பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தல், ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தல், காயல்பட்டினம் நகராட்சியின் 14ஆவது வார்டு பாஸ் நகரில் குடிநீர் - தெரு விளக்கு - சாலை வசதி குறைபாடுகளுக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, காந்தி மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில், 04.08.2012 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை - காயல்பட்டினம் பாஸ் நகரில் உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்பட்டது.
அக்கட்சியின் திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் ஏ.ஜெயமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.அலாய்வாஸ் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.முருகேசன் வரவேற்புரையாற்றினார்.
அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஆர்.பாஸ்கர் உண்ணாவிரதத்தைத் துவக்கி வைத்தார். மாலையில் நிகழ்விடம் வந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் காந்தி மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து ஆவன செய்வதாகக் கூறி, உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தார்.
காந்தி மக்கள் கட்சியின் நிறுவன தலைவரும், மக்கள் பிரதிநிதி வார இதழின் ஆசிரியருமான ஜி.பி.எஸ்.கார்த்திக், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.சிவசுப்பிரமணியம், ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் எம்.ராமசுந்தரம், ஆழ்வை ஒன்றிய மாணவரணி செயலாளர் எம்.ராம்குமார், இராணுவ முன்னாள் வீரர் என்.க்ரிஸ்டோஃபர், டி.சாந்தம், எம்.ரவி, ஆர்.முத்து ராமகிருஷ்ணன், எம்.ஷாகுல் ஹமீத் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
[செய்தி திருத்தப்பட்டது @ 13:19/06.08.2012] |