்டினத்தில் ஊழல் எதிர்ப்பு செயல்திட்டங்கள்” என்ற தலைப்பின் கீழ் அமைந்திருந்த அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:-
ஊர் அமைப்பு:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் - ஒரு பாரம்பரியமிக்க ஊர். 2011 ஆம் ஆண்டு சென்சஸ் கணக்குப்படி 40,000 மக்கள் இங்கு வாழ்கிறார்கள். ஆண்களைவிட பெண்களே இங்கு அதிகம்... பெருவாரியாக பார்த்தால் - ஆண்கள் பலர் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகிறார்கள்…
காயல்பட்டினத்து மக்கள் உள்ளூரிலேயே நேரடியாக சந்திக்கும் அரசு இயந்திரங்கள் என சிலவற்றைக் கூறலாம்...
நகராட்சி, கிராம அலுவலகம் (VAO), சார்பு பதிவு மையம் (Registration துறை), ரேசன் கடைகள், மின்சாரத் துறை, தொலைப்பேசி துறை, அரசு மருத்துவமனை, தபால் நிலையம், அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் ...
இது தவிர மாநில, மாவட்ட, தாலுக்கா தலை நகரங்களில் உள்ள அலுவலகங்கலான - தாசில்தார் அலுவலகம், போக்குவரத்து அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் போன்ற அலுவலங்ககளை கூறலாம்...
காயல்பட்டினத்தில் உள்ள இல்லங்களையும், உடைமைகளையும் கவனிக்கும் பொறுப்பு பல நேரங்களில் பெண்களிடமே விழுகிறது... பெண்கள் உட்பட - நம்மில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெற்றிருந்தாலும், Functional Literacy எனப்படும் - அன்றாடும் நாம் பயன்படுத்தும் அரசு சேவைகள், பிற சேவைகள் போன்ற தகவல்களை நாம் அனைவரும் முழுமையாக பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை…
எவ்வாறு லஞ்சம் கொடுக்காமால் முறையாக குடும்ப அட்டை (Ration Card) பெறுவது, எவ்வாறு லஞ்சம் கொடுக்காமால் முறையாக கட்டிட அனுமதி பெறுவது, எவ்வாறு லஞ்சம் கொடுக்காமால் முறையாக இதர சான்றிதழ்கள் பெறுவது போன்ற தகவல்கள் நாம் அனைவரும் அறிந்திருப்பதில்லை, அறியும் முயற்சிகள் செய்வதில்லை…
அதன் விளைவு - நம்மையும், நமது பெண்களையும் - பொறுப்பில் இருக்கும் சில அலுவலர்களும், இடைத்தரகர்களும் (Brokers) ஏமாற்றி லஞ்சம் கொடுத்து சேவைகள் பெறச் செய்து வருகின்றனர்....
அறிந்தோ, அறியாமலோ - பொறுமை இல்லாமாலும், வழிமுறைகளை முழுமையாக நாம் பின்பற்றாமலும், மக்களாகிய நாமும் பல நேரங்களில் லஞ்சத்திற்குத் துணை போய் விடுகிறோம்...
ஊழல் - லஞ்சத்தின் பல்வேறு வடிவங்கள்...:
ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் அகராதி விளக்கங்கள் என்று ஒன்று உண்டு. அவற்றை நாம் அனைவரும் அறிவோம்…
மற்றொரு கோணத்தில் பார்த்தால் மக்கள் வரிப்பணம் முறைக்கேடாகப் பயன்படுத்தப்படுவது, வீண் விரயம் செய்யப்படுவது போன்ற செயல்களும் ஊழல்தான்...
லஞ்சம் - ஊழல் இன்று பல வடிவங்களில் உள்ளது...
சான்றிதழ் போன்ற ஒரு சேவையை பெற வழங்கும் தொகை லஞ்சம்...
2000 பேர் வேலை செய்யும் தொழிற்சாலையில் 500 பேருக்கு மட்டும் தொழில் வரி பெற்றிட உதவிசெய்வது ஊழல்…
6 லட்ச ரூபாய் பொருளை 10 லட்சம் என மதிப்பிட்டு டெண்டர் விட்டு, வித்தியாச தொகையை பலரும் பகிர்ந்து கொள்வது ஊழல்…
குடிநீர் போன்ற ஒரு நாட்டின் சொத்தை கள்ளச் சந்தையில் விற்க முற்படுவதும் ஊழல்…
இப்படி பல வழிகள்.... இவற்றை பொறுமையாகவும், கடமை உணர்வோடும் கண்காணிப்பது நமது உரிமை மட்டுமின்றி கடமையும் கூட...
ஊழல் எதிர்ப்பு இயக்க காயல்பட்டினம் கிளையின் பணிகள்:
காயல்பட்டினத்தில் இன்று உதயமாகும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற இந்த அமைப்பு, சென்னையில் இருந்துகொண்டு தமிழகம் முழவதும் பணியாற்றி வரும் அமைப்பின் உறுதுனையோடும், வழிகாட்டுதலோடும் பல பணிகளை - உங்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு செய்திட ஆயத்தமாக உள்ளது ...
ஊழல் எதிர்ப்பு அமைப்பு, லஞ்சம் கொடுக்காமல் - மக்கள் சேவைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகாம்களை - தேவைப்படும்போதெல்லாம், நகரின் அனைத்து பகுதிகளிலும் நடத்தும்...
மேலும் இந்த அமைப்பு, அரசு சேவைகளை லஞ்சம் வழங்காமல் எவ்வாறு பெறுவது என்பன போன்ற தலைப்புகளில் கையேடுகளும் (Guides) வெளியிடும்...
மேலும் மத்திய அரசால் 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையிலுள்ள - தகவல் அறியும் உரிமை சட்டத்தை (RIGHT TO INFORMATION ACT) பயன்படுத்தி, நகராட்சி, போக்குவரத்து துறை போன்றவற்றில் எவ்வாறு தகவல்களைப் பெறுவது என்பது குறித்து பயிற்சிகள் வழங்கும்...
மேலும் - நீங்கள் அரசிடம் இருந்து அறிந்தக்கொள்ள விரும்பும் தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலமும் பெற உதவியும் செய்யும். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் - தகவல்கள் பெற - தனிக்குழு அமைக்கப்பட்டு செயல்புரியும் …
மேலும் - லஞ்சம் / ஊழல் போன்றவற்றில் ஈடுபடுவோரைக் கண்காணித்து அவர்களை DVAC (DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION) போன்ற கண்காணிப்பு அமைப்புகளுக்கு அடையாளம் காட்டும்...
அவ்வாறு லஞ்சம் வாங்குவோரை பொதுமக்கள் அடையாளம் காட்டும் பட்சத்தில் (Whistle Blowing) அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வேலையையும் இவ்வமைப்பு செய்யும்...
தனியார் துறையிலும் ஊழல்கள் உள்ளன... உதாரணாமாக தொழிற்சாலைகள், அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகத்தொகை வசூலிக்கும் பள்ளிக்கூடங்கள் என அதன் பட்டியல் நீளம்... இறுதியாக சில வார்த்தைகளை கூறி நான் எனது உரையை நிறைவு செய்கிறேன்....
தனிமனித விருப்பு-வெறுப்பிற்கிடமில்லை...
இன்று உதயமாகும் இந்த கிளை அமைப்பு தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்படும் ஓர் அமைப்பாகும். இதில் தனிமனித விருப்பு-வெறுப்புக்கு எந்த விதத்திலும் இடமளிக்கப்படாது.
லஞ்சம் ஊழல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது என்று மனம் தளர்ந்து - தான் விரும்பாவிட்டாலும், லஞ்சம் - ஊழல் ஆகியவற்றைக் கண்டும், காணாமல் இருப்போருக்கு, இந்த அமைப்பு வழி காட்டும்! பலம் சேர்க்கும்!! துணை நிற்கும்!!!
ஒரு நல்ல குடிமகனாக இருந்து - அரசுக்கு வரியும் செலுத்திவிட்டு, அரசு மற்றும் அரசு சார்ந்த மற்ற அலுவலங்களில் தனது தேவைகளை - விரும்பியோ, விரும்பாமலோ - வேறு வழியில்லாமல், வேறு வழி தெரியாமல் - லஞ்சம் கொடுத்தே நிறைவேற்றி வரும் சாதாரண மக்களுக்கு - இந்த அமைப்பு வழி காட்டும்! பலம் சேர்க்கும்!! துணை நிற்கும்!!!
