டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் பலியானதாக அறியப்படுகிறது. இந்த ரெயிலில் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் குறித்த தகவல் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
டில்லியிலிருந்து சென்னை நோக்கி தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயில் நேற்றிரவு 10.00 மணிக்கு புறப்பட்டு, இன்று அதிகாலை 04.14 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் விதயபாலம் தொடர்வண்டி நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து சென்னை நோக்கி ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதன் S11 பெட்டியில் தீ கொளுந்து விட்டெரிந்தது.
பயணியர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நிலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 25 பயணியரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. 20 பயணியர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பெட்டியில் மொத்தம் 72 பயணியர் பயணித்துள்ளதால், எஞ்சிய பயணியர் நிலை என்ன என்பது குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்காமல் இருந்தது.
தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில் மேலும் பலரது கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட இந்த ரெயில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும், தீ எரிவதைக் கண்ணுற்ற பயணியர் சிலர் ஓடும் ரெயிலிலிருந்து வாசல் வழியாக கீழே குதித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
நிகழ்விடத்தில் நெல்லூர் ஆட்சியர் ஸ்ரீதர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தெற்கு ரயில்வே அதிகாரிகளும் நெல்லூர் விரைந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட ரெயிலில் பயணித்தோரின் உறவினர்களுக்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து நெல்லூருக்கு சிறப்பு ரெயில் இன்று மதியம் 01.30 மணிக்கு புறப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில், தீ விபத்து ஏற்பட்ட S11 பெட்டியில், 51ஆவது இருக்கையில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த வி.எஸ்.எம்.டி.முஹ்யித்தீன் என்பவர் (வயது 40) தட்கல் முறையில் பயணச்சீட்டு பதிவு செய்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து சென்னை நோக்கி பயணித்துள்ளார். இவர் குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தீக்காயப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பட்டியல் தொடர்வண்டித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த பயணியின் பெயர் இடம்பெறவில்லை.
இவரது நிலை குறித்து அறிவதற்காக, விஜயவாடாவிலிருந்து நெல்லூர் நோக்கி உறவினர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகைப்படங்கள்:
தி ஹிந்து
உள்ளூர் துணைத் தகவல்கள்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன். |