ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் நகரளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு / மாணவிக்கு - ஹங்காங்கில் இயங்கி வரும் காயல்பட்டினம் மாணவர் நலச் சங்கம் (Kayalpatnam Students Welfare Association - KSWA) கஸ்வா அமைப்பின் சார்பில், மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவாக ஆண்டுதோறும் பணப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், அண்மையில் வெளியான ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு முடிவுகளின்படி, காயல்பட்டினம் நகரளவில் முதலிடம் பெற்ற - சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஜெ.அபிஷா ஜூலியட் மேரி என்ற மாணவிக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, 11.07.2012 புதன்கிழமை காலை 09.15 மணிக்கு, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர் ஒன்றுகூடலின்போது நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஹாங்காங் - கஸ்வா அமைப்பின் உள்ளூர் பிரதிநிதிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், கஸ்வா அமைப்பின் உறுப்பினர்களான எம்.எஸ்.செய்யித் இஸ்மாஈல், கானாப்பா எஸ்.எம்.எஸ்.செய்யித் அஹ்மத் ஆகியோரிணைந்து, நகர சாதனை மாணவி ஜெ.அபிஷா ஜூலியட் மேரிக்கு ரூபாய் 5,000 பணப்பரிசும், மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவு விருதும் வழங்கி கவுரவித்தனர்.
பரிசளிப்பின்போது, பள்ளி மாணவியர் அனைவரும் கரவொலியெழுப்பி - சாதனை மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர். நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
முன்னதாக, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கஸ்வா அமைப்பினருக்கும், சாதனை மாணவி குழுமத்திற்கும் வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கஸ்வா அமைப்பின் உறுப்பினர்கள் அபூபக்கர், கானாப்பா எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ், இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், சாதனை மாணவியின் தாயார் - எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆசிரியை அந்தோணியம்மாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
|