தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் தமிழகத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஹாஜி எஸ்.எம்.அமீர் அப்பாஸ் ஏற்பாட்டில் பள்ளிவாயில்களுக்கு நோன்புக்கஞ்சி நொய் அரிசி வழங்கும் விழா விழுப்புரம் ஆனந்தா கான்ஃபரன்ஸ் ஹாலில் 15ஆம் தேதி ஞாயிறு மாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத்துகளை ஒருங்கிணைப்பதோடு அதன் மாண்பைக் காக்கவும், வலிமைப்படுத்தவுமான பணியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்து வருகிறது.
இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 436 பள்ளிவாயில்களில் நலிவடைந்த பள்ளிவாயில்களுக்கான நோன்புக் கஞ்சி நொய் அரிசி 1200 கிலோவுக்கு மேல் வழங்கப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக நான் வருகை தந்துள்ளேன்.
குடியரசு துணைத்தலைவர் தேர்தல்:
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக முஹம்மது ஹமீது அன்சாரி நிறுத்தப்பட்டுள்ளார். சோனியாகாந்தி தலைமையில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவரது பெயரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது முன்மொழிந்துள்ளார். மற்ற தலைவர்கள் வழிமொழிந்துள்ளனர். அவர் வெற்றி பெறுவது உறுதி. அவருக்கு இப்போதே நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
69 சதவீத இடஒதுக்கீடு:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டிற்காகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது தமிழகம் ஒருமுகப்பட்டு அதை வெற்றிகரமாக சந்தித்தது. அப்போது ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர் செல்வி ஜெயலலிதா அம்மையார்தான்.
ஆனால் இப்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்கக் கோரி மாணவர்கள் 12 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 69 சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்குவதால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கோரி அவர்கள் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 2010 ஜூலை 13இல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கு வதற்கான சரியான காரணங்களை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு இன்னமும் முடிவடையவில்லை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வெளிடவில்லை. இந்த அடிப்படையில் வழக்கு தொடர்ந்த மாணவர்களும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தடை கோரியுள்ளனர்.
எனவே, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிரான தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கி, அதை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்காக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
புனித ஹஜ் பயண கோட்டா:
கடந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 4,084 பேர் பயணம் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்றைய முதல்வர் கலைஞர் மத்திய அரசிடம் தொடர்பு கொண்டு வலியுறுத்தியதன் பயனாக இந்த வாய்ப்பு அமைந்தது.
இந்த ஆண்டு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தும், 2863 இடங்களை மட்டுமே ஒதுக்க முடிந்தது. எனவே இதை அதிகப்படுத்தித் தர வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இதற்கான கோரிக்கைக்காக கடிதம் எழுதியுள்ள முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வக்ஃபுவாரியம்:
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், சுன்னத் ஜமாஅத், ஷியா தலைமை காஜிகள் இருவர், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் வரக்கூடிய பள்ளிவாயில் முத்தவல்லிகள் வாக்களித்து தேர்வு செய்யக்கூடிய இருவர், பார் கவுன்சில் சார்பில் இருவர், அரசு நியமிக்கும் பொது நல ஊழியர்கள் இருவர், எம்.எல்.ஏ.க்கள் இருவர், எம்.பி.க்கள் இருவர் என்ற வகையில் நியமிக்கப்பட வேண்டும்.
முத்தவல்லிகள் பார் கவுன்சில் பிரதிநிதிகள் தேர்வுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இரு பொது நல ஊழியர்களையும், எம்.பி.க்கள் இருவரையும், எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் அரசு நியமித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் இருவரும், தி.மு.க. சார்பில் ஒருவரும், ம.ம.க.சார்பில் இருவரும் உள்ளனர்.
இவர்களில் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த இருவரை அரசு நியமித்துள்ளது. இதில் ஒருவர் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக உள்ளார். எங்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என கூறி நீதிமன்றம் சென்றுள்ளனர். இது சட்டப்படி சரியா, இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் நாங்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொருத்த வரை மூவர் உள்ளனர். அவர்களில் இருவரை நியமித்திருக்கிறார்கள். இரண்டுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் மற்றவர்களையும் அழைத்து கருத்து கேட்டோ, வாக்கெடுப்பு நடத்தியோ தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அரசு ஒரு முடிவை அறிவிக்கிறது. அது சரியா, தவறா என்பதை நீதிமன்றம் சொல்லட்டும்.
தனித்தமிழ் ஈழம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்ன?
இலங்கை என்பது இந்தியாவின் அண்டை நாடு. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடக்கூடாது என்பது ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து பஞ்சசீலக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோதே வலியுறுத்தப்பட்ட கொள்கை.
இந்தியாவும் - இலங்கையும் சார்க் அமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன. இலங்கையில் தனித்தமிழ் ஈழம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டியது இலங்கைதான். தமிழர்கள் என்பதற்காக தமிழகத்திலிருந்து தார்மீக ஆதரவைத்தான் தர முடியும். அவர்கள் நாட்டின் உள் விவகாரத்தில் நாம் நேரடியாக தலையிட்டால் நமது நாட்டின் விவகாரத்திலும் அவர்கள் தலையிடுவார்கள்.
சீனாவும் நம் அண்டை நாடு. ஆனால் நம்மோடு நல்லுறவு கொண்ட நாடு அல்ல. இலங்கைக்கு எதிராக நாம் தலையிட்டு அதன் விளைவாக சீனாவின் பக்கம் இலங்கை முழுமையாக சாய்ந்து விட்டால் அதனால் இந்தியாவிற்கு விபரீதமான விளைவுகள் ஏற்படும். எனவே, இலங்கையை நாம் வழிநடத்தக்கூடிய சூழ்நிலையை கொண்டு வருவதே புத்திசாலித்தனம்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும். அங்குள்ள தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு, உரிமைகள், சுயாட்சி, கண்ணியம் என அனைத்துமே சுமுகமான முறையில் பேசி தீர்க்கப்பட வேண்டும் என்பது இந்திய அரசின் நிலைப்பாடு. அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடும்.
தி.மு.க. முன்னின்று நடத்தும் டெசோ மாநாட்டிற்கு எங்களை அழைக்க மாட்டார்கள். காரணம் இலங்கைப் பிரச்சினையில் எங்களின் நிலைப்பாடு என்ன என்பது தி.மு.க. தலைமைக்கு மிக நன்றாகத் தெரியும். இலங்கையில் வாழும் தமிழர்கள் நிம்மதியுடனும், சகல உரிமையுடனும் வாழ்வதற்கு இந்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஷரீஅத் சட்டப்படியான திருமணத்தை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை:!
இந்திய அரசியல் சாசனம் மத உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நாட்டைப் பொருத்த வரையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்களுக்கு என 74 தனியார் சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களை பின்பற்றக்கூடிய உரிமை அவர்களுக்கு உண்டு.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தைப் பொருத்த வரை ஒரு பெண் பருவமடைந்துவிட்டால், அவள் திருமணத்துக்கு தகுதியானவள் ஆகிவிடுகின்றாள். இன்றைய காலச் சூழ்நிலையில் 9 முதல் 15 வயதிற்குள்ளாகவே பருவமடைந்து விடுகின்றனர்.
அண்மையில் 18 வயதுக்கு குறைவான ஒரு பெண்ணின் திருமணம் தொடர்பாக நடைபெற்ற வழக்கு ஒன்றில் ஷரீஅத்தில் இந்திய சிவில் சட்டங்கள் தலையிட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இஸ்லாமிய ஷரீஅத் முறைப்படி நடைபெற இருந்த திருமணத்தில் பெண்ணுக்கு 17 வயதும் 4 மாதங்களும் மட்டுமே ஆகியுள்ளன என காரணங்காட்டி அந்த திருமணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ., சமூக நலத் துறையினர் மற்றும் போலீசார் நேரில் சென்று அத்திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை மார்க்க அறிஞர்களின் அமைப்பான தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஸரத் கண்டித்துள்ளார். மார்க்க விஷயங்களில் ஆலிம்கள் சொல்வதை ஏற்க வேண்டும் என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு.
ஷரீஅத் சட்டப்படி நடைபெறும் திருமணத்தை தடை செய்வதற்கு மாவட்ட நிர்வாகங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகாரிகள் செய்தது தவறு. இதுபற்றி உரிய இடங்களில் புகார் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்க உள்ளோம்.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார். |