காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி.
இப்பள்ளியில் தினமும் நடத்தப்படும் ஐவேளைத் தொழுகை தவிர, தினமும் காலை - மாலையில், அப்பகுதியைச் சேர்ந்த மீனவ முஸ்லிம் குடும்பத்து பள்ளி மாணவ-மாணவியருக்கு திருமறை குர்ஆனை ஓத பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
வாரந்தோறும் பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று காலை முதல் நண்பகல் வரை இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஹஜ் பெருநாளையடுத்த 3 தினங்களில் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டு, இறைச்சிகள் அனைத்து இல்லங்களுக்கும் பங்கிட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் பள்ளிக்கூடங்களில் புதிய கல்வியாண்டு துவங்கும் ஜூன் மாதத்தில், இப்பள்ளிவாசலில் மார்க்கக் கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு பாடக்குறிப்பேடுகள், பள்ளிப் பை, எழுது பொருட்கள் என பலவும் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ரமழான் 30 தினங்களில் ஏதேனும் ஒரு நாளில் நகரப் பிரமுகர்கள் - பொதுமக்களை வரவழைத்து, இப்பள்ளி வளாகத்தில் - பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை. இந்நிகழ்ச்சியின்போது இப்பள்ளியில் மார்க்கக் கல்வி பயிலும் சிறுவர் - சிறுமியரின் திருமறை குர்ஆன் ஓதல், கலந்துரையாடல் என பல்வேறு சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் அக்குழந்தைகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாட்களின்போது இப்பள்ளியில் மார்க்கக் கல்வி பயிலும் சுமார் 55 மாணவ-மாணவியருக்கு, நகரப் பிரமுகர்கள் - தொழிலதிபர்களின் அனுசரணையுடன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பெருநாள் புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் தலைவராக - காயல்பட்டினம் ஜுவெல் ஜங்ஷன் நகைக்கடை அதிபர் கே.அப்துர்ரஹ்மான், செயலாளராக - காயல்பட்டினம் டேக் அன் வாக் பாதணிக் கடை அதிபர் “முத்துச்சுடர்” ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளராக கோமான் மீரான் ஆகியோரும், துணை நிர்வாகிகளாகவும், செயற்குழு உறுப்பினர்களாகவும் பலரும் சேவையாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியைச் சுற்றி வசிக்கும் மீனவ முஸ்லிம் மக்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள். மார்க்கக் கடமைகள் விஷயத்தில் போதிய கல்வியறிவற்ற இம்மக்களுக்கு தினமும் ஐவேளைத் தொழுகையை முறைப்படி கடைப்பிடிக்கவும், பெண்கள் பர்தா பேணிக்கையுடன் வாழவும், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அவர்கள்தம் பெற்றோர் ரமழான் காலங்களில் ஆர்வத்துடன் நோன்பு நோற்கவும் இப்பள்ளி நிர்வாகிகள் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அதிக நோன்புகள் நோற்கும் சிறுவர் - சிறுமியருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுவதாக இவ்வாண்டு முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் ஐவேளை தொழுகை நடத்துவதற்கும், சிறுவர் - சிறுமியருக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்கும் என மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் ரஹ்மத்துல்லாஹ் என்ற மார்க்கம் கற்ற அறிஞர் ஒருவர் இமாமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். இமாம் - பிலால் - ஆசிரியர் என மூவர் செய்யும் வேலைகளை இவர் ஒருவரே சிரமேற்று செய்து வருகிறார். இவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரூபாய் 8,000 மாத ஊதியமும், தினசரி உணவு வகைக்காக மாதந்தோறும் ரூபாய் இரண்டாயிரமும் செலவழிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்கென வருவாய் தரும் சொத்துக்கள் எதுவும் கிடையாது. பள்ளியைச் சுற்றி வாழ்வோரில் ஒருவர் கூட வசதியானவர் இல்லை. எனவே, இங்கு செய்யப்படும் அனைத்து நலத்திட்டப் பணிகளுக்கும் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களையே இப்பள்ளி நிர்வாகம் பெரிதும் எதிர்பார்த்திருப்பதாக பள்ளி தலைவர் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் முத்துச்சுடர் இஸ்ஹாக் லெப்பை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டு ரமழான் நோன்புக் கஞ்சி வகைக்காக நேரிலும், தொலைபேசியிலும், இணையதளம் வாயிலாகவும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இதுவரை 20 தினங்களுக்கு அனுசரணை பெறப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 10 தினங்களுக்கு அனுசரணை எதிர்பார்க்கப்படுவதாகவும் பள்ளி நிர்வாகிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அனுசரணையளிக்க விரும்புவோர்,
கே.அப்துர்ரஹ்மான் - தலைவர்
(கைபேசி எண்: 0091 97901 35272)
ஹாஜி ‘முத்துச்சுடர்‘ என்.டி.இஸ்ஹாக் லெப்பை - செயலர்
(கைபேசி எண்: 0091 99653 34687)
கோமான் மீரான் - பொருளர்
(கைபேசி எண்: 0091 97903 09149)
ஆகிய பள்ளி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு தமது அனுசரணைகளை வழங்கியுதவுமாறு பள்ளி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இப்பள்ளியில் ரமழான் காலங்களில் தினமும் தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சியை, சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து இல்லங்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் பகிர்ந்தளித்து வருகின்றனர். சுற்றுவட்டாரத்திலுள்ள கிறிஸ்துவ குடும்பத்தினர் பலரும் கூட இக்கஞ்சியை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
நோன்பு நோற்கும் சிறுவர் - சிறுமியர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, பள்ளி நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்தமர்ந்து நோன்பு துறந்து வருகின்றனர்.
நேற்று மாலையில் சிறுவர் - சிறுமியருடன் பள்ளி நிர்வாகிகள் நோன்பு துறந்த காட்சி:-
நோன்பு நோற்ற வரை சோர்ந்திருந்த சிறார், நோன்பு துறந்த பின்னர் மஃரிப் தொழுகை நிறைவுற்றதும், பள்ளியின் வெளிப்புற மணற்பரப்பில் உற்சாகத்துடன் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர்.
இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களைப் பார்வையிட இங்கே சொடுக்குக! |