இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை என்ற பெயரில் மேடைப் பேச்சு பயிற்சி, கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பயிற்சி வகுப்பு இம்மாதம் 08ஆம் தேதியன்று நடைபெற்று முடிந்துள்ளது.
இது குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர உறுப்பினர்கள் மற்றும் மேடைகளில் பேச ஆர்வப்படும் பொதுமக்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்குடன், கடந்த காலங்களில் காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் கிளை சார்பில் சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை என்ற பெயரில் சொற்பயிற்சி மன்றம் நடத்தப்பட்டு வந்தது. சொந்த அலுவலகம் என்று ஒன்று இல்லாதிருந்த காரணத்தால், பின்னர் அது இடைநின்று போனது.
இந்நிலையில், தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு சொந்த அலுவலகம் அமைந்துள்ளதையடுத்து, “சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை” என்ற பெயரில், சொற்பயிற்சி வகுப்பு ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று துவக்கப்பட்டது.
இரண்டாவது பயிற்சி வகுப்பு இம்மாதம் 08ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணிக்கு,, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி மாணவர் டி.எம்.ஐ.முஹம்மத் அப்துல்லாஹ் கிராஅத் ஓதி பயிற்சி வகுப்பு நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். மற்றொரு பயிற்சி மாணவர் எம்.கே.இஸ்மத் ஹாரிஸ் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியை நெறிப்படுத்திய - நகர காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் கருத்துரை வழங்கினார். முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர், பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்கள் பயிற்சியுரையாற்றினர்.
முஸ்லிம் லீக் நகர துணைச் செயலாளர்களான ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை நன்றி கூற, ஹாஜி அரபி எம்.எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத் துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
மாதமிருமுறை நடைபெறும் இந்த சொற்பயிற்சி மன்றத்தில், இம்மாணவர்கள் தொடர்ந்து 6 வகுப்புகளில் கலந்துகொள்வர். கடைசி வகுப்பை நிறைவு செய்த பின்னர், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதன் பின்னர், புதிய வகுப்பிற்கான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்.
பயிற்சிப் பாசறை ஏற்பாடுகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் மாணவரணி மற்றும் காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |