இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவராக இருந்த ஜி.எம்.பனாத்வாலா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, கத்தரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், கத்தர் காயிதேமில்லத் பேரவையின் அமைப்பாளர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் மற்றும் பலர் உரையாற்றினர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவராக விளங்கிய, மறைந்த மர்ஹூம்.பனாத்வாலா சாஹிப் அவர்களது புகழைச் சாற்றும் நான்காவது நினைவேந்தல் விழா, ஜூன் 30ஆம் தேதியன்று, கத்தர் கேரள கலாச்சார மையத்தில் நடைபெற்றது. தனது வாழ்நாள் முழுமையும், இந்திய இஸ்லாமிய மக்களின் உயர்வு மற்றும் தேசிய, சமய நல்லிணக்கத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் அவர்களது நினைவு விழாவிற்கு கே.எம்.சி.சி.யின் கத்தர் மண்டலத் தலைவர், ஜனாப்.ஜெய்னுதீன் தங்கள் தலைமையேற்க, பானக்காடு ஹமீத் அலி சிஹாப் தங்கள் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இவ்விழாவில் உரையாற்றிய, சாகித்ய அகாடமி விருது பெற்ற கேரளத்தின் முன்னணி எழுத்தாளர், பி.சுரேந்திரன் அவர்கள் பேசுகையில், முஸ்லிம் லீக்கை முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமான இயக்கமாக தான் காணவில்லை என்றும், ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திகான மாபெரும் மக்கள் இயக்கம் தாய்ச்சபை என்றும், இப்படிப்பட்ட தேசிய இயக்கத்தை வளர்த்தெடுக்க பனாத்வாலா அவர்களைப் போன்ற விலைக்கு வாங்க முடியாத சமூகப் போராளிகள் அனைவரும் லீக்கில் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும், நெகிழ்ச்சியுடன் வலியுறுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய கத்தர் காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் அவர்கள், அன்னார் அவர்களை ஏழு முறை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த பொன்னானி தொகுதி மக்கள் பாக்கியசாலிகள் என்றும், கேரளா, இ.யு.மு.லீக்கின் தாயகமாகத் திகழ்கிறது என்றும் கூறினார்.
முஸ்லிம் பெண்களுக்கான உரிமை பிரச்சினையில், சரீஅத் சட்டத்திற்கெதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, பன்னிரண்டரை மணி நேரம், பனாத்வாலா அவர்கள் பாராளுமன்றத்தில் முழங்கியதையும், அதை ஏற்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கொண்டு வந்த சரீஅத் சட்டத்தை பாதுகாக்கும் முகமான சட்டதிருத்தத் தையும் நினைவு கூர்ந்த ஹபீப், இந்தியா டுடே, டைம்ஸ் உட்பட ஏராளாமான தேசிய பத்திரிகைகள் அன்னாரை சிறந்த பாராளுமன்றவாதியாக பலமுறை தேர்ந்தேடுத்ததையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பனாத்வாலா அவர்களை கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதேமில்லத் அவர்களுக்கு அறிமுகப்படுத்திய மர்ஹூம் தியாகி பி.எச்.எம்.அப்துல் காதர் அவர்களது தாய் பூமியான காயல்பட்டினத்தில் பிறந்ததற்காக பெருமையும், பூரிப்பும் கொள்வதாகவும், கேரளத்தைப் போலவே தமிழகத்திலும் தாய்ச்சபை மிகப்பெரிய அளவில் சாதிக்கும் என்று நம்புவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.
காயலர்களான கே.வி.ஏ.டி.கபீர், முத்துச் சுடர் முஹம்மத் லெப்பை ஆலிம், கவிமகன் காதர், ஹெச்.அஹமத் தாஹிர் ஆகியோருடன் - கடலூர் முஸ்தபா மற்றும் ஏராளமான இயக்கத் தோழர்கள் கலந்து கொண்ட இவ்விழாவினை கேரள கலாச்சார மையத்தைச் சேர்ந்த முஹம்மத் பஷீர், வாழப்பள்ளி பைஜி உள்ளிட்ட முஸ்லிம் லீக்கினர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |