ரமழான் மாதம் முழுவதும் காயல்பட்டினத்தில் பெரும்பாலும் அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, பள்ளி வளாகத்திலேயே நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
பல பள்ளிகளில், மதிய நேரத்திலோ அல்லது மாலையிலோ - அந்த ஜமாஅத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்காக நோன்புக் கஞ்சி வினியோகமும் செய்யப்படுகிறது. இதனை “ஊத்துக்கஞ்சி” அல்லது “ஊற்றுக்கஞ்சி” என்று கூறுவது வழமை.
இந்த ஊற்றுக்கஞ்சியைப் பெறுவதற்காக, அந்தந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பாத்திரங்களுடன் பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் அங்கே வரிசையில் காத்திருந்து நோன்புக் கஞ்சியை பாத்திரத்தில் பெற்றுச் செல்வர்.
ஆண் குழந்தைகள் இல்லாத இல்லங்களில், சேவை மனப்பான்மையுடன் கூடிய சில சிறுவர்களே பல வீடுகளிலிருந்தும் பாத்திரங்களைப் பெற்றுச் சென்று, அவர்களுக்கு கஞ்சியை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பர்.
ஆனால், இதுபோன்று பாத்திரங்களை எடுத்துச் சென்று கஞ்சி வாங்குவது, பல சரக்குக் கடைக்கு சென்று சாமான்கள் வாங்குவது போன்ற - பெரும்பாலும் அனைத்து வீட்டு வேலைகளும் பெரும்பாலும் வெட்கத்திற்குரிய ஒரு செயலாக இன்றைய சிறுவர்களால் கருதப்பட்டு வருகிறது. எனவே, தற்காலங்களில் நோன்புக் கஞ்சியை அவரவர் வீட்டு பணிப்பெண்கள்தான் பாத்திரங்களில் வாங்கிச் செல்கின்றனர்.
பணிப்பெண்கள் இல்லாத இல்லங்களிலோ அல்லது இதுபோன்ற நவீன நடைமுறையை விரும்பாத குடும்பங்களிலோ, அந்தந்த வீட்டின் பெரியவர்களே பாத்திரங்களைக் கொண்டு வந்து வரிசையில் நின்று நோன்புக் கஞ்சியைப் பெற்றுச் செல்கின்றனர்.
காயல்பட்டினம் மகுதூம் பள்ளியில் நேற்று மதியம் நோன்புக் கஞ்சி வினியோகிக்கப்பட்ட காட்சி:-
|