பன்னாட்டு அரிமா சங்கத்தின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. விபரம் பின்வருமாறு:-
அரிமா சங்கத்தின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் பதவியேற்பு விழா, 18.07.2012 புதன்கிழமை இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் துளிர் கேரளங்கில் நடைபெற்றது.
காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் மீரா லெப்பை கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அரிமா சங்க பொருளாளர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் கொடி வாழ்த்துரையாற்றினார். ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் அரிமா வழிபாட்டுரை நிகழ்த்தினார். பின்னர், உலக அமைதிக்காக ஒரு நிமிடம் மவுனம் காக்கப்பட்டது.
பின்னர், அரிமா அறநெறி கோட்பாடுகள் குறித்து ஜெ.ஏ.லரீஃப் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, விழா தலைவரும் - அரிமா சங்கத்தின் காயல்பட்டினம் நகர கிளைத் தலைவருமான ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பின்னர், காயல்பட்டினம் அரிமா சங்கத்தால் இதுவரை செய்யப்பட்டுள்ள நலத்திட்டப் பணிகள் குறித்த செயல் அறிக்கையை, அரிமா செயலாளர் வி.டி.என்.அன்ஸாரீ சமர்ப்பித்தார். அறிக்கை வாசகங்கள் பின்வருமாறு:-
மேடையில் வீற்றிருக்கும் அரிமா முன்னோடிகளே! பிற சங்கங்களிலிருந்து எங்கள் அழைப்பினை ஏற்று வருகை தந்திருக்கும் அரிமா நண்பர்களே! என்றும் எனது அரிமா பணிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் இச்சங்கத்தின் அரிமாக்களே!
சென்ற வருடம் இதே மாதத்தில் எங்கள் சங்க நிர்வாகிகளை இதே துணை ஆளுநர் அரிமா உபால்ட்ராஜ் மெக்கன்னா அவர்கள் பதவியில் அமர்த்தியதை நினைவு கூறுகிறோம். எங்களுக்கு இட்ட பணியை நாங்கள் செவ்வனே முடித்துள்ளோம்.
எல்லா மாவட்ட மண்டல வட்டார மற்றும் பிற சங்க கூட்டங்களில் கலந்து கொண்டு தோழமையை பெருக்கி உள்ளோம்.
எங்கள் சங்கத்தின் பொதுக்குழு நிர்வாக குழு கூட்டங்கள் மாதந்தோரும் முறையாக நடைபெற்றன. சென்ற வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் - இப்தார் நிகழ்ச்சியினை நடத்தி இவ்வு+ர் மக்களின் அன்பையும் பாராட்டுதல்களையும் பெற்றோம். இதில் மாற்றுமத நண்பர்களும் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். இவ்வருடமும் இந்த நிகழ்ச்சியை நடத்திட முனைப்புடன் இருக்கிறோம்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 05.02.2012இல் மாவட்ட கலெக்டர் மாண்புமிகு ஆஷிஷ் குமார் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மருத்துவ முகாம்கள் 3 நடத்தினோம்.
10.02.2012இல் புற்று நோய் விழிப்புணர்வு பேரணி நடத்தினோம் 19.02.2012இல் மூட்டு வலி( மருத்துவ முகாம் நடத்தினோம்.
எங்களது நட்சத்திர சேவைத் திட்டமான உயிர் காப்போம் திட்டம் மூலம் சுமார் 4 லட்சம் ரூபாய் வசூல் செய்து பல நோயாளிகளை காப்பாற்றினோம். இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி மாணவர்களை எங்கள் ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகையின்போது பாராட்டி சான்றிதழ் வழங்கினோம். ஒருவரின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 25000 அளிக்கப்பட்டது. மற்றொருவரின் கேன்சர் வைத்தியத்திற்காக ரூபாய் 25000 வழங்கப்பட்டது. இவ்வருடமும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உள்ளோம். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
02 ஏப்ரல் 2012ல் ஆளுநர் அதிகாரபூர்வ வருகை துளிர் கலையரங்கத்தில் நடைபெற்றது. ஆளுநர் அரிமா மு.ளு. மணி ஆதுகு அவர்கள் கலந்து கொண்டார்கள். அப்போது ரூபாய் 30000 மதிப்புள்ள 6 தையல் இயந்திரங்கள் ரூபாய் 3500 மதிப்புள்ள 1ஜுஸ் இயந்திரம் மற்றும் ரூபாய் 1500 மதிப்புள்ள இட்லி மற்றும் பொறிக்கும் சட்டி முதலியன வழங்கப்பட்டன.
ஊனமுற்றோர் நலனுக்காக ரூபாய் 4300 மதிப்புள்ள 1 மெட்டல் ஷூ மற்றும் 1 வீல் சேர் வழங்கப்பட்டது.
