இம்மாதம் 19ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம் குறித்த செய்தியில், 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா அறிக்கை ஒன்றை வாசித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கையை இணையதளத்தில் வெளியிடக் கோரி - 21.07.2012 அன்று இரவு அனுப்பித் தந்துள்ளார். அறிக்கை வாசகம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் 19.07.2012 வியாழன் மாலை 3:35 மணிக்கு ஆரம்பிக்க ஆயத்தமானது. நான் எனது கருத்தை நன்மையின் நிமித்தம் முற்கூட்டியே அவைக்கு எடுத்துரைத்தேன்.
நம்மனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.
எனதன்பின் நகர்மன்றத் தலைவி, ஆணையர் மற்றும் சக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகேள்!
நாம் அனைவரும் பொறுப்பாளிகள், பொறுப்புக்களை பற்றி கேட்கப்படுவோம் என்பது இறைவனது வசனம் நம்முடையதல்ல ஆகவே தயைகூர்ந்து எக்காரணத்தை கொண்டும் பொறுப்பை தட்டிக்கழித்தல் கூடாது. வெளிநடப்புச் செய்வதால் நாம் எதிரானவர்கள் அல்ல, உள்ளிருப்புச் செய்வதால் நாம் ஆதரவானவர்களும் அல்ல. கருத்துகளை கூற, தவறினை தட்டிக் கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. நாமெல்லாம் இங்கு ஒன்று கூடி பணியாற்றவே மக்களால் பணிக்கப்பட்டுள்ளோம். எனவே தயைகூர்ந்து பணிவுடனே நாமனைவரும் ஒன்று கூடி மக்களின் பிரச்சனைகள் தீர வழியை பார்ப்பதே சிறந்தது. அவ்வாறின்றி 'நான்' என்ற நிலையால் 'நாம்' காணப்போவது எதுவும் இல்லை. வெளிநடப்பு செய்வதால் மட்டுமல்ல பணிபாதிப்பு, பிடிவாதமாக இருப்பதாலும் பிறரின் ஏன் நம்சக உறுப்பினர்களின் கருத்துக்களை செவி சாய்க்காமல் இருப்பதாலும் பணிகள் பாதிக்கப்படும் என்பதே என் கருத்து.
ஐந்தாவது உறுப்பினர் அவர்கள் கூறிய போல் ஏற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் ஏற்பட்டுள்ள தவறுகளை உடனே சரி செய்வது நம் கடமை என்பதை மறந்து விடக்கூடாது. மினிட் புக்கில் என்ன உள்ளது என்பதை கவனிக்காத என்னை நான் பொறுப்பற்றவளாக கருதுகிறேன். ஆகவே உடன் மினிட்புக்கை நான் பார்வையிட விரும்புகிறேன்.
உறுப்பினர் ஜமால் அவர்கள் கூறியதுபோல் குடிநீர் இணைப்பு கொடுக்கும்போதும், பழுது பார்க்கும் பொழுதும் அந்த வார்டு உறுப்பினர்களுக்கு தெரிந்தால், தவறு நடப்பது தடுக்கப்படும் ஆதலால் ஆதரிக்கின்றேன்.
இதுவரை என்மூலம் ஒன்பதாவது வார்டு பகுதிக்காக வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி வளாக துப்புரவு கூட நடக்கவில்லை. எனது பகுதி மக்களின் ஒத்துழைப்பால் இன்று அவ்வேலையை நாங்கள் செய்கிறோம். எனது அப்பாபள்ளித் தெரு சாலை எப்போது போடப்படுமோ? என்ற வேதனை நிலை.
மின்சாரத் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து வரும் சிக்கலாம் 14 வது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா அவர்களிடம் நேற்று ஏற்பட்ட மோதலை எண்ணி வருந்துகிறேன். Vice Chairman மூலம் உதவி பெற்றதால், அவரிடமே அனைத்து உதவிகளை அந்த வார்டுக்கு பெற்றுக் கொள்ளட்டும் என்று கூறுங்கள் என்று தலைவி சொன்னது பொறுப்பற்ற செயலே! என்று கண்டிக்கிறேன்.
ஏனென்றால் புறநகர் மக்களும் காயல்வாசிகளே! அவர்களும்தான் உங்களுக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்துள்ளார்கள். அப்பகுதியின் ஒட்டு மொத்த மக்களுக்கும் நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே உங்கள் பொறுப்பு எனும்போது ஏதோ V.C-யிடம் அவசரத் தேவைக்கு உதவி கேட்டதால், மற்ற உதவிகளை மறுப்பதுபோல் பேசுவது முறையல்ல.
தயைகூர்ந்து ஆணையர் அவர்களே! உங்களுடைய பணியில் யாறும் குறுக்கிடாது பார்த்துக் கொள்ளுங்கள். நகராட்சியின் உள்ளே வரும் மனுக்களுக்கும், பொருட்களுக்கும், வெளியே செல்லும் மனுக்களுக்கும், பொருட்களுக்கும், நீங்களே பொறுப்பு என்பதால், முறைப்படி உங்கள் உத்திரவின்றி எதுவும் நிகழாது பார்த்து கொள்ளுங்கள்.
மேலும் தலைவி அவர்களே! தயைகூர்ந்து விட்டுக் கொடுப்பார் ஒரு போதும் கெட்டுப் போவதில்லை, என்பதை மனதில் வைத்து உங்கள் குடும்ப உறுப்பினர்களாகிய நகர்மன்ற உறுப்பினர்களையும், அலுவலக பணியாட்களையும் ஒன்றாகக் கூட்டி நல்ல தீர்மானங்களும் நல்ல செயல்பாடுகளும் நடக்க உடனே நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு உங்களுடையது. அதற்கு ஒத்துழைக்கும் கடமை எங்களுடையது என்பதை அறுதியிட்டு கூறுகிறேன்.
வீடியோ, ஆடியோ செய்வதில் எனக்கு உடனபாடு இல்லை, ஏனெனில் அவர்கள் எடிட் செய்கிறேன் என்ற பெயரில் சாதக - பாதக நிலைமை யோசிக்காது செய்கிறார்கள். ஒருவருக்கு ஆதரவாக போடும்போது மற்றவர்களுக்கு அது பாதகமாகிறது. எனவே தயைகூர்ந்து உள்நின்று வீடியோ செய்யாமல் தீர்மானத்தில் ஏற்றப்பட்டதை, செயல்பாடானதை, அவை தலைவர், உறுப்பினர்கள் மூலம் தெரிந்து கொண்டு நியாயமானதை வெளிப்படுத்துங்கள். வீண் விமர்சனத்திற்கு என்மை ஆளாக்காதீர்கள்.
இன்று பலமுறை கேட்டுக்கொண்டும் எனது 9வது வார்டு மரைக்கார் பள்ளி தெருவிற்கு லைட் மாட்ட ஆள் ஏற்பாடு செய்யவில்லை. எனவே உடனே அப்பகுதிகளுக்கான விளக்குகளும், மாட்டுவதற்குரிய வயர்மேனும் என்னுடன் அனுப்பி வைக்கும் வரை நான் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன்.
அலுவலர்களின் பொடுபோக்கால் பணி முடங்குவதை தவிர்க்கும் படி தலைவி, ஆணையர் அவர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, 19.07.2012 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் பேசினார்.
மேற்கண்டவாறு தான் பேசி அமர்ந்த பின்னர் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் நகர்மன்றத் தலைவர் தக்க காரணங்கள் எதுவுமின்றி அனைத்து மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் மதிக்காது - உதாசீனப்படுத்தி நிராகரித்துப் பேசியதால், மன்றத்தை விட்டும் வெளிநடப்பு செய்துள்ளதாகவும், இன்டர்நெட்டில் பார்க்கும் - கேட்கும் எந்தச் செய்தியையும் அலசி ஆராயாமல் விமர்சனம் செய்யாதிருக்குமாறும் அவர் தெரிவித்து்ளளார்.
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற வள்ளுவரின் வாக்கும், கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய். என்பதை உணர்ந்தும் செயல்படுமாறு அன்போடும், பணிவோடும் கேட்டுக்கொள்வதாக 09ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா தெரிவித்துள்ளார். |