உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் புதிய தலைவருக்கும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் புதிய செயற்குழுவினருக்கும் சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 12.07.2012 அன்று 19.45 மணிக்கு மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஏ.எம்.உதுமான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்த்து - இவ்வமைப்பை வெற்றிப்பாதையில் நடைபோட ஒத்துழைத்து வரும் அனைததுறுப்பினர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் தனதுரையில் தெரிவித்தார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, கடந்த கூட்ட நிகழ்வுகள் - அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து, மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் விவரித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து, இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
உதவித் திட்டங்களுக்காக ரூ.1,30,000 நிதியொதுக்கீடு:
அடுத்து, மருத்துவம் - தொழில் மற்றும் மனிதாபிமான உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்கள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள மனுக்கள் ஏற்கப்பட்டது. இவ்வகைக்காக ரூபாய் 1,30,000 நிதியொதுக்கீடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
பரிசீலனைக் குழு அறிக்கை:
அடுத்து, விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் குழுவினரான கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய், ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஆகிய மன்ற உறுப்பினர்கள், அடுத்தகட்ட பயனாளிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட அறிக்கையை கூட்டத்தில் தமது பரிந்துரையுடன் சமர்ப்பித்தனர்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
அடுத்து, ஏழை - நிராதரவான - உழைக்கவியலாத குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, இம்மாதம் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை - காயல்பட்டினத்தைச் சேர்ந்த 55 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
ஜகாத் நிதி கோரிக்கை:
அடுத்து, புனித ரமழான் மாதத்தில் - தகுதியுள்ள பயனாளிகளுக்கு உதவிகள் செய்திடும் பொருட்டு, உறுப்பினர்கள் தமது ஜகாத் நிதியை தாராமாகத் தந்துதவுமாறு மன்றத்தின் நிறுவனரும் - ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
மாதாந்திர சந்தா தொகை, உண்டியல் நிதி, ஒரு நாள் ஊதிய நன்கொடை, ஜகாத் நிதி, அவசர - அவசிய தேவைகளுக்காக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு சிறப்பு நன்கொடை என பல வகைகளிலும் மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கு உதவி வருவதற்காக மன்ற உறுப்பினர்களை பெரிதும் பாராட்டுவதாக அவர் தனதுரையில் தெரிவித்தார்.
இதுவரை செய்யப்பட்டுள்ள திட்டப்பணிகள்:
அத்துடன், அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டம் (இதுவரை 8 முறை வழங்கப்பட்டுள்ளது), திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் (இதுவரை - முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி, மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆகிய மத்ரஸாக்களைச் சேர்ந்த 21 ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது), கல்விக்காக பல்வேறு உதவித் திட்டங்கள், மருத்துவம் - மனிதாபிமானம் - தொழில் - வீடு புனர்நிர்மாணம் என பல்வேறு திட்டங்கள் இறையருளால் நம் மன்றத்தின் சார்பில் செய்து வரப்படுவதாகத் தெரிவித்த அவர், இத்திட்டங்களனைத்தும் இறையருளால் முழு வெற்றியடைந்திட - தன்னலம் மறந்து, பொதுநலனை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு, தாராமாக உதவிடும் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் ஈருலக நற்பேற்றிற்காக துஆ செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தக்வா அமைப்பின் இமாம் - பிலால் ஊக்கத்தொகை திட்டம்:
அடுத்து, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட - காயல்பட்டினம் நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால் ரமழான் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இவ்வகைக்காக, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பங்களிப்புத் தொகையை - விண்ணப்பங்கள் ஒப்புதல் குழுவினர் இறுதி செய்து வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், தக்வா அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ள காரணத்தால் - இத்திட்டம் முழு வெற்றியடைந்திட அம்மன்றம் கூடுதலாகப் பொறுப்பேற்குமாறு சிங்கப்பூர் காயல் நல மன்றம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்து, அம்மன்ற நிர்வாகத்துடன் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட நல்லாடைகள் வழங்கும் திட்டம்:
அடுத்து, பயன்படுத்தப்பட்ட நல்லாடைகளை ஏழை - எளிய மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 200 கிலோ கிராம் வரை ஆடைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃ நிதி சேகரிப்பு குறித்த அறிக்கை:
இக்ராஃவிற்கான மன்ற உறுப்பினர்களின் சந்தா மற்றும் கல்வி உதவித்தொகைக்கு அனுசரணை சேகரிக்கப்பட்டமை குறித்த அறிக்கையை - மன்றத்தின் இக்ராஃ செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச்.உதுமான் கூட்டத்தில் சமர்ப்பித்தார். பெறப்பட்ட தொகைகளை - இம்மாதம் (ஜூலை) இறுதிக்குள் இக்ராஃவிற்கு அனுப்பி வைத்திடுமாறு மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் - பொறுப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த (உள்ளரங்க) பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதியன்று நடத்திட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், கூட்ட நிகழ்விடத்திற்கான Challet அல்லது பங்களாவை முற்கூட்டியே உறுதி செய்திடவும், சந்திக்கப்படும் செலவினங்களை உறுப்பினர்கள் சமமாகப் பகிர்ந்து பங்களிப்பு செய்திடவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக்ராஃ புதிய தலைவருக்கு வாழ்த்து:
அடுத்து, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ், நடப்பாண்டிற்கான தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், துணைத்தலைவர்களுள் ஒருராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட - ரியாத் காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் ஆகியோருக்கு கூட்டத்தில் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங் பேரவை புதிய செயற்குழுவிற்கு வாழ்த்து:
அதுபோல, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் - செயலாளர் - பொருளாளர் உள்ளிட்ட புதிய செயற்குழுவினருக்கும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள் அவர்கள்தம் பொறுப்பில் - இதுவரை நடைபெற்றதை விட சிறப்பான பங்களிப்பை தமது நிர்வாகத்திற்கு வழங்கி - அதன் மூலம் நகர்நலப் பணிகள் சிறக்க வாழ்த்துவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்:
மன்றக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் ஏதேனும் இரண்டு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் ஒருங்கிணைத்து - அனுபவம் பெற வேண்டும் என்ற மன்றத்தின் நியதியின்படி - நடப்பு கூட்டத்தை ஒருங்கிணைத்த சாளை நவாஸ், எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகிய மன்ற உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மன்றத்தின் அடுத்த கூட்டத்தை எஸ்.செய்யித் லெப்பை, ஹாஃபிழ் எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோர் ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்டனர்.
நிறைவாக, மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்கள் அனைவருக்கும் சங்கைமிக்க ரமழான் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு, ஹாஃபிழ் எம்.ஆர்,ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இரவுணவு விருந்துபசரிப்பு:
பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும், இடியாப்பம் - கோழிக்கறி இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது @ 07:09/14.07.2012] |