மக்களின் வரிப்பணம் மூலமாகவும், நாட்டின் இதர நிதி ஆதாரங்கள் மூலமாகவும் - அரசு நிறைவேற்றும் வெவ்வேறு பணிகளில் - எந்த தயக்கமும் இன்றி, எந்த அச்சமும் இன்றி - இது தான் விதி, இது தான் யதார்த்தம் என - அரசு கஜானாவை சுரண்டவோரை இந்த அமைப்பு கண்காணிக்கும், அடையாளம் காட்டும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்...
இவ்வாறு, நிகழ்ச்சி நெறியாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா தனதுரையில் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர் ஏ.நஃபீஸ் அஹ்மத் உரை:
அவரைத் தொடர்ந்து, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.நஃபீஸ் அஹ்மத் சிறப்புரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-
காயல்பட்டினத்திற்கு புதியவனல்ல!
காயல்பட்டினத்திற்கு நான் புதிதானவனல்ல! ஆண்டுதோறும் இந்த ஊரில் நடைபெறும் ஸஹீஹுல் புகாரிஷ் ஷரீஃப் அபூர்வ துஆவிற்கு - கடந்த எட்டாண்டுகளாக தொடர்ந்து வருகை தந்துகொண்டிருக்கிறேன்... இவ்வாண்டும் வருகை தந்தேன்... காலையில் வந்து, மாலையில் புறப்பட்டு விடுவேன்...
வித்தியாசமான சந்திப்பு!
ஆனால், தற்போதைய எனது இந்த வருகை அதிலிருந்து சற்று வேறுபட்டது... இதுநாள் வரை நான் நானாகவே வந்து செல்வேன்... இன்று உங்களில் பலருடன் அறிமுகத்தைப் பெறும் நல்லதொரு மக்கள் சேவை நிகழ்ச்சியில் பேசுவதற்காக வந்துள்ளேன்... இதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்...
ஊழலின் ஊற்றுக்கண் உருவாகும் முக்கிய இடங்களான - காவல் நிலையம், சினிமா கொட்டகை, மதுபானக் கடை இந்நகரில் இல்லை என்பதே ஒரு பெரும் சாதனைதான்!
இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் - 90 வயது நிரம்பிய பெரியவர் குப்புராஜ் அவர்களால் நல்ல எண்ணத்துடன் துவக்கப்பட்டு இன்றளவும் இயங்கி வருகிறது...
காவல்துறை, நீதித்துறை, அமைச்சர்கள் தொடர்பான துறைகள், நகராட்சி நிர்வாகங்கள் என இன்று அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழலும் - லஞ்சமும் இணைபிரியாமல் வேரூன்றிக் கிடக்கின்றன...
லஞ்சம் வாங்குவதுதான் குற்றம் என்று முற்காலத்தில் சொல்ல வேண்டியிருந்தது... ஆனால் இன்றைய அவசர உலகத்தில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க பொதுமக்களில் பெரும்பாலோர் அதிகளவில் ஆர்வங்காட்டி வருவதால், லஞ்சம் கொடுப்பதும் குற்றமே என்று இன்று நாம் சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது...
சுய கட்டுப்பாடு...
நமது இந்திய நாட்டையே லஞ்சம் - ஊழலற்றதாக மாற்றிட நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை... அதே நேரத்தில், அதன் துவக்கமாக - நான் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன்... வாங்கவும் மாட்டேன்... லஞ்ச - ஊழலுக்குத் துணை போகவும் மாட்டேன்... என முதலில் நாமனைவரும் சுய உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்...
அவ்வாறு நாம் உறுதி எடுத்துக்கொண்டால், அதைக் கடைப்பிடிப்பதற்கு மிகவும் பொறுமை அவசியம்... அரசுத் துறையில் ஒவ்வொரு காரியமும் ஒரு குறிப்பிட்ட கால அளவில்தான் நடைபெறும்... அதற்கு முன்பாகவே நாம் அவசரப்பட்டு அவற்றைப் பெற்றிட நினைக்கும்போதுதான் இந்த லஞ்சம் என்ற பாவத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது... அரசுத் துறையில் அனைத்துக் காரியங்களுக்கும் சட்டம் - விதிமுறைகள் உள்ளன... எனவே, காரியம் நடக்காமலே போய்விடுமோ என்ற அச்சம் நமக்குத் தேவையில்லை...
