தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள்தொகை பதிவேடு தயார் செய்யும் பணி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயார் செய்யும் பணி குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாநகராட்சி ஆணையர் மதுமதி, மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்திற்கு பின் இயக்குநர் எஸ்.கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய மக்கள்தொகை பதிவேடு தயார் செய்யும் பணி வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கவுள்ளது. 5வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படம், மற்றும் 10 விரல் கைரேகை, மற்றும் விழித்திரை ஆகியவை பதிவு செய்யப்படும்.
இதன் மூலம் ஒவ்வொரு நபர்களுக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும். இதில், 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தேசிய அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும். தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இந்த ஆண்டுடன் காலவதியாகிறது. இதையடுத்து பயோமெட்ரிக் கார்டுகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்த ஸ்மார்ட் கார்டு பயன்படும்.
ஸ்மார்ட் கார்டினை பயன்படுத்தி, தனி நபரின் அடையாளத்தை நிருபிக்க, அரசு நலத்திட்ட உதவிகள், சலுகைகளை பெற, வயது மற்றும் பிறந்த தேதியினை நிருபிக்க, வங்கி கணக்குகள் தொடங்க, பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, குடும்ப அட்டை பெறவும், வாகனம் பதிவு செய்யவும், தொலைபேசி, கைபேசி, எரிவாயு இணைப்பு பெற, திருமணம் மற்றும் நிலங்கள் விற்க, வாங்க பதிவு செய்வதற்கு இந்த ஸ்மார்ட் கார்டு பயன்படும்.
ஏற்கனவே, மாவட்டத்தில் அனைத்து நபர்களின் விபரங்களும் 2010 ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்ட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தேசிய பதிவேடு தயார் செய்யும் முகாம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும். இந்த முகாமில் புகைப்படம், கைவிரல் ரேகை, விழித்திரை ஆகியவை பதிவு செய்யப்படும்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |