உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் புதிய தலைவருக்கும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் புதிய செயற்குழுவிற்கும் கத்தர் காயல் நல மன்ற செயற்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் - அதன் துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 50ஆவது செயற்குழுக் கூட்டம், 13.07.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் நண்பர்கள் இல்லத்தில் (Kayal Friends' House) நடைபெற்றது.
மன்ற துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கே.எம்.எஸ்.மீரான் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
22.06.2012 அன்று மன்றத்தால் நடத்தப்பட்ட - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுக்கும்,
சர்க்கரை நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வேற்படுத்தும் நோக்குடன் 01.07.2012 அன்று மன்றத்தால் நடத்தப்பட்ட - காயல்பட்டினம் நகர மக்கள் பங்கேற்ற மாரத்தான் - நீள் ஓட்டப் போட்டி மற்றும் மறுநாள் 02.07.2012 அன்று காயல்பட்டினம் ரிஸ்வான் சங்கம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் அமைந்துள்ள பெரிய சதுக்கை, இளைஞர் ஐக்கிய முன்னணி ஆகிய மூன்றிடங்களில் நடத்தப்பட்ட சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் ஆகியவற்றை இணைந்து நடத்திய காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், ரியாத் - தம்மாம் காயல் நற்பணி மன்றங்கள் மற்றும் துணைப்பணியாற்றிய ரிஸ்வான் சங்கம், ஐக்கிய விளையாட்டு சங்கம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, இளைஞர் ஐக்கிய முன்னணி, ரெட் ஸ்டார் சங்கம் ஆகிய பொதுநல அமைப்புகளுக்கும் மனமார்ந்த நன்றியை மன்றத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வதாக துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், இதுநாள் வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் எஸ்.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி சமர்ப்பிக்க, கூட்டம் அதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
பின்னர், உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு - சுழற்சி முறை நிர்வாகத்தின் கீழ் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் உள்ளிட்ட புதிய செயற்குழு,
மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியில் இவ்வாண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், திருமறை குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்து “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம் பெறும் - பார்வையற்ற மாணவர் ஹாஃபிழ் ஒய்.எஸ்.ஹாரிஸ் ஹல்லாஜ் ஆகியோருக்கு கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பட்டம் பெற்ற ஹாஃபிழ் மாணவருக்கு - மன்றத்தின் சார்பில் ரூபாய் 4,000 சிறப்புப்பரிசு வழங்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
துஆ, ஸலவாத்துடன் கூட்ட நிகழ்வுகள் நிறைவுற்றன. இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்ற துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |