சிங்கப்பூர் காயல் நல மன்றம் உள்ளிட்ட, இந்திய முஸ்லிம்களின் 16 அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், சிங்கப்பூர் நாட்டின் துணைப் பிரதமர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சி குறித்து, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றம் உள்ளிட்ட, சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய முஸ்லிம்களின் 16 அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பில் 03.08.2012 அன்று மாலையில், சிங்கப்பூர் பென்கூலன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நாட்டின் துணைப் பிரதமரும், தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறையை ஒருங்கிணைக்கும் அமைச்சருமான டியோ ச்சீ ஹியான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பேரீத்தம்பழம், கஞ்சி, வடை வகைகள், குளிர்பானம், பழ வகைகள், பிரியாணி, கடற்பாசி உள்ளிட்ட பதார்த்தங்கள் அனைவருக்கும் இஃப்தார் - நோன்பு துறப்பு உணவாகப் பரிமாறப்பட்டது.
இஃப்தார் நிகழ்ச்சியின் நிறைவில், இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் 16 அமைப்புகளின் நிர்வாகிகளும், சிறப்பு விருந்தினரான சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
சென்ற ஆண்டு இதுபோன்று நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், சிங்கப்பூர் நாட்டின் அப்போதைய அதிபர் எஸ்.ஆர்.நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |