தாய்லாந்து சென்றிருந்த - ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றத்தின் தலைவரை வரவேற்கும் நோக்குடன், தாய்லாந்து காயல் நல மன்றத்தின் சார்பில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இறையருளால் எமது தாய்லாந்து காயல் நல மன்றத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் 16-07-2012 திங்கள் பின்னேரம் 07.30 மணியளவில், மன்றத் தலைவர் வாவு ஷம்சுத்தீன் ஹாஜி அவர்கள் இல்லத்தில் ஹாஜி வாவு உவைஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
துபாய் காயல் நல மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ.புகாரி அவர்கள் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்து கொண்டார்.
துவக்கமாக ஹாஃபிழ் ழியாவுத்தீன் கிராஅத் ஓத, தாய்நாடு டிராவல்ஸ் எம்.ஏ.முஹம்மது சயீது வரவேற்றுப் பேசினார். அடுத்து மன்றச் செயலாளர் எம்.எஸ்.செய்யது முஹம்மது அவர்கள் உரையாற்றினார்.
தக்வாவின் நிர்வாகிகளில் பலர் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இருந்ததால் 9 மாத இடைவெளிக்குப் பிறகு இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சந்தா வசூலிக்கப்படவில்லை. ஆனாலும் நம் நலப் பணிகளில் ஏதும் குறைவில்லாது வழமை போல் அனைத்து நலப்பணிகளையும் செவ்வனே செய்து முடித்துள்ளோம்.
மேலும் புதிதாக இவ்வாண்டு முதல் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு ரமழான் ஊக்கத் தொகை ஆண்டு தோறும் வழங்க நம் மன்றம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர், ரியாத் மற்றும் அபூதபீ மன்றங்கள் இத்திட்டத்தில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. மேலும் சில மன்றங்களையும் இதில் இணைந்து செயல்பட அவர்களிடம் தொடர்பு கொண்டுள்ளோம்.
நம் மன்றம் பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதின் பலனாக இவ்வாண்டு இக்ராவின் தலைவராக நம் மன்ற தலைவர் வாவு ஷம்சுத்தீன் ஹாஜி அவர்களை அகில உலக காயல் நல மன்றங்களின் கலந்தாலோசனையுடன் இக்ராஃ பொதுக்குழு தேர்வு செய்துள்ளது. அதற்காக உலக காயல் நல மன்றங்களுக்கும், இக்ராஃவின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறப்பு விருந்தினர் ஆடிட்டர் புகாரி காக்கா அவர்களை உள்ளூர் மற்றும் உலக நாடுகளில் பரந்து விரிந்துள்ள அனைத்து காயலர்களும் நன்கு அறிவார். நமதூருக்காகவும், நமதூர் மக்களுக்காகவும் பல நலத் திட்டங்களைச் செய்து வரும் துபாய் காயல் நல மன்றத்தின் சிறந்த தலைவர். நமதூர் மக்களில் பலர் இ.டி.ஏ. நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவதற்கு பெரிதும் உதவியுள்ளார்கள். எல்லோரிடமும் அன்பாகவும், நகைச்சுவையாகவும் கருத்து பேதமையில்லாமலும் பழகுவார்கள். நமதூரின் அடுத்த தலைமுறை தலைவர்களின் வரிசையில் முன்னனியில் இருப்பவர். அவர் நம்முடைய இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்து தந்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, தக்வா மன்ற செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உரையாற்றினார். அடுத்து ஆடிட்டர் புகாரி ஏற்புரையாற்றினார்.
அலுவல் நிமித்தமாக ஒரு சில மணி நேரத்திற்காகவே தாய்லாந்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வளவு குறுகிய நேரத்தில் ஒரு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தையே கூட்டி கௌரவித்தமைக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும், இம்மன்றம் பல திட்டங்களில் ஈடுபட்டு செயல்படுவதைப் பாராட்டியதோடு தற்போது புதிதாக செயல்படுத்த உள்ள இமாம் மற்றும் முஅத்தின் ஊக்கத் தொகையில் இணையும் சம்பந்தமாக துபாய் மன்றத்தில் போய் பேசி பதில் சொல்வதாகவும் கூறினார்.
25 வருடங்களுக்கு முன்பு கே.எம்.டி. வசூலுக்காக மர்ஹீம் ஏ.வி.எஸ்.இப்ராஹீம் ஹாஜி, ஹாஜி காக்கா என்றழைக்கப்படும் சதக்கதுல்லாஹ் ஹாஜி ஆகியோர் துபாய் வந்தபோது இந்த மாதிரியான மன்ற அமைப்பு ஏதும் இல்லை. நம்மூரைச் சார்ந்த ஒவ்வொருவரையும் அவரவர்கள் இருப்பிடங்களுக்குச் சென்று வசூல் செய்ததையும், நம்மூரில் 1993ல் ஏற்பட்ட கலவரத்தின் போதும் அதைப் போன்று வசு+ல் செய்ததையும், அப்போது அங்கிருந்த மௌலவி முஹ்யித்தீன் மதனி அவர்கள் தான் நம்மூருக்கென ஒரு மன்றம் அமைக்க வற்புறுத்தியதாகவும், அதன் பின்னரே துபாய் மன்றம் துவங்கப்பட்டதும், அதன் பின்னர் ஒவ்வொரு நாட்டிலும் மன்றங்கள் துவங்கப்பட்டு, இன்று ஒரு நாட்டிலேயே பல மன்றங்கள் உள்ளதையும், அண்மையில் அபு+தாபி மன்றம் துபையிலிருந்து பிரிந்து சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும், ஒவ்வொரு மன்றமும் போட்டி போட்டுக் கொண்டு நம்மூருக்காக, நம் மக்களுக்காக நிறைய சேவையாற்றி வருகிறார்கள் என்று பல உதாரணங்களுடன் அழகாக எடுத்துரைத்தார்.
இக்ராஃ போன்ற அமைப்பிற்கு இம்மன்றங்களின் உதவியால் நம்மூரில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இன்று நம்மூர் பிள்ளைகள் உயர்கல்வி வரை படிப்பது மட்டுமல்லாமல் நல்ல மதிப்பெண்களும் பெற்று வருகிறார்கள். நல்ல துறைகளில் பணிகளிலும் உள்ளார்கள்.
மருத்துவத்திற்கும், மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகளுக்கும் இம்மன்றங்கள் உதவி செய்து வருகின்றன. வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
எனவே இது போன்ற மன்றங்கள் வளமாக இருக்க வேண்டுமானால் உங்கள் சந்தாக்களையும், நன்கொடைகளையும் தாரளமாக கொடுங்கள். கொள்கைக் கருத்து வேறுபாடுகளை இம் மன்றத்தில் பேசாதீர்கள். ஊருக்குத் தேவை என்று தெரிகின்ற கருத்துக்களைப் பரவலாக பேசுங்கள். தொடர்ந்து பேசுங்கள். மன்றக் கூட்டங்களில் கண்டிப்பாகக் கலந்து கொள்ளுங்கள். ஊரில் கூட்டுறவு அமைப்பில் தொழில் செய்யக் கூடிய சாதக பாதகங்களைப் பற்றி நிறைய பேசுங்கள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சாத்தியமாகலாம் என்று பல நல்ல அறிவுரைகளையும் கருத்துக்களையும் கூறினார்.
பின்னர் கூட்டுறவு தொழில் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விடையளித்தார். இறுதியாக மௌலவி ஷாதுலி ஆலிம் ஃபாஸி அவர்களின் நன்றியுரை மற்றும் துஆ - சலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பாக,
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான். |