காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கு புதிய செயற்குழு 30.06.2012 அன்று நடைபெற்ற அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்புதிய செயற்குழுவின் முதல் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக சுமார் 50,000 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில், அதன் செயலர் முஹம்மத் பாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் புதிய செயற்குழுவின் முதலாவது கூட்டம் 16.07.2012 திங்கட்கிழமையன்று, அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் இல்லத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் வரவேற்புரையாற்றினார்.
பேரவையின் புதிய செயற்குழுவின் அங்கத்தினர், பழைய தலைவர், பார்வையாளர்கள் உள்ளிட்டோரை வரவேற்றுப் பேசிய அவர், நகர் மற்றும் சமுதாய நலனுக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
ஹாங்காங் - மக்காவ் - சீனா ஆகிய பகுதிகளில் வசித்து வரும் - இதுவரை பேரவையில் தம்மை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளாத காயலர்கள் விரைவாக தம்மை இவ்வமைப்பின் உறுப்பினர்களாக்கிக் கொள்ளுமாறு அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் 30.06.2012 அன்று நடைபெற்ற பேரவையின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகளை பேரவையின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் சமர்ப்பித்து, அக்கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள் நிறைவேற்றப்பட்டமை குறித்து விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினத்திலுள்ள - உழைக்க சக்தியிருந்தும் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களுக்கு சிறுதொழில் கருவிகள் பேரவையால் வாங்கப்பட்டு, காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) ஆகிய நிறுவனங்கள் மூலம் பயனாளிகளுக்கு வினியோகிக்கப்படும் செயல்திட்டம் மன்றத்தின் துவக்க காலத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தனதுரையில் தெரிவித்த முன்னாள் தலைவர், காயல்பட்டினத்தில் இது வகைக்கு தேவையுடையோர் ஏராளம் இருக்கையில் பேரவை இன்னும் அதிகளவில் இதற்காக உதவிகள் செய்ய வேண்டியிருப்பதாகவும், எனவே இப்புதிய செயற்குழு இச்செயல்திட்டத்தை பிரதான செயல்திட்டமாகக் கொண்டு செயல்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை - பழைய செயற்குழுவினர் நடப்பு செயற்குழுவினரிடம் சமர்ப்பிக்க, கூட்டத்தில் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - தொழிற்கருவிகள் வழங்கல்:
காயல்பட்டினத்திலுள்ள ஏழை உழைப்பாளிகளுக்கு தொழில் செய்ய உதவி கோரி காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் மூலம் பெறப்பட்ட 10 மனுக்கள் பரிசீலனைக்குப் பின் ஏற்கப்பட்டது. அவர்களுக்காக சுமார் 50,000 ரூபாய் மதிப்பில்,
மாவு அரைக்கும் க்ரைண்டர் 3
எலக்ட்ரிக் அடுப்பு (ஒவன்) 2
தையல் இயந்திரம் 5
ஆகிய கருவிகளை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் மூலம் பயனாளிகளுக்கு விரைவில் வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - பழைய அனுசரணைகள் தொடரும்...
இக்ராஃவின் வருடாந்திர செலவினங்களுக்கான பங்களிப்பு,
கத்தர் காயல் நல மன்றத்துடன் இணைந்து புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தல்,
கத்தர் - தம்மாம் - ரியாத் காயல் நல மன்றங்களுடன் இணைந்து சர்க்கரை நோய் விழிப்புணர்வு வருடாந்திர மாரத்தான் போட்டி மற்றும் பரிசோதனை இலவச முகாம் நடத்தல்
ஆகியவற்றுக்காக பேரவையால் அளிக்கப்பட்டு வந்த அனுசரணைகளை இனியும் தொடர்ந்து அளித்திட தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - நகர்நல நிகழ்ச்சிகளை இணைந்து நடத்தியோருக்கு நன்றி:
03.06.2012 அன்று நடத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை இணைந்து நடத்தியமைக்காக கத்தர் காயல் நல மன்றத்திற்கும், ஜூலை 01, 02 தேதிகளில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்களை இணைந்து நடத்தியமைக்காக கத்தர் - தம்மாம் - ரியாத் காயல் நல மன்றங்களுக்கும் பேரவையின் இப்புதிய செயற்குழு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 4 - இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தில் இணைவு:
உலக காயல் நல மன்றங்களின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சுழற்சிமுறை நிர்வாகத்தில் வருங்காலங்களில் இணைந்து செயல்படுமாறு இக்ராஃ மூலம் பெறப்பட்ட வேண்டுகோள் ஏற்கப்பட்டது.
தீர்மானம் 5 - ஆலோசனைக் குழுவினர் தெரிவு:
அனுபவமிக்க மூத்தவர்கள் ஐவர் பேரவையின் ஆலோசனைக் குழுவினராகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தீர்மானம் 6 - உறுப்பினர்களை அதிகரிக்க தனிக்குழு:
நகர்நலப் பணிகளுக்காக நிதியாதாரத்தைப் பெருக்கும் வகையில் - பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்திட, தனிக்குழு நியமனம் செய்யப்பட்டது.
தீர்மானம் 7 - உள்ளூர் பிரதிநிதிக்கு நன்றி:
கடந்த நான்காண்டுகளாக பேரவையின் உள்ளூர் பிரதிநிதியாக சிறந்த முறையில் செயலாற்றிய ஜனாப் எஸ்.அப்துல் வாஹித் அவர்களுக்கு இப்புதிய செயற்குழு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, இனியும் அவரே தொடர்ந்து அப்பொறுப்பில் செயலாற்றிட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 8 - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள்:
வழமை போல இவ்வாண்டும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாட்களில் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்திட தீர்மானிக்கப்பட்டதுடன், நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திடுவதற்காக சிறப்புக் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டது.
தீர்மானம் 9 - வாழ்த்து தெரிவித்தோருக்கு நன்றி:
பேரவையின் இப்புதிய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் மற்றும் கத்தர் காயல் நல மன்றங்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனாப் ஹாஜா அரபி நன்றி கூற, ஹாஃபிழ் அப்துல் பாஸித் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் புதிய செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலாளர் முஹம்மத் பாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |