பள்ளிக்கூடங்களில் கணினி மூலம் கல்வி அளிக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கணினியின் இன்றியமையாத் தன்மையையும், தற்பொழுது நடைபெறும் நடவடிக்கைகள் அனைத்தும் கணினியை சார்ந்தே அமைந்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வழியில் கல்வி வழங்கி, தமிழகத்தில் கணினிப் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் எடுத்து வருகின்றார்கள்.
இதன் அடிப்படையில், அனைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டம் 5 ஆண்டு காலத்தில் 1880 மேல்நிலைப் பள்ளி மற்றும் 461 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 2341 பள்ளிகளில் ‘BOOT (Build, Own, Operate, Transfer)’ அடிப்படையில் நடைமுறைப்படுத்த ஏற்கெனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 31 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
கணினி வழி கல்வியினை பள்ளிகளில் ஊக்குவிக்கும் வகையில் மேலும் 374 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 1999 பள்ளிகளில் கணினி வழி கல்வியை விரிவுப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தற்போது உத்தரவிட்டுள்ளார்கள்.
இத்திட்டம் 127 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 26 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கணினி மூலம் கல்வியினை பயின்று, தங்களது அறிவாற்றலையும் திறனையும் வளர்த்துக் கொண்டு அகில இந்திய மற்றும் உலகளாவிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் முதன்மை நிலை பெற வாய்ப்பு உருவாகும்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9. |