நடைபெற்று முடிந்த பத்தாம் - பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் காயல்பட்டினம் கே.டி.எம். தெரு, அலியார் தெரு பகுதிகளை உள்ளடக்கிய தாயிம்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட மாணவ-மாணவியருள் சிறப்பிடங்களைப் பெற்றோருக்கு - சீதக்காதி நினைவு நூலகம் சார்பில் பரிசளிப்பு விழா 01.07.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில், தாயிம்பள்ளிக்குட்பட்ட மஜ்லிஸுல் கவ்து சங்க வளாகத்தில் நடைபெற்றது.
தாயிம்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி விழாவிற்குத் தலைமை தாங்கினார். மாணவர் ஃபஹத் இறைமறை குர்ஆன் வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சீதக்காதி நினைவு நூலக தலைவர் எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, கல்வியின் சிறப்புகள் குறித்து அல்அமீன் ஆங்கிலப்பள்ளி நிர்வாகி ஆசிரியர் எம்.ஏ.புகாரீ உரையாற்றினார். பின்னர், விழா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய கொமந்தார் இஸ்மாஈல், மாணவர்களின் எதிர்காலத்திற்கு இன்றே திட்டமிடல் - அரசுப்பணியில் சேர்வது குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி உரையாற்றினார்.
பின்னர், நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தாயிம்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட மாணவ-மாணவியருளுள் முதல் மூன்றிடங்களைப் பெற்றோருக்கு பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை, தாயிம்பள்ளி பொருளாளர் ஹாஜி கே.எம்.தவ்லத் வழங்கினார்.
அடுத்து, 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு, தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சார்ந்த பொறியாளர் எம்.எச்.ஷேக்னா பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், ஆறுதல் பரிசுகளை ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் அதிபர் சித்தீக் வழங்கினார்.
பின்னர், ஏழை மாணவர்கள் கல்லூரிப் படிப்பிற்கான வழிவகைகள், ஆலோசனைகளை - ஹாங்காங் கஸ்வா அமைப்பு வழங்கி வருவதாக அவ்வமைப்பின் உறுப்பினரான இஸ்மாஈல் தெரிவித்தார்.
பின்னர், எம்.ஏ.ஷேக், சீதக்காதி நூலக துணைத்தலைவர் எம்.எச்.ஷம்சுத்தீன், எஸ்.எச்.நியாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பரிசு பெற்ற மாணவர்களின் சார்பில் மீரான் ஏற்புரை வழங்கினார்.
இந்த பரிசளிப்பு விழாவில், தாயிம்பள்ளி ஜமாஅத் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, எழுத்தாளர் ஏ.எல்.எஸ்.மாமா தலைமையில் ஜமாஅத்தினர் செய்திருந்தனர்.
|