மீனவர் நலனுக்காக சுமார் 50000 ரூபாய் மதிப்புள்ள வலைகள் வழங்கப்பட்டன. 47 மீனவர்கள் பயன்பெற்றனர்.
கல்வி உதவி திட்டத்தின் கீழ் இரண்டு ஐவுஐ மாணவர்களுக்கு தலா 4000 ரூபாய் வீதம் ரூபாய் 8000 வழங்கப்பட்டது.
நமதூர் அரசு மருத்துவமனையில் நம் அரிமா சங்கம் சார்பில் மூலிகை தோட்டம் அமைத்து மூலிகை கன்றுகள் நடப்பட்டன. அங்குள்ள நோயாளிகளுக்கு பழம் ரொட்டி முதலியன வழங்கப்பட்டன.
நமதூரில் ஒரு வழிப்பாதை அமல் படுத்தியதால் போக்குவரத்தை நெறிபடுத்துவற்கு 8 அறிவிப்பு பலகைகள் சுமார் 35000 ரூபாய் செலவில் அமைத்து கொடுக்கப்பட்டன.
நமது மாவட்ட சங்க கட்டிட நிதிக்காக ரூபாய் 50000 வழங்கி நமது செயலர் சேக்னா லெப்பை அவர்கள் பெருமை பெற்றதுடன் நமது சங்கத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2012-2013 அரிமா ஆண்டில் நமது பட்டயத் தலைவர் அரிமா டி.ஏ.எஸ்.முகம்மது அபூபக்கர் அவர்கள் வட்டார தலைவராக பதவியேற்கிறார் என்ற செய்தி நமது சங்கத்திற்கு பெருமை சேர்ந்துள்ளது.
எந்த ஒரு நிர்வாகத்தின் வெற்றிக்கும் தலைமை பண்பே காரணம் என்பதை மனதில் கொண்டு நாங்கள் செயல்பட்டதால் இன்று பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து நிற்கிறோம். இந்த வெற்றி எங்கள் தலைவர் அரிமா ஹாஜி எஸ்.எம்.எம்.சதக்கதுல்லாஹ் அவர்களையே சேரும். எங்கள் குறிக்கோள்கள் முழுமையாக நிறைவேற அவர்களது வழிகாட்டலும் தூண்டுதலும்தான் மிக உறுதுணையாக இருக்கிறது. அவருக்கு முதற்கண் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். மேலும் எனது சக செயலர் அரிமா சேக்னா லெப்பை பொருளாளர் அரிமா அப்துல் ரஹ்மான் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொண்டு இந்த செயலர் அறிக்கையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு, அரிமா செயலாளரின் செயல் அறிக்கை வாசகம் அமைந்திருந்தது. பின்னர், விழா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய எம்.எஸ்.எம்.மீராஸாஹிப் சிறப்பு விருந்தினர் அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் கலந்துகொண்ட - மாவட்ட முதல் நிலை அரிமா ஆளுநர் உபால்ட் ராஜ் மெக்கன்னா, காயல்பட்டினம் அரிமா சங்க கிளைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை பொறுப்பிலமர்த்தி, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கி, புதிய நிர்வாகிகளிடம் நிர்வாகப் பொறுப்பை முறைப்படி ஒப்படைத்தார்.
ஏற்கனவே தலைவர் - செயலர் - பொருளாளர் பொறுப்பிலிருந்தோரே மீண்டும் அதே பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளதை அவர் தனதுரையில் பாராட்டிப் பேசினார்.
பின்னர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சார்பில் புதிய தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஏற்புரையாற்றினார்.
பின்னர், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏழை உழைப்பாளி ஒருவருக்கு சரக்கு கொண்டு செல்லும் மிதிவண்டி, துளிர் பள்ளி அலுவலர்கள் தங்குமிடத்திற்கு கட்டில் - மெத்தை, மருத்துவம் - கல்வி மற்றும் சிறுதொழில் உள்ளிட்டவற்றுக்கான உதவிகள் அதில் உள்ளடக்கம்.
பின்னர், “உயிர் காப்போம்” திட்டத்திற்கான பள்ளி மாணவர் நிதி சேகரிப்பு அட்டையை, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகத்தினரிடம் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
பின்னர், அரிமா கொரேல் மண்டலத் தலைவர் தர்மன் டிமெல் ரோஸ், ஆயில்யம் வட்டாரத் தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், சிறப்பு விருந்தினர் - உரையாற்றியோர் - புதிய நிர்வாகிகள் மற்றும் புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களுக்கும், விழாவில் பங்கேற்ற நகரப் பிரமுகர்களுக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டதுடன், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
நிறைவாக, அரிமா சங்க செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், அரிமா நிர்வாகிகள் - உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
|