ஒரு தனி நபர் லஞ்ச - ஊழலுக்கு எதிரான செயல்திட்டத்துடன் செயல்பட்டால் அவர் சார்ந்த அனைத்தும் நன்றாக அமையும்... ஒரு வார்டு உறுப்பினர் லஞ்ச - ஊழலுக்கு எதிரான எண்ணத்துடன் செயல்பட்டால், அந்த வார்டே லஞ்ச - ஊழலற்றதாக மாறும்...
அமைப்பு துணை நிற்கும்!
இன்று, காயல்பட்டினத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை துவக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... பொதுமக்களே! உங்களுக்கு நடைபெற வேண்டிய நியாயமான காரியங்களில் லஞ்சம் - ஊழல் எட்டிப் பார்த்தால், அதனை இந்த அமைப்பின் இந்த ஊர் கிளை நிர்வாகிகளிடமோ அல்லது தலைமையிடமோ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முறையிடலாம்... அதற்கேற்ப வழிகாட்டி - உங்களுக்கு நியாயம் கிடைத்திட இந்த அமைப்பு இயன்றளவுக்கு எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...
இவ்வாறு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.நஃபீஸ் அஹ்மத் உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் எஸ்.எம்.அரசு உரை:
அடுத்து, தமிழக அரசு பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளரும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் பொதுச் செயலாளருமான எஸ்.எம்.அரசு உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-
நேரந்தவறாமை...
இந்நிகழ்ச்சியை 10.30 மணிக்கு சரியாகத் துவக்க வேண்டும் என்று நான் அறிவுரை வழங்கினேன்... அதனைக் கருத்திற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நிகழ்ச்சி துவங்கும் நேரம் வந்தவுடன் துடித்த துடிப்பைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்... அனைத்து ஏற்பாடுகளுடனும் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்க ஆயத்தமாக இருந்த நிலையிலும், பொதுமக்கள் வழமை போல தாமதமாக வந்த காரணத்தால் நிகழ்ச்சியும் தாமதமாகிப் போனது...
காலம் பொன் போன்றது... நேரந்தவறாமையை நாம் சரியான முறையில் பழக்கப்படுத்திக் கொண்டாலே நாட்டிலுள்ள பிரச்சினைகளில் பாதியளவு தானாகவே தீர்ந்து போகும்...
நல்ல தலைமையின் வழிகாட்டல்...
இந்த இயக்கத்தைத் துவக்கி எங்களை வழிநடத்தும் 90 வயது நிறைந்த திரு. குப்புராஜ் அவர்கள் - இன்று இந்நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொள்ள வருவதைத் தெரிவித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்... தற்போது அவர்களின் எண்ணமெல்லாம் காயல்பட்டினத்தைச் சுற்றியே இருக்கும்... நாங்கள் சென்னை திரும்பிய உடன் அவர்கள் எங்களிடம் முதல் கேள்வியே இக்கருத்தரங்கத்தைப் பற்றித்தான் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்...
இந்நிகழ்ச்சிக்குக் காரணமானோர்...
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், இந்த ஊரிலுள்ள சூழலைப் பற்றி எங்கள் மனதில் எளிதில் புரியும் வகையில் விளக்கிய விதம் எங்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது... ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, இந்த ஊர் லஞ்ச - ஊழலற்ற ஊராக மாற, இக்கருத்தரங்கின் ஏற்பாட்டாளர்கள் பெரும் பங்காற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...
இந்த ஊரில் கருத்தரங்கத்தை நடத்த வேண்டும் என எங்களை அணுகியபோது, அங்கு குறைந்தபட்சம் ஒரு இருபது பேராவது உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்தனுப்பி, அவர்கள் மூலம் எங்களை அழைக்க முன்வாருங்கள் என்று நாங்கள் சொன்ன மறுகணமே, “இருபது என்ன சார்? இருநூறு உறுப்பினர்களுக்கும் மேல் எங்களூரிலிருந்து இதற்காக ஆயத்தமாகவே உள்ளனர்” என்று கூறி, இரண்டே தினங்களில் இருபது படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியும் வைத்துவிட்டனர்... இதுவே போதும், இவர்கள் நன்றாகச் செயல்படுவார்கள் என்பதைச் சொல்வதற்கு!
இந்த அமைப்பின் செயற்பாடுகள் ஊழல் - லஞ்சத்தை எதிர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டதாகவே உள்ளது... எனினும், என்னவோ இந்த அமைப்பைத் துவக்கி செயல்படுத்திவிட்ட காரணத்தாலேயே ஊழல் ஒழிந்துவிடும் - அல்லது ஊழலை ஒழித்துவிட்டோம் என்று நாம் சொல்லிவிட முடியாது... இந்த நாட்டிலிருந்து லஞ்ச - ஊழலை முற்றிலும் ஒழிப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகுமோ தெரியாது...
லஞ்ச - ஊழலை வெறுக்கவாவது வேண்டும்...
லஞ்ச - ஊழலை ஒழிக்கிறோமோ, இல்லையோ - அதை வெறுக்கவாவது நாம் முன்வர வேண்டும்... அவ்வாறு வெறுப்புணர்வூட்டி - விழிப்புணர்வடையச் செய்யும் பணியை இந்த அமைப்பு நன்றாகவே செய்து வருகிறது...
இந்த அமைப்பின் செயல்பாடுகளின் காரணமாக, தவறு செய்யும் அரசு அதிகாரிகள் - அலுவலர்கள் திருந்துகிறார்களோ, இல்லையோ... குறைந்தபட்சம் நம்மைத் தட்டிக்கேட்க சிலர் இருக்கிறார்கள் என்ற அச்ச உணர்வோடு தவறு செய்ய தயக்கமாவது காட்டுவர்...
பொதுமக்களும் தமக்குள் நிறைய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்... நம்மில் பலருக்கு, இலவசமாகவோ - குறைந்த கட்டணத்திலோ பெறப்பட வேண்டிய அரசு தொடர்பான பணிகளுக்கு கூடுதல் பணம் கேட்கப்படும்போது, அது எதற்காக கேட்கப்படுகிறது என்று கூட தெரிவதில்லை... இந்த வேலைக்காக நாம் போனோம்... அவங்க பணம் கேட்டாங்க... கொடுத்தோம்... கொடுத்தாத்தானே காரியம் நடக்கும்? என்று தாம் கொடுத்த பணம் லஞ்சம் என்பது கூட தெரியாத நிலையில் பொதுமக்கள் கொடுத்துவிடுகின்றனர்... இப்போக்கை நம்மைப் போன்ற இயக்கத்தினர்தான் மாற்ற முயற்சிக்க வேண்டும்...
ரசீது பெறாமல் காசு கொடுக்காதே!
சுருக்கமாகச் சொல்வதென்றால், கேட்கும் பணம் மிகச்சிறிய தொகையாக இருந்தாலும் அதற்கு ரசீது தந்தாக வேண்டும்... ரசீது தராமல் கேட்கப்படும் பணம் சட்டத்திற்குப் புறம்பானது... அதற்குக் கொடுப்பது தவறானது என்று புரிந்து வைத்துக்கொண்டாலே போதும்...
நேர்மையான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா!
இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், அண்மையில் தமிழகத்தின் 234 சட்டமன்ற உறுப்பினர்களில் - இடைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை தொகுதியைத் தவிர இதர உறுப்பினர்கள் அனைவருக்கும் - அவர்களின் நேர்மையை பரிசோதிக்கும் வகையில் 27 கேள்விகளை அனுப்பி, அவர்களது பதிலைக் கேட்டிருந்தோம்... 233 பேரில் வெறும் 4 பேர் மட்டுமே பதிலளித்துள்ளனர்... ஆக, 229 பேர் சொத்தையானவர்களைத்தான் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறோம்... நினைக்கவே வேதனையாக இல்லையா...? பதிலளித்த 4 உறுப்பினர்களுக்கும் சென்னையில் நமது அமைப்பின் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளள பாராட்டு விழாவில், “திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது” வழங்கப்படவுள்ளது...
