இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியன்று, காயல்பட்டினம் நகரின் ஏழைக் குடும்பத்தினருக்கு, ரமழான் - நோன்பு கால அரசி இலவச வினியோகம் செய்வதென, ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர கிளையின் ஊழியர் கூட்டம், 15.07.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 07.30 மணிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது.
நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஹாஜி எம்.எம்.மொகுதூம் கண் ஸாஹிப், நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, ஹாஜி அரபி ஷாஹுல் ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், நடப்பாண்டு ரமழான் மாதத்தில் - வழமை போல காயல்பட்டினம் நகரின் ஏழை - எளிய குடும்பத்தினருக்கு அரசி இலவச வினியோகம் செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ஆக.12 அன்று இலவச அரிசி வினியோகம்:
நோன்பு கால இலவச அரிசியை, ரமழான் பிறை 23 - 12.08.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 04.30 மணியளவில், கட்சியின் அலுவலகத்தில் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - இலவச அரிசி வினியோக சென்ற ஆண்டு கணக்கு தாக்கல்:
சென்ற ஆண்டு நோன்பு கால இலவச அரிசி மற்றும் இலவச வேஷ்டி - சேலை வழங்கப்பட்டது தொடர்பான வரவு-செலவு கணக்குகள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு, ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
தீர்மானம் 3 - இலவச அரிசி நிதி சேகரிப்புக் குழு:
நடப்பாண்டு இலவச அரிசி வினியோகத்திற்கான நிதியை சேகரிப்பதற்கு,
(1) ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்
(2) ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
(3) ஜனாப் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ்
(4) ஹாஜி எம்.எம்.மொகுதூம் கண் ஸாஹிப்
(5) ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை
(6) ஜனாப் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன்
ஆகிய ஆண்களும்,
(7) கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா (நகர்மன்ற உறுப்பினர்)
(8) எம்.கே.எஸ்.கிதுரு ஃபாத்திமா (நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்)
ஆகிய பெண்களும் குழுவினராக நியமிக்கப்பட்டனர்.
தீர்மானம் 4 - நிர்வாகச் செலவினங்களுக்காக உறுப்பினர் சந்தா:
கட்சியின் நகர கிளை நிர்வாக செலவினங்களுக்காக உறுப்பினர்களிடமிருந்து மாதாந்திர / வருடாந்திர சந்தா வசூலிப்பதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - சுதந்திர தினம், குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றம்:
ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில், கட்சி அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தி, தேசிய கொடியேற்றுவதென தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூற, எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கலந்தாலோசனைக் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி ஏ.கே.மஹ்மூத் சுலைமான், ஹாஜி பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான், ஹாஜி கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, ஹாஜி எஸ்.ஆர்.ரஹ்மத்துல்லாஹ், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், ஹாஜி பி.எம்.ஏ.சி.ஷேக் நூருத்தீன், ஜெ.மஹ்மூத் சுல்தான் மற்றும் பலரும், மகளிரணியினரும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |