காயல்பட்டினத்தில் மாட்டிறைச்சி விலையேற்றம் கண்டுள்ளது. ரூ.140க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ மாட்டிறைச்சி, 24.06.2010 தேதி முதல் ரூ.160 என விலையேற்றம் செய்யப்பட்டது.
இறைச்சி வணிகர்களே தன்னிச்சையாக இதுபோன்று விலையேற்றம் செய்வதைத் தடுப்பது, ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் 30.07.2010 அன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இறைச்சி வணிகர்கள் தன்னிச்சையாக விலையேற்றம் செய்யக்கூடாது என்றும், இன்னும் பல கருத்துக்களும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, கடந்த 01.02.2012 அன்று ரூ.20 ஏற்றப்பட்டு, கிலோவுக்கு ரூ.180 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
விலையேற்றம் செய்யப்பட்டு நான்கு மாதங்களே நிறைவுற்ற நிலையில், கடந்த 06.06.2012 அன்று மீண்டும் ரூ.20 விலையேற்றப்பட்டு, தற்போது ஒரு கிலோ மாட்டிறைச்சி ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதிகளவில் பணம் கொடுத்தே மாடுகளை தாங்கள் கொள்முதல் செய்வதால், இந்த விலையேற்றம் தவிர்க்க இயலாதது என்று மாட்டிறைச்சி வணிகர்களால் தெரிவிக்கப்பட்டாலும், நடுத்தர மற்றும் ஏழை பொதுமக்கள் மலிவு விலையைக் கருத்திற்கொண்டு மாட்டிறைச்சியையே பெரிதும் விரும்பி வாங்கும் நிலையிருக்க, இதுபோன்று நினைத்த நேரத்தில் விலையேற்றம் செய்து வருவது மாட்டிறைச்சி வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. |