காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜூலை மாதத்திற்கான மாதாந்திர கூட்டம், 19.07.2012 அன்று மதியம் 03.40 மணிக்கு, நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், 01ஆவது வார்டு (ஏ.லுக்மான்) மற்றும் 02ஆவது வார்டு (வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா) உறுப்பினர்கள் தவிர்த்து அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டப் பொருள்:
ஜூன் 28 அன்று நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் - விவாதிக்கப்படாத 17 பொருட்களுடன், மீன் மார்கெட் விஷயம், நகர்மன்ற கூட்டத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர் பாலப்பா ஜலாலி - மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய மனு குறித்து, நகராட்சி மண்டல அலுவலரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் உட்பட 9 புது பொருட்களும், இம்மாத கூட்ட பொருட்களில் (அஜெண்டாவில்) இடம்பெற்றிருந்தது:
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா அறிக்கை:
கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா தான் எழுதி எடுத்து வந்த அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் நகர்மன்ற நடப்புகளை பற்றியும், ஒற்றுமையாக செயல்படவேண்டியதன் அவசியம் குறித்தும் குறிப்பிட்ட அவர், தலைவர் - உறுப்பினர்கள் உறவு பற்றியும் பேசினார். தெரு விளக்கு பொருத்தும் விசயத்தில் 14ஆவது வார்டு உறுப்பினரிடம் - தலைவர் கோபப்பட்டதாக ஏ.ஹைரிய்யா அப்போது கூறினார்.
அதற்கு விளக்கமளித்த நகர்மன்றத் தலைவர், தெரு விளக்குகளை சரி செய்ய, தொடர்ச்சியாக வேலை ஆட்கள் கிடைக்காத காரணத்தால், கால அட்டவணைப்படி (Schedule) தெரு விளக்குகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், இது இவ்வாறிருக்க - வேறு பகுதியில் தெரு விளக்குகள் சரி செய்ய
திட்டமிடப்பட்டுள்ள சூழலில் அதனைக் கருத்திற்கொள்ளாமல், துணைத்தலைவர் - அன்றைய திட்டத்தில் இல்லாத பகுதிக்கு பணியாட்களை அனுப்பியதால் தான் அதனை கண்டித்ததாகவும் கூறினார்.
கடந்த கூட்ட வெளிநடப்பு காரணங்கள் பதிவு:
பின்னர், கூட்டப் பொருளை (அஜென்டா) வாசிக்க ஆயத்தமானபோது, கடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்த காரணங்களை நகராட்சி மினிட் புத்தகத்தில் ஏற்றுவதற்காக தெரிவிக்குமாறு ஆணையர் அஷோக் குமார் கேட்டுக்கொள்ள, கடந்த கூட்டத்தில் வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் வரிசையாக தாம் வெளிநடப்பு செய்ததற்கான காரணங்களைக் கூறினர். அவற்றை ஆணையர் மினிட் புத்தகத்தில் பதிவு செய்துகொண்டார்.
விவாதங்கள் :
அடுத்து, நகராட்சி பேருந்து நிலையம் அருகிலுள்ள 44 சென்ட் காலி நிலத்தை நகராட்சிக்கு அரசே வழங்கும் என்று அறிவித்திருக்க, தலைவி தான் முயற்சித்து பெற்றுத் தந்ததாக விளம்பரப்படுத்தி இருப்பதாக 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கூறினார்.
அதற்கு பதில் கூறிய நகர்மன்றத் தலைவர், 44 சென்ட் நிலத்தை நகராட்சிக்கு திருப்பித் தர அரசு அக்டோபர் 2011இல் கூறிய பிறகும், முன்னாள் ஆணையர் - அரசுக்கு பிப்ரவரி மாதம் எழுதிய கடிதத்தில், 29 சென்ட்தான் உள்ளது என தன்னிச்சையாக தெரிவித்திருந்ததால், அதனைத் தொடர்ந்து, நகராட்சிக்கு பல திட்டங்களை அமல்செய்ய நகராட்சிக்கு 44 சென்ட் நிலம் தேவை என தான் கடிதம் எழுதியதையே குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினார்.
கடந்த கூட்டத்தில் கூட்டப் பொருள் (அஜெண்டா) வாசிக்கப்படாத நிலையிலேயே இன்டர்நெட்டில் அவை வெளியிடப்பட்டதை உறுப்பினர் சுகு கண்டித்து பேசினார்.
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், நகர்மன்றத் தலைவி அரசுத் துறை சார்ந்த அதிகாரிகளை உறுப்பினர்கள் பலருடன் சேர்ந்து சென்று சென்னையில் பார்த்துவிட்டு வந்ததையெல்லாம் “நான் செய்தேன்” என்று கூறுவதாக குற்றஞ்சாட்டினார்.
