காயல்பட்டினம் நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை, பலர் சட்டத்திற்குப் புறம்பாக மோட்டார் போட்டு உறிஞ்சி எடுப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கக் கோரியும், காயல்பட்டினம் 15ஆவது வார்டுக்குட்பட்ட சீதக்காதி நகர் பொதுமக்கள், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் 20.07.2012 வெள்ளிக்கிழமையன்று (நேற்று) நண்பகல் 12.00 மணியளவில் மனு அளித்தனர்.
இதுகுறித்து நகர்மன்றத் தலைவரிடம் பேசிய அவர்கள், நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், அது ஒரு தவறான செயல் என்பதே முழுமையாக மறக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
குடிநீர் வினியோக அலுவலர்களிடம் இதுகுறித்து முறையிட்டபோது, “உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் வைத்துக்கொள்ளுங்கள்!” என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இக்குற்றச்சாட்டு குறித்து நகர்மன்றத் தலைவர், சம்பந்தப்பட்ட அலுவலர்களை விசாரிக்கையில், தாங்கள் அந்தப் பொருளில் அதைத் தெரிவிக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட காரணத்தால், நேர்மையாக அடிபம்பு அடித்து தண்ணீர் எடுப்போருக்கு தற்காலத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட பெற இயலவில்லை என்றும், பெறப்படாத தண்ணீருக்கு அவர்கள் மாதந்தோறும் கட்டணம் கட்டி வருவதாகவும் சீதக்காதி நகர் பொதுமக்கள் மேலும் தெரிவித்தனர்.
மின் வினியோகம் இல்லாத நேரங்களில் தமது அடி பம்புகளில் தானாகவே தண்ணீர் வருவதாகவும், மின்சாரம் இருக்கும்போது வினியோகிக்கப்படும் தண்ணீரை அடித்து எடுக்க முனைந்தாலும் முடியவில்லை என்றும் அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் ஆவன செய்யப்படும் என, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சீதக்காதி நகர் பொதுமக்களிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், நகராட்சி அலுவலர் பாஸ்கர் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
|