காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் - ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, திருச்சி புனித ஜோஸப் மேனிலைப்பள்ளி அணியை வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது. விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி சார்பில் ஆண்டுதோறும் ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி நினைவு கால்பந்துப் போட்டி, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் எல்.கே.லெப்பைத்தம்பி - எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகளின் இறுதிப் போட்டி 19.07.2012 வியாழக்கிழமை மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், திருச்சி புனித ஜோஸப் மேனிலைப்பள்ளி அணியும் மோதின. ஆட்டத்தின் துவக்கம் முதல் உற்சாகத்துடன் விளையாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி, 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியை வென்றது. எல்.கே. பள்ளி அணியின் வீரர் ஜியாவுத்தீன் தனதணியின் இரண்டு கோல்களையும் அடித்தார்.
ஆட்டத்தின் இடைவேளையின்போது, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பெவிஸ்டன் பேரின்பராஜுக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
ஆட்டம் நிறைவுற்ற பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, திருச்சி டவுன்ஹால் அரசு மேனிலைப்பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினருமான டி.ஏ.எஸ்.உவைஸ்னா லெப்பை தலைமை தாங்கினார். எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, எல்.கே.மேனிலைபள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா வரவேற்புரையாற்றினார்.
பின்னர், விழா தலைவர் டி.ஏ.எஸ்.உவைஸ்னா லெப்பை வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், சிறப்பு விருந்தினரான திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பெவிஸ்டன் பேரின்பராஜ் சிறப்புரையாற்றினார்.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. அவற்றை மேடையில் முன்னிலை வகித்தோர் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர், திருச்சி புனித ஜோஸப் பள்ளி அணிக்கு வெற்றிக்கு முனைந்த அணிக்கான கோப்பை வழங்கப்பட்டது.
பின்னர், வெற்றி பெற்ற காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணிக்கு எல்.கே.லெப்பைத்தம்பி - எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பையை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
நிறைவாக, எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
விழா நிகழ்ச்சிகளை எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் ஆனந்தக் கூத்தன் நெறிப்படுத்தினார்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |