குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. எனினும், தமிழகம் முழுக்க வெப்ப வானிலை நிலவி வருவதால், குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் பெருங்கூட்டம் காணப்படுகிறது. காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்களும் பல்வேறு வாகனங்களில் குற்றாலம் சென்று தங்கி, குளித்துவிட்டு வருகின்றனர்.
எனினும், எல்லாக் காலங்களிலும் 130 கிலோ மீட்டர் பயணித்து குற்றாலத்தில் - கூட்ட நெரிசலுக்கிடையே போலிஸ்காரர் அடித்துவிடுவாரோ என்ற அச்சத்துடனேயே குளித்துவிட்டு வருவதென்பது சிரமமானது என்பதால், காயலர்கள் பலர், கோடை காலங்களில், காயல்பட்டினத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருச்செந்தூர் - நாலுமூலைக் கிணறு பகுதியில், காயலர்களுக்குச் சொந்தமான வாவு பழத்தோட்டம், வாவு சுலைமான் ஹாஜி தோட்டம், வாவு காதர் ஹாஜி தோட்டம், விளக்கு தோட்டம், தம்பி தோட்டம், அபு கார்டன், பர்வீன் கார்டன், மினா கார்டன், அப்துர்ரஷீத் ஹாஜியார் தோட்டம், கார்ப்பரேஷன் இஸ்மாஈல் தோட்டம், எச் என் எச் கார்டன், எஸ்.எம்.தோட்டம், பி.எச்.எம்.கார்டன், காயாமொழியிலுள்ள மாஷாஅல்லாஹ் தோட்டம் போன்ற பல்வேறு தோட்டங்களில் குளித்துக் கொண்டாடிவிட்டு வருவது வழமை.
விடுமுறையில் ஓய்வுக்காக ஊர் வரும் காயலர்கள், ஊரிலேயே இருக்கும் காயலர்கள், பொது நிகழ்ச்சிகளை நடத்தி முடித்த பின்னர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்த காயலர்கள் என பல வகைகளில் காயலர்கள் குழுக் குழுவாக இத்தோட்டங்களுக்குச் சென்று வருவர்.
பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே வெயில் வெப்பம் அதிகரித்துவிடுவதால், காயலர்கள் இத்தோட்டங்களுக்கு - உணவுகளை ஆயத்தம் செய்த நிலையிலோ அல்லது உணவு ஏற்பாட்டிற்காக சமையல் காரரை அழைத்துச் சென்றோ அல்லது தோட்டத்திற்குச் செல்வோரே தம் பொறுப்பில் தோட்டத்தில் வைத்து சமைத்தோ உணவுண்டு, ஆசை தீர குளித்துவிட்டு வருவர்.
தோட்டத்திற்குச் சென்றவுடன் குளிப்பு... பின்னர் ஒரு குட்டித் தூக்கம்... மீண்டும் குளிப்பு... இடையிடையே சமையலில் உப்பு - காரம் சரியாக உள்ளனவா என்று சோதித்துப் பார்த்தல்... லுஹர் தொழுகை... மதிய உணவு நேரம் வந்ததும் கூட்டாக அமர்ந்து உணவுண்ணல்... உண்ட மயக்கத்தில் உறக்கம்... உண்ட பிறகும் உறங்காமல் இளவட்டங்களின் குளியல்... மாலையில் டீ - சுண்டல் - வடை பதார்த்தங்கள் என மறக்காமல் அனைத்தையும் அனுபவித்து வரும் காயலர்கள், தோட்டங்களில் கால்பந்து, கைப்பந்து, தண்ணீர் தொட்டியில் நாணயங்களை சிதறவிட்டு பின்னர் தேடச் செய்தல் போன்ற பல்வேறு விளையாட்டுக்களையும் அனுபவித்து விளையாடத் தவறுவதில்லை.
நண்பர்களுடன் தனியாகச் சென்று உல்லாசமாக இருப்பது ஒருபுறம் எனில், குடும்பத்துப் பெண்களுக்காக தனியொரு சிற்றுலாவையே ஏற்பாடு செய்து - தினந்தோறும் வீட்டுப் பணிகளில் ஓய்வற்றிருக்கும் மகளிரையும் மகிழ்வித்து வருகின்றனர்.
ஊருக்குள் அருகருகே இருந்த நிலையிலும் கூட பேச வாய்ப்புக் கிடைக்காத பல சமாச்சாரங்களை தோட்டத்தில் ஆற அமர பேசித் தீர்த்துவிட்டு, வாகனமேறி வீடு வந்து சேர்வது இவர்களுக்கு என்றுமழியா இன்ப நினைவுகளை மனதில் பதியச் செய்துவிடும்.
அவ்வாறு, பல்வேறு காலகட்டங்களில் பல தோட்டங்களுக்குப் பயணித்துச் சென்ற காயலர்களின் அனுபவக் காட்சிகள்தான் இச்செய்தியில் இடையிடையே தரப்பட்டுள்ளது. |