தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் அலியார் தெருவின் தென்பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல்.
துவங்கி சில நாட்களே ஆகியுள்ளதால், இதுவரை இப்பள்ளிக்கென தனி நிர்வாகம் அமைக்கப்படவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை தலைவர் எஸ்.ஷம்சுத்தீன், துணைத்தலைவர் முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா, செயலாளர் நூர் எலக்ட்ரானிக்ஸ் ஷஃபீக், பொருளாளர் ஜப்பான் சுலைமான், மாவட்ட செயலாளர் லக்கீ கூலர் மக்கீ ஆகியோருடன் இணைந்து, த.த.ஜ. உறுப்பினர்களும், ஆர்வலர்களும் தற்சமயம் இப்பள்ளியை நிர்வகித்து வருகின்றனர்.
தினமும் ஐவேளை தொழுகை நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியில், ரமழான் அல்லாத காலங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு மஃரிப் தொழுகைக்குப் பின் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பும், அவ்வப்போது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஹஜ் பெருநாளையொட்டி த.த.ஜ. நகர கிளை சார்பாக செய்யப்பட்டு வரும் உள்ஹிய்யா ஏற்பாடுகளையும், ரமழான் இறுதியில் ஏழை - எளியோருக்கு வழங்கப்படும் ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகத்தையும் நடப்பாண்டு முதல் இப்பள்ளி வளாகத்திலேயே செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.
ஏழை - எளியோருக்கு உதவும் நோக்குடன் ஜகாத் - ஸதக்கா நிதி சேகரிக்கப்பட்டு, “பைத்துல்மால்” பிரிவும் இப்பள்ளி வளாகத்தில் செயல்படவுள்ளது.
ரமழான் மாதத்தில் தினமும் ஐவேளை தொழுகைக்குப் பின், தேவையைப் பொருத்து அவ்வப்போது சிற்சிறு அறிவுரைகள் அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
தினமும் லுஹ்ர் தொழுகைக்குப் பின் மிஷ்காத் - நபிமொழி விளக்க வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
தினமும் இரவுத் தொழுகையும், அதனைத் தொடர்ந்து, “ஸஹாபாக்களின் தியாகமும், நம் வாழ்வில் பெற வேண்டிய படிப்பினைகளும்” என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.
ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
நடப்பாண்டு ரமழானை முன்னிட்டு, தினமும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி இப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த 40 முதல் 60 ஆண்களும், 20 முதல் 40 பெண்களும் பங்கேற்கின்றனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்போருக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், வடை, கஞ்சி உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகின்றன.
இங்கு கறி கஞ்சி தயாரிக்க நாளொன்றுக்கு ரூபாய் 3,500 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 2,000 தொகையும், பிரியாணி கஞ்சிக்கு ரூபாய் 5,000 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது. |