பின்னர் பேசிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், தான் கூட்டத்தில் பேசாததை பேசியதாக ஒரு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருப்பதையும், தீர்மானங்கள் சரியாக மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டப்படுவதையும் சுட்டிக்காட்டி, இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் தொடராமல் இருக்க வீடியோ பதிவு அவசியம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, காயல்பட்டினத்திற்கென தனி கலாச்சாரம் உள்ளதாகவும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வீடியோ எடுக்கத்தான் வேண்டும் என்று தலைவர் சொன்னால், ஒரு பேச்சுக்கு சினிமா தியேட்டர் கட்ட வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தால் அது சரியாகுமா என்றும், சென்னையில் முஸ்லிம் பெண்கள் பலர் கோஷா முறையைப் பயன்படுத்தாமல் வெளியில் செல்வதை போல், காயல்பட்டினத்திலும் அவ்வாறு கொண்டுவருவீர்களா என்றும் வினவினார்.
பின்னர் பேசிய 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, இக்கூட்டத்தின் கூட்டப் பொருளில் 23ஆவது அம்சமாக இடம்பெற்றிருக்கும் - “பத்திரிக்கையாளர்களை அனுமதித்தல்” குறித்த விவாதத்தின் இறுதியில், மீடியாவை கூட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று மெஜாரிட்டி முடிவானால் அவர்களை இந்தக் கூட்டத்திலேயே வெளியனுப்ப தயாரா என்று கேட்டார்.
தொடர்ந்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், மீடியா ஒருதலைப்பட்சமாக எழுதுவதாகவும், தலைவி தவறே செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாகவும் தெரிவித்தார்.
மீடியாவை வரவே வேண்டாம் என தான் சொல்லவில்லை என்றும், அவர்களை கூட்டரங்கிற்கு வெளியில் அமர்த்தி செய்தியை சேகரிக்கச் செய்யுமாறும் மட்டுமே தான் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு பதில் கூறிய நகர்மன்றத் தலைவர் - நகருக்கு என பல ஊடகங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, ஒரு மீடியா வெளியிடாத செய்தியை மற்றொரு மீடியா வெளியிட வாய்ப்புகள் உண்டு என்றும், தன்னைக் கடுமையான வார்த்தைகளால் சாடியும் ஓர் இணையதளத்தில் பதிவுகள் வெளிவருவதையும் குறிப்பிட்டு, அதனை தான் பெரிதுபடுத்துவதில்லை என்றும், மீடியா பதிவுகளை பொருத்த வரை நாம் அதிகம் வாதிடத் தேவை இல்லை என்றும், பொது வாழ்வு என்று வந்துவிட்டால் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள பழகித்தான் ஆக வேண்டும் என்றும் கூறினார்.
வெளிநடப்பு:
இறுதியில், நகர்மன்றக் கூட்டங்களை வீடியோவில் பதிவு செய்தல், அக்கூட்டங்களில் மீடியாவை அனுமதித்தல் குறித்த தலைவரின் பதில்களை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து,
04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்
ஆகிய ஐவரைத் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்து கூட்டரங்கை விட்டும் வெளியேறிச் சென்றனர்.
கூட்டம் நிறைவுற்ற பின்னர், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் தானும் வெளிநடப்பு செய்வதாகக் கூறி கூட்டரங்கை விட்டும் வெளியேறினார்.
கூட்டத்துளிகள்:
:: நகர்மன்றக் கூட்ட நடப்புகளை - பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க - நாற்காலிகளை ஒவ்வொரு கூட்டத்திற்கும் நகர்மன்றத் தலைவர் ஏற்பாடு செய்வது வழக்கம். அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாற்காலிகள் பார்வையாளர்கள் பகுதியில் போடப்படாமல் இருந்ததை நகர்மன்றத் தலைவர் கண்டித்ததையடுத்து, பார்வையாளர்களுக்கான நாற்காலிகள் உடனடியாக போடப்பட்டது
:: இக்கூட்டத்தில், கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன் உட்பட சிலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்
:: சில தீர்மானங்கள் - கூட்டத்தில் தீர்மானித்தபடி, மினிட் புத்தகத்தில் எழுதப்படவில்லை என உறுப்பினர்கள் பலர் கூறிவருவதை அடுத்து, கூட்ட துவக்கத்தில், அன்றைய கூட்ட பொருட்கள் குறித்த ஒவ்வொரு உறுப்பினரின் ஆதரவு - எதிர்ப்பு நிலையையும் பதியும் முகமாக நகர்மன்றத் தலைவர் - படிவம் ஒன்றை உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கினார்
:: நகர்மன்ற உறுப்பினர்கள் தொலைபேசியில் அழைக்கும்போது தான் பதிலளிக்கவில்லை என்ற குறையைத் தவிர்ப்பதற்காக, உறுப்பினர்கள் மட்டும் தொடர்புகொள்ள - தான் பெற்றுள்ள புது தொலைப்பேசி எண்ணை உறுப்பினர்களிடம் நகர்மன்றத் தலைவர் வழங்கினார்
:: கூட்டம் துவங்க ஆயத்தமான நேரத்தில், மன்ற உறுப்பினர்களுக்கான மாதத் தொகை ரூபாய் 600 வழங்கப்பட்டு, அவர்களிடம் கைச்சான்று பெறப்பட்டது
:: வழமையாக கூட்ட நடப்புகள் புகைப்படங்கள் எடுக்கப்படும். ஆனால் இன்றைய கூட்டத்தில் புகைப்படங்கள் எடுப்பதை சில உறுப்பினர்கள் தடுத்தனர் |