ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) பொதுக்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 40,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கருணையுள்ள அல்லாஹ்வின் நல்லருளால் நமது ஜக்வா அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 29.07.2012 ஞாயிற்றுக்கிழமை - ரமழான் பிறை 08 அன்று, மன்றத் தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் அவர்கள் தலைமையிலும், ஹாஜி எஸ்.எல்.புகாரீ மவ்லானா, மவ்லவீ ஏ.எச்.எம்.கல்ஜீ ஃபாஸீ ஆகியோர் முன்னிலையிலும், ஹாஜி எம்.எம்.ஜஹாங்கீர் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.மஹ்மூத் லெப்பை கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அடுத்து, கூட்டத்தின் நோக்கம் குறித்து மன்றத் தலைவர் அழகுற எடுத்துக்கூறினார். பின்னர், மன்றச் செயலாளர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூ தாஹிர் - மன்றத்தின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை சமர்ப்பித்து, அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நிறைவேற்றப்பட்டமை குறித்து விளக்கிப் பேசியதுடன், மன்றத்தின் ஆண்டறிக்கையையும் சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன - அல்ஹம்துலில்லாஹ்!
தீர்மானம் 1 - நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு:
ஜக்வா அமைப்பின் சார்பில் நடப்பாண்டு கல்வி உதவித்தொகையாக - ஒரு மாணவருக்கு ரூபாய் 5,000 வீதம், நான்கு மாணவர்களுக்கு ரூபாய் 20,000 தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதுபோல, மருத்துவ உதவித்தொகையாக - ஒரு பயனாளிக்கு ரூபாய் 2,000 தொகைக்கு மிகாமல், மொத்தம் ரூபாய் 20,000 தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மருத்துவ உதவிக்காக விண்ணப்பிக்கும் பயனாளிகளின் விண்ணப்பங்களை விசாரித்து முடிவெடுப்பதற்கு,
(1) ஹாஜி பி.எஸ்.ஏ.முஸ்தஃபா கமால்
(2) மவ்லவீ எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ
(3) ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூ தாஹிர்
(4) ஹாஜி எஸ்.எம்.காதர்
(5) ஜனாப் ஏ.எம்.அப்துர்ரஹ்மான்
(6) ஹாஜி எம்.எல்.ஸதக்கத்துல்லாஹ்
ஆகியோரடங்கிய குழுவிற்கு இக்கூட்டம் அங்கீகாரம் வழங்கியது.
தீர்மானம் 2 - பேருந்து - தொடர்வண்டி கால அட்டவணைப் பலகை நிறுவல்:
காயல்பட்டினத்தின் 3 முக்கிய சந்திப்புகளில், ஜக்வா அமைப்பின் சார்பில் பேருந்து மற்றும் தொடர்வண்டி கால அட்டவணைப் பலகையை நிறுவவும், அதற்கான முழு செலவினத் தொகையையும் அமைப்பின் சார்பிலேயே செய்திடவும் தீர்மானிக்கப்பட்டதோடு, இத்திட்டத்தைப் பொறுப்பேற்று செயல்படுத்திட,
(1) ஹாஜி அலாவுத்தீன்
(2) ஹாஜி எம்.எஸ்.ஹஸன் நெய்னா
(3) ஜனாப் ஓ.எல்.ஷெய்க் அப்துல் காதிர்
(4) ஜனாப் எம்.ஏ.கே..அபூ தாஹிர்
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - இக்ராஃ புதிய தலைவருக்கு வாழ்த்து:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பாக செயல்பட்டு வரும் காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ், நடப்பாண்டிற்கான புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களுக்கு இக்கூட்டம் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், அவர்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சுகிறது.
தீர்மானம் 4 - ஹாங்காங் பேரவை புதிய செயற்குழுவிற்கு வாழ்த்து:
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழுவிற்கு இக்கூட்டம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், அவர்களின் சீரிய பொறுப்பின் கீழ் - அம்மன்றத்தின் நகர்நலப் பணிகள் சிறக்க வாழ்த்துகிறது.
தீர்மானம் 5 - ஆக.05இல் ஸஹர் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி:
நமது ஜக்வா அமைப்பின் சார்பில், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 05.08.2012 அன்று ஜெய்ப்பூரில் வாழும் காயலர்கள் அனைவருக்காகவும் அதிகாலையில் ஸஹர் - நோன்பு நோற்பு, அன்று மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மவ்லவீ எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஜக்வா அமைப்பின் சார்பாக,
மவ்லவீ M.A.அப்துல் வதூத் ஃபாஸீ,
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம். |