அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ப்ளேனோவில் (Plano) காயலர்கள் உள்ளிட்ட தமிழ் / இந்திய மற்றும் பிற நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் மக்கள் தொகையிலும் மற்றும் நிலப்பரப்பிலும் இரண்டாவது இடத்திலுள்ள மிகப் பெரிய மாநிலமாகிய டெக்சாஸில் அமைந்துள்ளது இந்த அழகான அமைதியான சிட்டி - ப்ளேனோ. கிட்டத்தட்ட 10,000 முஸ்லிம்கள் வசிக்கும் இந்நகரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பள்ளிகளுள் ஒன்றுதான், இஸ்லாமிக் அசோசியேசன் ஆப் காலின் கவுண்டி (IACC) என்று அழைக்கப்படும் இந்த ப்ளேனோ பள்ளி.
பரந்து விரிந்த அமெரிக்காவில் இந்த மாநிலத்தில்தான், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அதாவது காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 11 குடும்பத்தினர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். அதிலும் இந்த ப்ளேனோ சுற்றுவட்டாரத்திலேயே ஏழு குடும்பங்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெறும் ஐம்பது பேர் தொழும் சிறிய ஷாப்பிங் சென்டர் – ஸ்டோரில் முஸல்லா - தொழுமிடமாகத் துவக்கப்பட்ட இந்த IACC, இன்று 4.59 ஏக்கர் நிலப்பரப்பில் - 12,000 சதுர அடி அடியில் - 8 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 44 கோடி ரூபாய்) செலவில் மூன்று பாகங்களாகக் கட்டி முடிக்கப்பட்டு, மிகப் பிரம்மாண்டமான பள்ளியாக காட்சியளிக்கிறது.
பள்ளியை கட்டுவதற்கான நிலம், தனி பார்க்கிங் லாட்கள் மற்றும் பள்ளியை கட்டுவதற்கான அனைத்து செலவுகளும், இங்கு வசிக்கும் முஹல்லாவாசிகளிடமே நிதியாக திரட்டப்பட்டு (Fund Raising) செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சிறப்பம்சம்.
இப்பள்ளியில் சுமார் 3000 பேர் வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைகளிலும், 2000 பேர் வரை ரமழான் - தராவீஹ் சிறப்புத் தொழுகையிலும் பங்கேற்று வருகின்றனர்.
மாணவர்களுக்கான பகுதி நேர இஸ்லாமிய மற்றும் குர்ஆன் மனன வகுப்புகள், நூலகம், பன்னோக்கு அரங்கம், மருத்துவம் / சட்ட ஆலோசனைகளுக்கான இலவச கிளீனிக்குகள் என நவீன கால தேவைகளுக்கேற்ற வசதிகளைக் கொண்ட இந்த பள்ளி, தொழுகைக்கான இடமாக மட்டுமின்றி, அழைப்புப் பணி (தஃவா), ஏழை-எளியோருக்கு இலவச உணவு (Food Bank) மற்றும் எண்ணற்ற சமுதாயச் சேவைகளை முன்னிறுத்தி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
28.07.2012 சனிக்கிழமையன்று ப்ளேனோ பள்ளியில், தமிழ் முஸ்லிம்களின் அனுசரணையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில், காயலர்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்:-
இப்பள்ளியின் செயற்பாடுகள் குறித்த மேலதிக விபரங்களை, www.planomasjid.org என்ற பிரத்தியேக இணையதளத்தில் காணலாம்.
தகவல்: சாளை முஹம்மத் முஹ்யித்தீன், டெக்சாஸ், வட அமெரிக்கா. |