ஜூலை 15 - ஞாயிறு அன்று ஊழலற்ற காயலை நோக்கி ... என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:
எதிர்வரும் ஞாயிறு (ஜூலை 15) - அன்று 10:30 மணி அளவில், ஊழலற்ற காயலை நோக்கி ... (TOWARDS CORRUPTION-FREE KAYAL) என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்று காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. துளிர் கேளரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பொறியாளர் S.M. அரசு மற்றும் அவ்வமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் A. நபீஸ் அஹ்மத் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
2001 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் (பதிவு எண் 349/2001) - மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் துவக்கி செயல்பட்டு வருகிறது. ஜூலை 15 அன்று நடைபெறும் நிகழ்ச்சியின் போது - இவ்வமைப்பின் 56வது கிளை காயல்பட்டினத்தில் துவக்கப்படவுள்ளது.
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினர்களாக பல ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளும், தற்போது பணியில் இருக்கும் அரசு அதிகாரிகளும் உள்ளனர். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CENTRAL VIGILANCE COMMISSION) முன்னாள் ஆணையர் திரு N.விட்டல் - இந்த அமைப்பின் புரவலாராக சமீப காலம் வரை இருந்தார். இந்த அமைப்பு சார்பாக நேர்மை நெறி என்ற மாத இதழ் வெளியிடப்படுகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் 70 வயதான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பொறியாளர் S.M. அரசு - தமிழக அரசின் பொதுப்பணி துறையின் (PWD) - தலைமை பொறியாளராக பணியாற்றி - 2000 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர். தி ஹிந்து நாளிதழுக்கு இவர் வழங்கிய பேட்டியினை காண இங்கு அழுத்தவும்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் 48 வயதான A. நபீஸ் அஹ்மத் - ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளர். மனித உரிமை மீறல், குடும்பவியல் போன்ற துறைகளில் செயல்புரியும் ஆர்வலர். மேலும் - Academy of Honest Politics என்ற அமைப்புக்கும் இவர் செயலாளராக உள்ளார். 2002 ஆம் ஆண்டு கால்நடை பராமரிப்பு துறைக்கு தேவையான மருந்துக்கள் வாங்குவதில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த இவரின் தகவல் கொண்டு - லஞ்ச ஒழிப்பு துறை பல அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.
ஜூலை 15 அன்று நடைபெறவுள்ள கருத்தரங்கின் முக்கிய குறிக்கோள்கள்:-
• ஊழல் / லஞ்சம் ஆகியவற்றால் சமுதாயத்திற்கு ஏற்படும் கேடுகள் என்ன?
• ஊழல் / லஞ்சம் இல்லாமல் அரசு சேவைகளை பெறுவது எப்படி?
• மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் எவ்வாறு ஊழல் நடைபெறாமல் தடுப்பது?
• தகவல் பெறும் உரிமை சட்டங்களை (RTI) எவ்வாறு பயன்படுத்துவது?
• காயலில் லஞ்சம் / ஊழலை தடுக்க/தவிர்க்க எடுக்கப்படவேண்டிய முயற்சிகள் என்ன?
தொலைநோக்குப்பார்வையில் - ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கிட - எடுக்கப்படும் ஒரு முயற்சி இது! ஊழலற்ற காயலை உருவாக்க நாம் அனைவரும் - கருத்து வேறுபாடுகள் இன்றி - ஒன்றாக இணைந்து செயல்படுவோம் !! அனைவரும் வாரீர் - ஆதரவு தாரீர் ... !!!
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: உமர் ஒலி, ஒருங்கிணைப்பாளர்,
தைக்கா தெரு.
Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:00pm/11.7.2012
அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் மட்டுமல்ல தனியார் துறைகளிலும் புரையோடிப்போய் கிடக்கும் புற்றுதான் ஊழல்.
இது நம் நாட்டிற்கு கிடைத்த சாபம்!
நம் மக்களின் தலைவிதி!
கொடுத்தால்தான் நடக்கும்!
செத்தவனுக்கு கிடைக்கும் உதவித் தொகையில் கூட சத்தமில்லாமல் பங்கு கேட்கும் கொடுமை!
உச்சி முதல் பாதம் வரை ஊடுருவிப் போன இந்த லஞ்ச லாவண்யத்திற்கெதிராக போர் தொடுக்கப் புறப்பட்டுள்ள நல்லவர் தம் முயற்ச்சி கைகூட ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்!
மாபெரும் மலையைக் கூட ஒரு சிறு உளி கொண்டு சிறுகச் சிறுகச் சிதைத்து விடலாமே? நம்பிக்கை தானே வாழ்வு!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross