காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில், காயிதேமில்லத் நகரில் - கே.எம்.டி. மருத்துவமனையையொட்டி அதன் தென்புறத்தில் - புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டு, 07.03.2011 அன்று திறப்பு விழா கண்டது பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளிவாசல்.
ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூ தல்ஹா துணைத்தலைவராகவும், ஹாஜி ஏ.கே.கலீல் என்ற ஜெஸ்மின் கலீல் செயலாளராகவும், ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் துணைச் செயலாளராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் ஷெய்கு அலீ மவ்லானா இப்பள்ளியின் இமாமாகப் பணியாற்றி வருகிறார். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் - சிறப்புத் தொழுகையையும் இவரே வழிநடத்தி வருகிறார்.
பல்வேறு ஊர்களில் தொழுகையை வழிநடத்தும் இமாமாகப் பணியாற்றியுள்ள இவர், இவ்வாண்டுடன் 53 ஆண்டுகளாக ஒரு வருடம் கூட இடைவெளியின்றி ரமழானில் ஆண்டுதோறும் திருமறை குர்ஆனை முழுமையாக ஓதி தொழுகையை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளியின் பிலாலாக, காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த அபூ தாஹிர் பணியாற்றி வருகிறார்.
இப்பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் தொழுவதற்காக தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இது பள்ளியுடன் இணைந்த பெண்கள் தைக்காவாக கட்டி முடிக்க நிர்வாகிகளால் திட்டமிடப்பட்டுள்ளது.
நிர்வாகிகளின் பொறுப்பிலேயே இப்பள்ளியில் நடப்பாண்டு நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. தினமும் மாலையில் வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை இப்பள்ளி அமைந்துள்ள காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த சுமார் 50 முதல் 60 குடும்பத்தினர் வரை பெற்றுச் செல்கின்றனர்.
தினமும் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 40 முதல் 60 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், இருவகை வடை, நோன்புக் கஞ்சி உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளிவாசல் திறக்கப்படுவதற்கு முன்பு வரை, கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்திலுள்ள கே.எம்.டி. பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வுகள் சிறிய அளவில் நடைபெற்று வந்தது. தற்போது இப்பள்ளி இயங்கத் துவங்கியதையடுத்து, கே.எம்.டி. பள்ளிவாசலில் நோன்பு துறப்பு நிகழ்வுகள் எதுவும் நடைபெறுவதில்லை. எனினும், அப்பள்ளியில் பணியாற்றும் ஓரிருவருக்கு பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியிலிருந்தே நோன்புக் கஞ்சி உள்ளிட்ட இஃப்தார் - உணவுப் பதார்த்தங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. |