மக்கள் பிரதிநிதிகளாக நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அவர்களின் கட்சியையோ, கொடியையோ பார்க்கக் கூடாது... மாறாக, அவரது சுய தகுதியைப் பார்க்க வேண்டும்... அதுதான் முக்கியம்!
இந்த நாட்டில், லஞ்சம் - ஊழல் செய்வோரால் கூட சீர்கேடு வந்துவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன்... மாறாக, இவையெல்லாம் தவறு என்று நன்குணர்ந்துள்ள நல்லவர்கள் - நமக்கேன் வம்பு என்று ஒதுங்கியிருப்பதால்தான் நாடு இந்தளவுக்கு சீர்கெட்டுப் போயுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்...
இவ்வாறு, எஸ்.எம்.அரசு உரையாற்றினார். பின்னர், தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் அவர் தலைமைப் பொறியாளராக இருந்தபோது நடைபெற்ற லஞ்ச - ஊழல் குறித்த அனுபவப் பதிவுகளையும் தனதுரையில் பகிர்ந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை:
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் ஏ.நஃபீஸ் அஹ்மத், எஸ்.எம்.அரசு, அவர்களை காயல்பட்டினத்திற்கு அழைத்து வர உறுதுணையாயிருந்த க்ரீன் ப்ரோ நிறுவனத்தின் அதிபர் புகாரீ ஆகியோருக்கு, கருத்தரங்க நிகழ்ச்சியின் தலைவர் உமர் ஒலி சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சித் தலைவர் உமர் ஒலிக்கு, காயல்பட்டினம் ‘மெகா‘ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
க்ரீன் ப்ரோ அதிபர் வாழ்த்துரை:
பின்னர், க்ரீன் ப்ரோ நிறுவனத்தின் அதிபர் புகாரீ சுருக்கவுரையாற்றினார்.
“ஊழலும் - லஞ்சமும் இஸ்லாம் மார்க்கத்தில் என்ன இடத்திலுள்ளது?” என்று அவர் வினவ, அனைவரும் “ஹராம்” (தடுக்கப்பட்டது) என்று உரத்த குரலில் தெரிவித்தனர். பின்னர், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்து, காயல்பட்டினத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளையை அமைத்திட முயற்சிகளை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார்.
“நேர்மை நெறி” மாத இதழ் அறிமுகம்:
பின்னர், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் சார்பில் வெளியிடப்படும் “நேர்மை நெறி” என்ற மாத இதழ் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, பார்வையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
பார்வையாளர் கேள்வி நேரம்:
பின்னர், பார்வையாளர் கேள்வி கேட்க நேரம் வழங்கப்பட்டது. கேள்வி நேரம் நிகழ்ச்சியை, காயல்பட்டினம் ‘மெகா‘ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் ஒருங்கிணைத்தார்.
காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஏ.ஆர்.இக்பால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த தேக் முஜீப், விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ‘நட்புடன் தமிழன்‘ முத்து இஸ்மாஈல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஸதக்கத்துல்லாஹ், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி ஆகியோர் கேள்வி நேரத்தின்போது கேள்விகள் கேட்டனர்.
கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) குறித்த காவல்துறை விசாரணை, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்வதில் உள்ள பிரச்சினைகள், கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒப்புகைச் சீட்டு (Acknowledgemnt) பெறல், நகராட்சி அலுவலர்களின் மக்கள் சேவைக் குறைபாடுகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சிறப்பு விருந்தினர் ஏ.நஃபீஸ் அஹ்மத், எஸ்.எம்.அரசு ஆகியோர் விளக்கமளித்தனர்.
நகர்மன்ற பெண் உறுப்பினர்கள் கவிதை:
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா ஆகியோர், லஞ்ச - ஊழலுக்கெதிராக தொகுத்த கவிதைகளை வாசித்தனர்.
உறுதிமொழி:
பார்வையாளர் கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, லஞ்ச - ஊழலுக்கெதிராக அனைவரும் பின்வருமாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்:-
ஊழல் ஒழிப்பு உறுதிமொழி
தேசப்பற்று மிக்க இந்தியக் குடிமகனாகிய நான், நமது நாடு ஊழலும் - லஞ்சமும் மலியப்பெற்று உலகரங்கில் மிகுந்த ஏளனத்திற்குள்ளாகியிருப்பதைக் கண்டு மிக்க வேதனையடைகிறேன்...
லஞ்சமும் - ஊழலும் சமுதாயத்தைச் சீரழித்து, நாட்டின் முன்னேற்றத்தையும் முடக்குகின்றன என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்...
எனவே, எந்த செயல்பாட்டுக்கும் லஞ்சம் கொடாமலும், கொடுப்பவரை கொடுக்க விடாமலும், லஞ்சம் வாங்குபவரை வாங்க விடாமலும் தடுத்து, உறுதியாக நின்று, நேர்மை நெறி காப்பேன் என்றும், 2020ஆம் ஆண்டில் இந்தியா வலிமைமிக்க பேரரசாக விளங்கத்தக்க வகையில், அரசின் முன்னேற்றத் திட்டங்களை செயலாக்குவதில் முனைந்து ஈடுபட்டு, என்னால் இயன்ற பங்காற்றுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன்...
இவ்வாறு உறுதுிமொழி வாசகம் அமைந்திருந்தது. உறுதிமொழியை பல்லாக் அப்துல் காதிர் நெய்னா முன்மொழிய, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.
தீர்மானங்கள்:
பின்னர், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - முகாம்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்தல்:
பொதுமக்களுக்கு லஞ்ச - ஊழலுக்கெதிரான விழிப்புணர்வூட்டும் செயல்திட்டத்துடன் - அவ்வப்போது சிறப்பு முகாம்கள், பொது நிகழ்ச்சிகளை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியீடு:
லஞ்ச - ஊழலுக்கெதிராகவும், மக்கள் நல செயல்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட அவ்வப்போது பிரசுரங்கள், மடக்கோலைகள், புத்தகங்களை வெளியிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு:
அரசு தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பொதுமக்கள் பெற்றிடும் வகையில், அச்சட்டம் குறித்து பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான வாசகங்கள் முன்மொழியப்பட்டபோது, நிகழ்ச்சியில் பங்கேற்றோர் தக்பீர் முழக்கத்துடனும், கரவொலியுடனும் அதனை ஆமோதித்தனர்.
நன்றியுரை:
நிறைவாக, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றியுரையாற்றினார்.
இக்கருத்தரங்கில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்தே வந்திருப்பதைப் பாராட்டிப் பேசிய அவர், ஒரு வாகனத்தின் இருபக்க சக்கரங்களாக இவர்கள் இணைந்திருந்து, மக்கள் நலப்பணிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஒருவர் ஒரு தீமையைக் கண்டால், அதைக் கையால் தடுக்கட்டும்! அல்லது நாவால் தடுக்கட்டும்!! அல்லது மனதளவிலாவது வெறுத்து ஒதுங்கட்டும் என்று இஸ்லாம் மார்க்கம் கூறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த நெறிமுறைப்படி வாழவேண்டியது நம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று தெரிவித்துவிட்டு, அனைவருக்கும் கவிதை வடிவில் நன்றி கூறி தனதுரையை நிறைவு செய்தார்.
நிறைவாக, எஸ்.கே.ஸாலிஹ் துஆ பிரார்த்தனை செய்ய, ஸலவாத், கஃப்ஃபாராவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் கருத்தரங்க நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
கலந்துகொண்டோர்:
இக்கருத்தரங்கில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அவரது கணவர் ஷேக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பிர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், பாக்கியஷீலா, கே.ஜமால், ஏ.அஜ்வாத் மற்றும் ஹாஜி டி.எம்.எஸ்.சுல்தான், மீசை முஹ்யித்தீன், ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஹாஜி எஸ்.ஓ.கியாது, ஏ.பி.ஷேக், ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், ஹாஜி மலங்கு, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீ, சீனாஷ், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், காயல்பட்டினம் நல அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன், வி.டி.என்.அன்ஸாரீ, எழுத்தாளர் ஏ.தர்வேஷ் முஹம்மத், ஏ.ஆர்.ரிஃபாய், ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ் உள்ளிட்ட - நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் பங்கேற்றனர். அவர்களுள் பலர், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் உறுப்பினர்களாவதற்கு ஆர்வம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் உமர் ஒலி தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். |