கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றம் (MKWA) சார்பில், 05.08.2012 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்துவதென செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 40ஆவது செயற்குழுக் கூட்டம் 08.07.2012 அன்று காலை 11.00 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் கூடியது. மன்றத்தின் தலைவர் மஸ்ஊத் தலைமை தாங்கினார். செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் முன்னிலை வகித்தார்.
வரவேற்புரை:
துவக்கமாக மன்றச் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து, அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்தார். மேலும் அவர் தமதுரையில் மன்றத்தின் நகர்நலப் பணிகள் சீராக நடைபெற மன்றத்திற்கென சொந்த அலுவல கட்டிடம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.
உறுப்பினர்கள் அக்கருத்தை ஒருமனதாக வரவேற்றனர். மேலும் இத்திட்டத்திற்காக பணம் சேகரிப்பதற்கு என்னசெய்யலாம் என்ற உறுப்பினர்களின் கேள்விக்கு நாம் அலுவலகம் உருவாக்க தீர்மானித்தால் இன்ஷாஅல்லாஹ் பணம் தானாக வரும்... உதவுவதற்காக காத்திருக்கும் நல்ல உள்ளங்கள் நம் அமைப்பிலும், நம் நகரிலும் இருக்கின்றார்கள் என்று பதிலளித்தார். எனவே நம் மன்றம் இதை பரிசீலனைக்கு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
தலைவர் உரை:
பின்னர், மன்றத் தலைவர் மஸ்ஊத் தலைமையுரையாற்றினார். நமது மன்றத்தால் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் அனைத்தும் உரியவர்களிடம் சென்றடைந்துள்ளது... இதற்கு முக்கிய காரணம் நாம் தீர்மானித்த தீர்மானங்கள் அனைத்தும் மிக மிக உன்னிப்பாக கவனித்து தீர்மானிக்கப்பட்டு, அதை உரியவர்களிடம் சென்றடைய செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் எந்தவிதத்திலும் நம் அமைப்பினால் யாருக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது. மேலும் நம் அமைப்பை யாரும் துஷ்பிரயோகம் செய்துவிடக்கூடாது. மேலும் நம் அனைத்து நல்ல செயல்களும் உரியவர்களை சென்றடைய வேண்டும் என்றார். இதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவதின் அவசியம் குறித்தும் விளக்கமாக கூட்டத்திற்கு எடுத்து சொன்னார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து, கடந்த 10.06.2012 அன்று நடைபெற்ற மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தின் போது இரவு உணவு ஏற்பாடு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட தொகை, அவை செலவழிக்கப்பட்ட விபரம் உள்ளிட்ட வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சாஹிப்தம்பி சமர்ப்பித்து, விளக்கிப் பேசினார். கூட்டம் அதனை ஒருமனதாக அங்கீகரித்தது.
தீர்மானம் - இஃப்தார் நிகழ்ச்சி:
எதிர்வரும் 05.08.2012 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி கோழிக்கோடு புதியரா ஸ்டேடியம் சாலையில் அமைந்துள்ள கே.எம்.ஏ. ஹாலில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
நிறைவாக, நன்றியுரைக்கு பின் - கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். காலை 11.00 மணிக்குத் துவங்கிய கூட்டம் மதியம் 02.00 மணிக்கு நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு மலபார் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஐதுரூஸ் (Seena),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம்,
கோழிக்கோடு, கேரள மாநிலம். |