தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்புடன் இணைந்து, காயல்பட்டினம் நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கு ரமழான் ஊக்கத்தொகை வழங்கிட, ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் 5ஆவது செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீயில் - அபூதபீ காயல் நல மன்றத்தின் ஐந்தாவது செயற்குழு கூட்டம் 13.07.2012 வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத்தின் துணைத்தலைவர் ஜனாப் மக்பூல் அஹ்மத் தலைமையில், அவர்களின் இல்லத்தில் கூடியது. மவ்லவீ ஹாபிஃழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
நகர்நலன் குறித்த உறுப்பினர்களின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மன்றத்தின் சட்டத்திட்டங்கள் முன்வரைவு:
மன்றத்தின் அனைத்து முற்போக்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செம்மையாக நிறைவேற்ற மன்றத்திற்கென தனிப்பட்ட சட்டத்திட்டங்களை [By – Laws]முன்வரைந்து சட்டத்திட்ட முன்வரைவு கமிட்டி செயற்குழுவில் சமர்பித்தது.அதை மன்றத்தின் அனைத்துச் செயற்குழு உறுப்பினர்களும் பார்வையிட்டு அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு இறுதி முடிவுச் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - நகர பள்ளிவாசல்களின் இமாம்-பிலால்களுக்கு ரமழான் ஊக்கத்தொகை:
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் வேண்டுகோளுக்கினங்க, காயல்பட்டினம் நகரத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளின் இமாம் மற்றும் முஅத்தீன்களின் ஊக்கத்துகைக்காக நமது மன்றப்பங்களிப்பாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களின் தனிப்பட்ட அனுசரனையில் ரூபாய் 25,000 இக்கூட்டத்திலேயே வசூலிக்கப்பட்டு அதை தாய்லாந்து காயல் நல மன்றத்தின் மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - மருத்துவக் கையேடு:
கடந்த செயற்குழுவில் திட்டம் தயாரித்தபடி நமது மன்ற மருத்துவ விழிப்புணர்வு குழுவால் தயாரிக்கப்பட்ட நீரிழிவு நோய் (Diabetes), உடல் பருமன் [Obesity], மற்றும் மாரடைப்பு [Heart Attack] குறித்த தகவல்கள் அடங்கிய கையேட்டின் நகல் செயற்குழுவில் சமர்பிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களின் குறிப்புகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்ட பின் இக்கையேட்டின் இறுதி வடிவத்தினை முடிவு செய்து வெளியிட தீர்மானிக்கப்பட்டது..
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ அறிவிக்க, அத்துடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
செய்தித் தொடர்பாளர்,
காயல் நல மன்றம்,
அபூதபீ, ஐக்கிய அரபு அமீரகம்.
படங்கள்:
M.O.அன்ஸாரீ மற்றும் N.M.சுப்ஹான் பீர் முஹம்மத்
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 08:52/19.07.2012] |