தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், காயல்பட்டினம் லோக்கல் ஃபண்ட் ரோட் எனப்படும் எல்.எஃப். வீதியில், பேருந்து நிலையத்தின் எதிரில், புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு மைதானமான ஐக்கிய விளையாட்டு சங்கத்தையொட்டி அதன் மேற்புறத்தில் அமைந்துள்ளது மஸ்ஜித் அஷ்ஷெய்க் ஹுஸைன் என்ற செய்கு ஹுஸைன் பள்ளி.
இப்பள்ளியின் தலைவராக எஸ்.ஐ.அலீ அக்பர், செயலாளராக செய்கு ஹுஸைன், துணைச் செயலாளராக கே.எம்.யூஸுஃப், பொருளாளராக கே.எம்.இஸ்மத் ஆகியோர் பொறுப்பேற்று சேவையாற்றி வருகின்றனர்.
காயல்பட்டினம் தீவுத் தெருவைச் சார்ந்த ஹாஜி என்.டி.ஷெய்கு சுலைமான் பள்ளியின் இமாமாகப் பணியாற்றி வருகிறார். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் - சிறப்புத் தொழுகையையும் இவரே வழிநடத்துகிறார். பள்ளியின் பிலாலாக, காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாமித் என்பவர் பணியாற்றி வருகிறார்.
மிகவும் பழுதடைந்த நிலையிலிருந்த இப்பள்ளியை புனர்நிர்மாணம் செய்வதற்காக பள்ளி நிர்வாகிகளால் தொடர்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கட்டிடப் பணிகள் நிறைவுற்றதையடுத்து, 16.05.2011 அன்று புதுப்பிக்கப்பட்ட இப்பள்ளி திறப்பு விழா கண்டது.
நடப்பாண்டு ரமழான் கஞ்சி ஏற்பாடுகள், பள்ளியின் பொருளாளர் கே.எம்.இஸ்மத் ஒருங்கிணைப்பில் குழுவினரால் செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், தினமும் கறி கஞ்சிக்கு ரூபாய் 2,250 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 1,500 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது. அன்றைய தினத்தின் ரமழான் சிறப்பு ஏற்பாடுகளுக்கான அனைத்து செலவினங்களும் இத்தொகைக்குள் அடக்கம்.
இப்பள்ளியில் ஊற்றுக் கஞ்சி வினியோகிக்கப்படுவதில்லை. தினமும் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பள்ளி சுற்றுப்புறத்தைச் சேர்ந்தவர்கள் - பேருந்து பயணியர் - கடை வீதிக்கு வந்தோர் என 20 முதல் 50 பேர் வரை பங்கேற்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கஞ்சி, வடை உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.
இப்பள்ளியில் நேற்று மாலையில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
கடந்த 2009ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி ஊர்வலம் இப்பகுதி வழியே வந்தபோது, இப்பள்ளியில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நேரத்தில், ஊர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தலைமையேற்று கவனித்து வந்த - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) முஹம்மத் கவுஸ் கான் கோரி, இஃப்தார் நேரம் நெருங்கியபோது, இப்பள்ளியில் மக்களோடு அமர்ந்து நோன்பு துறந்தார்.. காயல்பட்டினத்தில் நடைபெற்ற பல்வேறு பொதுநல நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ள அவர் கடந்த 24.10.2011 அன்று மாரடைப்பால் காலமானது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களைக் காண இங்கே சொடுக்குக! |